சங்கடஹர சதுர்த்தி பிறந்த கதை
சிவபெருமான்,தனது பூத கணங்களுக்கு கணேசனை தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். பிரம்மதேவன் அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும், மனைவிகளாக அளித்து பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மனம் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற
பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
பூஜையின் போது பிரம்மன் தனக்களித்த மோதகங்களை கையில் எடுத்துக் கொண்டு,
உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்ததுடன் பரிகசிக்கவும் செய்தான்.
அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, “ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.
அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக” என்று சபித்தார்.சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில்,பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும், கணபதியைச் சரணடைவது தான் ஒரே வழி என்றும் கூறினார்.
மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் அதாவது பௌர்ணமிக்குப் பின் வருவது ,விரதம் ஏற்று பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தட்சணைகளை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார். பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.
சந்திரனும் இந்த பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!
“தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“ என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் சந்திரன்.
பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.
கணபதியும் சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே அருளினார். இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது.
பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்! எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை அமைத்து பூக்களால் பூஜித்த பின், இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’ என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.
சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு, நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல, ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!
நாமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து சங்கடங்களை போக்கிக்கொள்வோம் .
Leave a Comment