முனிவர்கள், தேவர்கள் கடைப்பிடித்த விரதம்.....
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்” என்பது ஆன்றோர் வாக்கு. முருகனுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதமே தலைமையானது. ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர். இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்!
உண்மைதான். அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்ந்து போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.
குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழியாகக் கூறுவார்கள். சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
விரத பலன்:
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.
சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம். கேளாமல் மறந்ததையும் பெறலாம். கேட்ட அளவைவிட கூடுதலாகவும் பெறலாம். எனவே சஷ்டி விரதத்தால் பெறக்கூடிய பயன்களுக்கு ஓர் அளவில்லை.
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6).
6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.
16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.
Leave a Comment