சதுர்த்தி தினமான இன்று சொல்ல வேண்டிய விநாயகர் துதி
உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.
கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.
தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.
திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.
உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.
வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.
நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.
'பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.
Leave a Comment