தொழில் முன்னேற, சொத்துகள் சேர மஹா பரணியன்று ஏற்ற வேண்டிய  யம தீபம்


மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். தக்ஷிணாயன புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்பணம் செய்வது மரபு. அவ்வாறு வருகை தரும் பித்ருக்களுக்கு. அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.

எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம்; விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!

யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும். அத் தீபத்தை நீங்கள் மஹாளய பக்ஷத்தில் வரும் மஹா பரணி நாளிலும் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு:

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.


இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவீன் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமனுதான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது

இதுபோன்ற ஆயுள் அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் யம தீபம் ஏற்றி வழிபட ஆயுள்காரகன் சனைச்சர பகவானின் அருளும் அவரின் சகோதரர் யமனின் அருளும் பெற்றும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 



Leave a Comment