சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... 


ஷீரடி சாய்பாபா கோவிலும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திறப்பு குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளது.

அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் கட்டண பாஸ்களும் திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு வழிகளிலும் இந்த டோக்கனை பெற்று சாய் பாபாவை தரிசனம் செய்யலாம். புதிய முடிவின்படி, ஒரே நேரத்தில் ஆயிரத்து 150 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், ஆர்த்தியில் 90 பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், நுழைவு வாயில் 2ல் மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும். வெளியேறும் பக்தர்கள் 4 மற்றும் 5 வது வாயில்கள் வழியாக கோவிலில் இருந்து வெளியேறலாம். தியான மண்டபம், பராயான் காஷ் ஆகிய மண்டபங்கள் மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால், ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு நீண்ட தொலைவில் இருந்து செல்லும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொண்ட பின்னர் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களை ஷீரடிக்கு அழைத்துச் சென்றாலும், அவர்களால் பாபாவை தரிசிக்க முடியாது.



Leave a Comment