காரைக்கால் அம்மையார் புராணம் (பாகம்-2 )


- "மாரி மைந்தன்" சிவராமன்

கைப்பிடித்த காரிகையைக் 
கடவுள் அம்சம் என உணர்ந்து கொண்ட பரமதத்தன் 
ஏதேனும் 
சாக்கு போக்கு சொல்லி புனிதவதியிடமிருந்து அன்றாடம் விலக ஆரம்பித்தான். 

நீண்டநாள் 
விலகவும் திட்டமிட்டான். 

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழி அவன் நினைவுக்கு வந்தது.

வணிகத்தைப் பெருக்குவதாக உறவினர்களிடம் சொல்லி பெரும்பொருள் ஈட்டு வர விரும்புவதாக 
உறுதிபடக் கூறி அவர்களிடம் ஆசி பெற்றான்.

புனிதவதியார் கூட மறுப்பேதும் சொல்லாமல் கண்ணீரோடும் 
இனிமேலாவது 
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடும் 
மீறி வந்த விம்மலோடும் அனுப்பிவைத்தார்.

துறைமுகத்தில் 
மரக்கலம் தயாராக இருந்தது.

மனதார 
குலதெய்வமாய் கருதிய 
புனிதவதியாரை வணங்கிவிட்டு 
கடல் வணிகர்கள் வழக்கமாக வணங்கும் வருண பகவானை துதித்து விட்டு 
கடல் பயணம் மேற்கொண்டான் பரமதத்தன்.

கணவன் போன 
திசை வணங்கியபடி காத்திருந்தார் 
கற்பு நெறியுடன் புனிதவதியார்.

கணவன் திரும்ப வந்து கை பிடிப்பான்.
அவன் மனதும் 
தம்மிருவர் வாழ்வும் மாறும் என்ற 
பெருத்த நம்பிக்கையோடு
சிவ வழிபாட்டில் 
பெருநேரம் கழித்தார்
பெருமாட்டியார்.

தினமும் 
காலையில் கதிரவன் கடலில் எழுந்தான். மாலையில் மறைந்தான். மாலை முடிந்து 
இரவு வந்தது.
நிலவு வந்தது. 
வளர்ந்தது. 
தேய்ந்தது. 
மறைந்தது.

தீதறியா 
புனிதவதியார் 
கடலைப் பார்த்தபடி கடவுளைத் தியானத்தபடி கப்பல் வரும் 
திசை நோக்கிக் காத்திருந்தார்.

பரமதத்தன் 
வரவே இல்லை.


வெகு காலத்திற்குப் பின்-
பின்னொரு நாள்
பாண்டிய நாட்டில் பரமதத்தன் வசிப்பதாக காரைக்காலுக்கு 
ஒரு வணிகத் 
தகவல் வந்தது.

ஊர்ஜிதம் செய்யப் போன உறவினர்கள் 
பெற்ற செய்தி அதிர்ச்சியாய் இருந்தது.

பெரும் பொருள் ஈட்டி தாயகம் திரும்பிய பரமதத்தன் 
காரைக்கால் திரும்புவதைத் தவிர்த்து பாண்டிய நாடு சென்றிருக்கிறான்.

அங்கு 
வசதியோடு வணிகம் மேற்கொண்ட அவனுக்கு வணிகர் ஒருவர் 
பெண் தந்து மணம் முடித்திருக்கிறார்.

அந்த இருமனம் இணைந்த திருமணத்தின் பயனாக 
ஓர் அழகுக் குழந்தை பிறந்திருக்கிறாள்.

அக்குழந்தைக்கு பரமதத்தன் இட்ட பெயர் 'புனிதவதி'.

இத்தகவல்கள் காரைக்காலுக்கு வருவதற்கு முன்னரே உற்றார் உறவினரோடு சிவிகை ஏறி 
பாண்டிய நாடு சென்று கணவனைக் 
கைப்பிடித்து 
அழைத்து வர கிளம்பியிருந்தார் புனிதவதியார்.

புனிதவதியார் 
பாண்டியநாடு 
வரும் தகவல் பரமதத்தனுக்கு முன்னதாகவே
தெரிய வந்தது. 

இளம் மனைவியையும் தன் பெண் மகவையும் அழைத்துக்கொண்டு 
நகர எல்லைக்கு வந்து காத்திருந்தான் 
பரமதத்தன்.

புனிதவதியாரைப் பார்த்ததும் மூவரும் வணங்கினர்.

"உமது அருளாலே தான் இத்தனை நாள் வாழ்கிறேன்.

இந்த பெண் குழந்தைக்கு உமது பெயரையே வைத்துள்ளேன்.

தாங்கள் தான் என் குலச்சாமி"

காலில் விழுந்து கதறினான்.

கணவன் 
காலடி விழுந்து கதறுவதைக் கண்டு அஞ்சி பயந்து புனிதவதியார் 
பூங்கொடி போல் தத்தளித்தார்.

ஒன்றும் புரியாத சுற்றத்தார் வியந்து பரமதத்தனைப் பார்த்தனர்.

"ஏன் மனைவியின் 
காலில் விழுகிறாய் ?" ஆச்சரியத்தோடு கேட்டனர்.

"இவர் 
மானிடப் பிறவி அல்ல. தெய்வப் பிறவி. 
நற்பெரும் தெய்வம். 

இதை அறிந்து தான் விலகி வந்தேன்.

என் குழந்தைக்கு 
இவர் பெயரைத் தான் சூட்டியுள்ளேன்.

ஆகையால் தான்
நான் இத்தெய்வத்தின்
பொற்பாதங்களை வணங்கினேன்.

நீங்கள் அனைவரும் வணங்குங்கள்.
நிச்சயம்
நல்லது நடக்கும்"
என்று பரமதத்தன் 
பக்திப் பரவசத்தோடு பகர உறவினர்கள் 
திகைத்துப் போயினர்.

பின் 
நடந்ததையெல்லாம் கதைபோலச் சொன்னான் பரமதத்தன்.

அதேநேரம் நடந்ததையெல்லாம் கவனித்திருந்த புனிதவதியார் 
கண்மூடி 
தியானத்தில் ஆழ்ந்தார்.

ஈசனிடம் 
நேரடியாக 
கோரிக்கை வைத்தார்.

"தேவாதி தேவனே ...! 
என் கணவருக்கு 
இப்படி ஓர் எண்ணம் வந்திருக்கிறது.

எல்லாம் உன் செயல்.

 இத்தனை நாள் அவருக்காகவே
உடல் வளர்த்தேன். வனப்புடன் இருந்தேன்.

இப்போது அவரது உள்ளக்கிடக்கை வெளிப்படை 
ஆகிவிட்டது.
நானும் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.

இனி எதற்கு எனக்கு அழகுக் கோலம் ?
ஈர்க்கும் வனப்பு 
எனக்கெதற்கு ? 

என் 
தசைகளைச் சுருக்கி 
உன் 
பூதகணங்களைப் போல் பேய்கணம் போல் 
ஆக்கி விடு.

பூத வடிவை மாற்றி 
பேய் வடிவு தந்துவிடு."

உணர்ச்சி பொங்க வேண்டி நின்றார்.

புனிதவதியாரின் வேண்டுதலை 
எப்போதும் 
செவிமடுக்கும் செஞ்சடையன் 
உடனே 
திருவருள் புரிந்தார்.

புனிதவதியார் பெண்மைக்கும் அழகிற்கும் ஆதாரமான ஊன் சதை வனப்பை உதறிவிட்டு வெறும் எலும்புக் கூடாய் 
பேயாய் மாறி நின்றார்.

ஆம் ....
மயிலினம் தன் 
சிறகுகளை உதிர்ப்பது போல்
இந்த அழகு மயில்
சதைகளை தசைகளை உதிர்த்தது.

இதைக்கண்ட உறவினர் "பேய்' என அலறியவாறே அஞ்சி ஓடினர்.

ஆனால் 
பரமதத்தன் 
மனம் தெளிந்து 
பயம் விலகி 
வணங்கி நின்றான்.

அக்கணம் 
விண்ணவரும் மண்ணவரும் 
தோன்றி வணங்கினர்.

வானம் 
மலர்மழை பொழிந்தது.

தேவ துந்துபிகள் தேவகானம் இசைத்தன.

தேவர்களும் முனிவர்களும் 
தம்மை மறந்து 
ஆரவாரம் செய்தனர்.

சிவகணங்கள் 
ஆனந்தக் கூத்தாடின.

இவற்றைக் கவனித்த உறவினர்கள் 
பயம் நீங்கி 
புனிதவதியாரைச்
சூழ்ந்து வணங்கினர்.

பேய்கணமாய் மாறிய புனிதவதியாருக்கு  இறையருளால் 
உடல் வனப்பு 
மாறினாலும் 
குரல் இனிமையும் 
தமிழ் புலமையும் 
குன்றாதிருந்தது.

கண்மூடிக் கனிந்துருகி "புவியாளும் இறைவா....
உன்னுடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல 
சிவ பூதகணங்களில் ஒன்றானேன்."
என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு.... 

அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலை யையும் 
பாடி அருளினார்.

இதனைத் தொடர்ந்தே இறைவன் 
புனிதவதியார் பிறப்பதற்கு முன்பே இரண்டாவது பெயர் என 
குறித்து வைத்திருந்த 'காரைக்கால் அம்மையார்' என்ற புனித 
பெயரைப் பெற்றார்.

பாண்டிய எல்லையிலிருந்து 
பேய் வடிவோடு திருக்கயிலாயம் 
பயணப்பட விருப்பப்பட்டார் காரைக்கால் அம்மையார்.

வழியில் 
பார்த்தவர் எல்லாம் பயந்து ஓடினர். 

காரைக்கால் அம்மை கவலை கொள்ளவில்லை. கயிலை மன்னன் திருநாமத்தை உச்சரித்தபடி 
பயணம் தொடர்ந்தார்.

'தன்னை யார் 
அறிந்தால் என்ன ?
என்ன பயன் ?
இறைவன் 
அறிவானாகில் போதும்' என எண்ணியபடி 
எதற்கும் கலங்காது 
பல நாள் பயணத்தில் கயிலாய மலையை அடைந்தார்.

திருக்கயிலாய மண்ணை காலால் மிதிப்பது தவறு என கருதிய 
காரைக்கால் அம்மையார் கயிலைநாதனை வேண்டியபடி 
தலையால் நடக்கலானார்.

வெள்ளி மலையை தலையால் ஏறினார் சிவன் அருளாலே 
அவன் தாள் 
வணங்கியபடியே.

'திருவருள் 
துணை செய்தால் தான்  சிவத்தை அடைய முடியும்' என்ற வேதவாக்கு காரைக்கால் அம்மையார் பயணத்தில் உண்மையானது .

உலகமாதா 
உமாதேவியார் 
ஒரு பெண்மணி 
பேய் வடிவில் 
தலையால் 
தம்மை நோக்கி வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு உமையொருபாகனிடம் சுட்டிக் காட்டினார்.

முக்காலமும் உணர்ந்த
முக்கண்ணர் புன்னகைத்தபடி

"வருபவர் நமது அன்பிற்குரியவர். 

வேண்டி 
இவ்வுருவம் பெற்றவர்.

என் அன்பு குழந்தை."
என்று உமையிடம் சொன்னார்.

உமாதேவியார் அம்மையாரின் 
அன்பை வியந்து பாராட்டினார்.

காரைக்கால் அம்மையார் அருகில் வந்ததும் "அம்மையே...!" என்று அன்போடு அழைத்தார் 
அடியார்க்கினியர்.

காரைக்கால் அம்மையார் "அப்பா....!" என கூறியவாறு எம்பெருமானின் 
தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

"இங்கு நம்மிடம் வேண்டுவது யாது ?
நாம்  தரத் 
தயாராக உள்ளோம்." என்றார் கயிலைப்பெருமான் எல்லை இல்லா கருணையோடு.

நான்கு வரங்கள் கேட்டார் நற்றமிழ் அன்னையார்.

"உம்மீது 
இன்ப அன்பு வேண்டும்.

என்றென்றும் இறவாத பிறவாமை வேண்டும்.

மீண்டும் பிறப்பு உண்டேல் உம்மை என்றும் மறவாது இருக்க வேண்டும்.

நீவீர் ஆனந்த நடனம் ஆடும் போது அடியேன் உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிய வண்ணம்  இருக்க வேண்டும்"

என்று கனிந்துருகி கண்ணீர் மல்கக் கேட்டார் காரைக்கால் அம்மையார்.

"அம்மையே...! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில்
நாம் நடனம் ஆடுவோம்.

அங்கு 
நீ சென்று 
என் நடனம் கண்டு ஆனந்தப்பட்டு 
எம்மை எப்போதும் பாடிக்கொண்டிரு."
ஆசி தந்தார் 
ஆதி சிவனார்.

அதன்படி 
திருவாலங்காடு தலத்திற்குத்
தலையாலே 
வைராக்கியத்தோடு நடந்து வந்தார்
காரைக்கால் அம்மையார்.

ஆங்கு 
ஆலங்காடு ஆலயத்தில் ஆண்டவனின் 
நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து 
தொழுது வணங்கி 'கொங்கை திரங்கி' என்ற முத்திருப்பதிகத்தைப் 
பாடி மகிழ்ந்தார்.

திருஞான சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பதிகம் பாடுவதற்கு 
பல ஆண்டுகளுக்கு முன்னரே 
'கொங்கை திரங்கி' என்ற திருப்பதிகத்தை தேவாரத்திற்கு தோற்றுவாய் போல் பாடியருளினார் காரைக்கால் அம்மையார் என்று இன்றும் போற்றுகின்றார்
சைவச் சான்றோர்.

ஆனந்த கூத்தனின் ஆனந்தக் கூத்தை 
முன் வணங்கி பெருங்காதல் எழுந்தோங்க பெரிதும் வியப்பெய்தி 
இத் திருப்பதிகம் 
பாடி முடித்தார்.

கூத்தபிரான்
ஆடும் திருக்கூத்தை சேவடிக்கீழ் என்றும் நீங்காது அமர்ந்து பாடும் வரம் பெற்றதால் இன்றுவரை  இறவாது பாடிய வண்ணமே திருவாலங்காடு தலத்தில் அருட்காட்சி தருகிறார் காரைக்காலம்மையார்.

சிவபெருமானால் "அம்மையே"
என அழைக்கப்பட்ட பெருமை வேறு 
எவருக்கும் இல்லை என்பது 
காரைக்கால் அம்மையாரின் 
அருட் சிறப்பு.

அறுபத்து மூவரில் 
மூவரே பெண்டிர்.

இசைஞானியார்.
மங்கையற்கரசியார்.
காரைக்கால் அம்மையார் ஆகிய அம்மூவரில்
இயல் இசையில் வல்லவர் காரைக்கால் அம்மையார் என்பது 
அம்மையின் தமிழ் சிறப்பு.

'பேயார்க்கும் அடியேன்..' இது சுந்தரர் வாக்கு .

அம்மை அடிமலர் வாழ்க !

(காரைக்கால் அம்மையார் புராணம் -நிறைவுற்றது)



Leave a Comment