கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.
14-8-2017 (கிருஷ்ண ஜெயந்தி)
கம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.
7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.
எட்டாவதாக கிருஷ்ண பகவான் தேவகியின் கருவில் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் இருந்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நீங்களோ, பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கூறினீர்கள். அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்துள்ளேன்.
இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது. நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். கம்சனிடம் இருந்து உங்களை விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.
கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை உலகம் முழுவதும் மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த புண்ணிய நாளில் கிருஷ்ணரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மேலும் அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது சிறப்பு தரும். அதனை கண்ணன் நள்ளிரவில் வந்து ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம். இதற்காகவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை அறை வரை, கண்ணனின் கால் தடங்களை பதித்து வைப்பார்கள். பகலில் விரதம் இருந்து, இரவில் வழிபாட்டை முடித்தபின் உணவு உண்பது உத்தமம். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து பஜனை செய்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணியவை ஈடேறும்.
Leave a Comment