பரிகாரம் செய்ய உகந்த குரு தலங்கள்
பட்டமங்கலம் :
ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
தேவூர்:
கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
தக்கோலம்:
அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலைநயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.
குருவித்துறை:
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை. இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.
திரிசூலம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று. அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள்.
இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.
மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி, திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
திங்களூர்:
திங்களூரில் கருவறையை சுற்றிய பிரகாரலத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும். சிதம்பரத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.
பூந்தோட்டம்:
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்துதான் அருள்பாலிப்பார். ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரஸ்வாமி ஆலயத்தில் குருபகவான் பன்னிரண்டு ராசி மண்டலங்களின் மேல் வீற்றிருக்கிறார். இந்த ராசி மண்டல குருபகவான் ‘பரமகுரு‘ என சிறப்பு பெற்றவர். இவரை வணங்கினால் திருமணத்தை தடை நீங்கி, நல்ல மனைவி, புத்திர பாக்கியம், பெரும்புகழ், பெருஞ்செல்வம் ஆகியவை கிட்டும். இவருக்கு புத்திரகாரன் என்ற பெயரும் உண்டு. இந்த குருபகவானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் எல்லாவிதமான நன்மைகளும் கிட்டும் என்று ஸ்ரீஅகஸ்திய நாடி வாக்யம் கூறுகிறது.
ஓமாம்புலியூர்:
சிதம்பரத்திற்கு தென்மேற்கில் 30 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது. இறைவன்: ஸ்ரீதுயர்தீர்த்தநாதர், இறைவி: பூங்கொடி நாயகி, இது இறைவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் உமையம்பிகைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த திருத்தலம்.
திருலோக்கி:
கும்பகோணம் - திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி காளை மீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. குரு பரிகாரத்திற்கு ஏற்றது.
மயிலாடுதுறை:
மயூர நாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி - குரு வழிபாட்டுக்கு ஏற்ற தலம் ஆகும்.
கும்பகோணம் :
மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம். குரு பரிகாரத்திற்கு ஏற்றது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இது ஒன்று.
Leave a Comment