அன்னத்தின் மகிமையை உணர்த்தும் திருநாள் ஐப்பசி அன்னாபிஷேகம்!


அன்னத்தின் மகிமையை உணர்த்தும் திருநாள் ஐப்பசி பெளர்ணமி. அம்பிகை அன்னபூரணியால் அன்னம் இடப்பட்டு, ஈசன் தோஷம் நீங்கப்பெற்ற நாள் இது. தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் தன் ஒளியை இழந்தான். பின்னர் சிவபெருமானின் திருவருளால் அவன் ஒவ்வொரு கலையாகப் பெற்று, முழு ஒளியையும் அடைந்து பூரணமாகப் பிரகாசித்ததும் ஐப்பசி பெளர்ணமியில்தான்.

இந்த ஐப்பசிப் பெளர்ணமி தினத்திலேயே ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தைக் கொண்டாடுகிறோம். அன்று, தனக்கு விருப்பமான அன்னத்தால் ஈசனை அபிஷேகித்துக் கொண்டாடினான் சந்திரன்.

`அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே'

- என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

தில்லைச் சிதம்பரம் கோயிலில் முன்பு தினமும் இறைவனுக்கு அன்னாபி ஷேகம் நடைபெற்றது என்பர். ஆதிசங்கரர் தரிசிக்க வந்தபோது, இந்தக் கோயிலில் `அன்ன ஆகர்ஷண யந்திரம்' ஒன்றை நிறுவியதாகக் கூறுவார்கள். அதனால் தில்லை பெருமானை தரிசித்தாலோ, மேற்காணும் பதிகத்தைப் பாடி வழிபட்டாலோ, வீட்டில் அன்னம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

அன்னமய கோசமான இந்த தேகத்துக்கு ஆதாரமாய் இருப்பது அன்னம். மண்ணில் சேறோடு முளைத்து, காய்ந்து, பத்தர் - உமி போன்ற குற்றங்கள் நீங்கி, நீரில் ஊறி மேலும் தூய்மையாகி, நெருப்பில் வெந்து - ஆவியில் பக்குவமாகி, கொதிக்கும் சத்தங்கள் அடங்கி - பளிச்சென்ற வெண்மை நிறம் தாங்கி, புத்துணர்வு தரும் வாசனையோடு புதுப்பிறவி எடுக்கும் அன்னம் ஈசனை அடை யும் தகுதியைப் பெறுகிறது. இது, நல்ல அடியார்களுக்கு உவமையாக சைவத்தில் கூறப்படும்.ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் லிங்க வடிவானது; அன்னம் ஈசனின் அம்சமாகிறது. ஒப்பற்ற இந்த அன்னத்தை ஈசனுக்குப் படைக் கும் விழா ஐப்பசி அன்னாபிஷேகம்.
 



Leave a Comment