திருப்பதி மலையப்ப சுவாமிக்கு ஏழு டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றைய தினம் மலையப்ப சுவாமிகளுக்கு ஏழு டன் மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
முன்னதாக பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் இருந்து வண்ண மலர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு தோட்டக்கலைத் துறை இயக்குநர் சினிவாசலு தலைமை வகித்தார். பின்னர் சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக வேத பண்டிதர்கள் சதுர் வேதபாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, மல்லி, முல்லை, தாழம்பூ, ரோஜா, தாமரை உள்ளிட்ட 14 வகையான மலர்களை கொண்டு துளசி, மருவம், வில்வம் போன்ற இலைகள் என 7 டன் மலர்களை கொண்டு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலின் உட்புறம், வெளிப்புறத்தில் பல்வேறு மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
Leave a Comment