பிரசாதமாக மாறும் ஈசனின் திருமேனி அன்னம்....
அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு 70 விதமான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யலாம் என்கின்றன ஆகமங்கள். அவற்றில் சிவரூபமான அன்னத்தால் அபிஷேகித்தால் உணவுப் பஞ்சமே ஏற்படாது; உணவால் வரும் நோய்கள் அணுகாது, அன்ன தோஷம் போன்றவை விலகும் என்கின்றன ஞானநூல்கள்.
பஞ்ச பூதங்களின் தலைவனான ஈசன், பஞ்ச பூதங்களால் பக்குவப்படுத்தப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் செய்விக்கப் படும்போது மகிழ்கிறான். பசிப்பிணியை அகற்றும் மகத்தான சேவை அன்னதானம். அதை ஆண்டவன் பெயரில் செய்யும் தலையாய விழா இந்த ஐப்பசி அன்னாபிஷேகம். `கொடுத்து உண்' என்ற உயரிய நோக்கத்தைக் கொண்ட இந்த விழா, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்மால் கொண்டாடப்படுகிறது என்பதை திருமுறைகள் கூறுகின்றன.
ஐப்பசி மாதத்தில் அசுவினி நட்சத்திரத்துக்குரிய அன்னத்தால் ஈசனை அபிஷேகம் செய்தால், செய்தவர் குடும்பம் சகல நன்மை களும் அடையும் என்கின்றன ஜோதிட நூல்கள். அன்ன சூக்தத் தில் `ஈசனே அன்னத்தின் வடிவில் உறைகிறார் என்றும், அன்னத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவர் தலைமுறை என்றுமே குறையில்லாது வாழும்' என்றும் கூறுகிறது.
முழுக் கலையையும் கொண்ட சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து ஆற்றல் மிக்க தன் ஒளியைப் பொழியும் நாள் ஐப்பசி பெளர்ணமி. இதனால் நம் மனோசக்தி பன்மடங்கு பெருகும்; நினைவாற்றல் மேம்படும். அற்புதமான இந்த நாளை விழாவாக்கி, அன்று மக்கள் பரமனை வழிபட்டுப் பயனடையும் விதம் நம் முன்னோர் கொண்டாடியது வியப்பான விஷயம்.
அன்னாபிஷேகத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, எந்த அபிஷேகம் என்றாலும் அந்த அபிஷேகக் கோலத்தில் ஸ்வாமியின் தரிசனம் 24 நிமிடங்கள் (1 நாழிகை) மட்டுமே இருக்கவேண்டும் என்பது ஆகம விதி.
சிற்சில இடங்களில் 48 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அதற்கு மேல் அபிஷேகக் கோலம் நீடித்திருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அன்னாபிஷேகக் கோலம் மட்டும் ஒன்றரை மணி நேரம் வரை கூட அப்படியே இருக்கலாம் என்பது விசேஷம்.
வெகுநேரம் ஈசனின் திருமேனியில் தங்கியிருந்த அன்னம் சிறப்பானப் பிரசாதமாக மாறுகிறது. இதனால் இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய்கள் விலகும், தேகம் பொலிவு பெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
Leave a Comment