ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன?
தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலாம் ராசியில் புகுந்து, அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள் ஐப்பசி ஆகும்.
‘‘ஐப்பசியதனிலோடுந் நீர்வரத்து
குன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்
சேரும். தானியமெலாம் பொன்னுக்கு
நிகரொப்ப நிற்கும் மெய்யே’’
என்ற பாட்டிலிருந்து இந்த ஐப்பசி மாதத்தில் ஆற்று நீர்ப் பெருக்கு குறைந்து, நீருக்கு சற்று தட்டுப்பாடு மேலோங்கி நிற்கும். தானியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருளும் விலை கூடிட ஏதுவாகும் என்றறியலாம்.
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உள்பட பல்வேறு பண்டிகைகளை கொண்டாடப்படுகிறது.
புனிதமான ஐப்பசி மாதம் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம்.
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது துலாம் ராசி நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் அதிகத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.
காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.
இம்மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
கேதார கவுரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.
தீபாவளி
தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.
இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.
புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.
புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.
தீபம் என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.
Leave a Comment