ஏழுமலையானுக்கு சாத்திய மலர்களிலிருந்து அகர்பத்திகள்...


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் விதவிதமான மலர்கள் மூலம் நறுமணம் மிக்க அகர்பத்திகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக அகர்பத்திகளை தயாரிக்க கர்நாடக மாநிலம், பெங்களூரு தர்ஷன் இண்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. குறைந்த விலையில் தரமான அகர்பத்திகளை தயார் செய்யவேண்டும் என தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. அதன்படி, கோசாலையில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு சூட்டிய மலர் மாலைகள் உட்பட தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமிகளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளையும் தோட்டக்கலை துறையினர் தினமும் சேகரித்து, தொழிற்சாலைக்கு கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர்.

இங்கு மலர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயந்திரம் மூலம் உலர வைத்து பொடியாக்கி சில வாசனை, ரசாயனங்கள் கலந்து அகர்பத்தி தயார் செய்யப்படுகிறது. ஏழுமலைகளை குறிக்கும் விதமாக 7 விதமான நறுமணத்துடன் அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த அகர்பத்திகள் ரூ.45, ரூ.85 விலையில் இது விற்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருமலையில் உள்ள லட்டு கவுன்டர் அறைகளை காலி செய்த பிறகு டெபாசிட் ரூபாய் வழங்கும் டெபாசிட் ரிபண்ட் கவுண்டரில் அகர்பத்திகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

விரைவில் சென்னை, சேலம், வேலூர், கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட நாடு முழுவதும் இருக்கும் தேவஸ்தான தகவல் மையங்களில் இந்த அகர்பத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 



Leave a Comment