சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே.... உங்கள் கவனத்திற்கு....


சபரிமலைக்கு ஆண்டுதோறும் மாலையணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.  நாடி வரும் பக்தர்களுக்குக் கோடி நன்மைகளை வாரி வழங்குபவர் அன்னதானப் பிரபு, அச்சன் கோயில் அரசன், ஐயப்ப சுவாமி.  ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளிலிருந்தே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது ஐயப்ப பக்தர்களின் வழக்கம்.

ஐயப்பனை தரிசிக்க கன்னிசாமிகள் தொடங்கி, பல வருடங்களாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் குருசாமிகள் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணியத் தொடங்கியுள்ளனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம் .

சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக முத்திரை மாலையான 108 மணிகள் கொண்ட துளசிமணி மாலையை வாங்கி, ஏதேனும் ஒரு கோயிலில், குருஸ்வாமியின் திருக்கரங்களால், அணிந்து கொள்ள வேண்டும்.

குருஸ்வாமி இல்லாத  பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து மாலை அணிந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். அணியும் முன், அந்த மாலையை, பூஜையறையில் புனிதமான  பசும்பாலில் அமிழ்த்தி ஊறவைக்க வேண்டும். சபரிமலைக்கு மாலை அணிந்துகொள்ளும் சாமிகள் கறுப்பு நிற. அரைஞாண் கயிறு, கையிலும் கழுத்திலும் கறுப்பு நிறக் கயிறு  ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 

கறுப்பு, நீலம், காவி, பச்சைநிறத்தில் அமைந்த மேல் ஆடைகளையும் வேஷ்டிகளையும் உடுத்தலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள். ஐயப்பனை மனதார நினைத்து, மாலை அணிந்த பின் 48 நாட்கள் கடுமையான பிரம்மசர்ய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம் என்பதால், தினமும் காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, 'ஐயப்பன் அஷ்டோத்ரம்' படித்துவர வேண்டும். 

வீட்டின் அருகில் நடக்கும் ஐயப்ப பூஜைகளில் கலந்துகொண்டு  சேவை செய்யலாம். 'அன்னதானம்' தரும் நிகழ்வுகளிலும் ஐயப்பமார்கள் உதவி செய்வது நல்லதொரு பாக்கியம். மாலை அணிந்த எந்த பக்தர்கள் வீட்டிலும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் தரும் பட்சத்தில் சாப்பிடலாம். விரத காலத்தின்போது குடிப்பழக்கம், செருப்பு அணிவது, அசைவம் உண்ணுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புகைப்பிடித்தல், சவரம் செய்வது, முடிவெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவரின் இறப்பு, வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்வுகளில்  மாலை அணிந்தவர்களும், மாலை அணிந்தவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களும் கலந்துகொள்ளக் கூடாது. 

இரவில் தூங்கும்போது மெத்தை, தலையணைகளைப் பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் தூங்கக் கூடாது.  கன்னிசாமிகள் மலைக்குக் கிளம்பும்போது, அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜைசெய்து, ஏழைகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனிதரூபத்தில் கலந்துகொள்வார் என்பது ஐதீகம்.  

ஒரு மண்டலம் முடித்து, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், தங்களின் குருசாமியின் தலைமையில் ஏதேனும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து, ஐயப்பனை வணங்கி இருமுடிகட்டிக்கொண்டு மலைக்குக் கிளம்பலாம்.  சபரிமலைக்குக் கிளம்பிச்செல்கையில், எரிமேலியில் 'பேட்டைத்துள்ளல்',  பம்பையில் விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, அன்னதானம் கொடுக்கும் பணிகளில் கன்னிசாமிகள் தவறாமல் பங்குகொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால் அய்யன் அருள்  உண்டு என்றும்! பயம் ஒருபோதும் இல்லை.  தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பின் இருமுடிக்கு பூஜை செய்து அதன் பிறகுதான் மாலை கழற்ற வேண்டும். இடையிலேயே கழற்றக்கூடாது. 



Leave a Comment