மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம் ....


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் 16.30 முதல் 18.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

சனி பிரதோஷ சிறப்பு :

சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - வளம் உண்டாகும்.

தேன் - இனிய சாரீரம் கிட்டும்.

பழங்கள் - விளைச்சல் பெருகும்.

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்.

நெய் - முக்தி பேறு கிட்டும்.

இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.

எண்ணெய் - சுகவாழ்வு.

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.



Leave a Comment