சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (திண்ணன் கண்ணப்பன் ஆன கதை)


 

வழக்கமாக நாம் இறைவனை ,பல நாமங்களை சொல்லி உரிமையுடன் கூப்பிட்டு கொண்டாடுவோம். ஆனால் இறைவனே தனது பக்தன் ஒருவனை அப்பா என்று அன்புடன் கூப்பிட்ட கதை ஒன்று உள்ளது.அந்த அற்புதத்தை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

உடுப்பூர் என்னும் வனப் பகுதியில் நாகன் என்ற வேடுவ தலைவனுக்கும் ,அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் நீண்டகாலமாக பிள்ளை பாக்கியம் இல்லாததால் குல தெய்வமான முருகக் கடவுளை வேண்டி விரதம் இருந்தார்கள்.

முருகப்பெருமானின் அருளால்  நாகனுக்கும் தத்தைக்கும் தை மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். பிறக்கும் போதே நன்றாக கனமாக இருந்த காரணத்தால் குழந்தைக்கு‘திண்ணன்’ என்று பெயர் சூட்டினார்கள்.

திண்ணன் வளர்ந்து, காட்டு விலங்குகளின் இயல்புகளை நன்கறிந்து கொண்டு வேட்டையாடும் பயிற்சியையும் மேற்கொண்டான். பயிற்சியின் தொடர்ச்சியாக  வேட்டைக்குச் சென்றான். திண்ணனுக்கு உதவி புரிவதற்காக, சில வேடுவர்களும் அவனுடன் சென்றார்கள். ஒரு பன்றியை வேட்டையாட, அதனைத் தொடர்ந்து வெகுதூரம் சென்று, ஒரு மலையின் அடிவாரத்தில் பன்றியை, திண்ணன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.

திண்ணன், உயர்ந்து நின்ற மலையை மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி, உடன் வந்தவர்களிடம் அதைப்பற்றிக் கேட்டான். “இந்த மலையின் பெயர் திருக்காளத்தி,  இதன் உச்சியில் குடுமித்தேவர் எழுந்தருளியிருக்கிறார்.” என்று அவர்கள் கூறியதும், ஏதோ ஒன்று அவனை ஈர்த்து, திண்ணன் மலைமீது ஏறத் தொடங்கினான். மலை உச்சியிலே ஏகாந்தமாக, வீற்றிருந்த காளத்தியப்பரைத் பார்த்த நொடி பரவசமாகி , திண்ணன் ,ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

 

                                                                  

உடன் வந்தவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டு, காளத்தியப்பரை விட்டுப் பிரிய மனமின்றி அங்கேயே இருக்கலானான் திண்ணன்.“காளத்தியப்பா! உனக்குப் பசிக்குமே!” என்று நெக்குருகி மலையிறங்கி வந்தான். சற்று நேரத்திற்கு முன் கொன்று போட்ட பன்றியின் இறைச்சியைப் பக்குவம் செய்து எடுத்துக் கொண்டான். அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லவா ?அதற்காக  ஆற்றுநீரை வாயிலே தேக்கிக் கொண்டு, காட்டுப் பூக்களையும் பறித்துக் கொண்டு மலைமேலை ஏறினான். வாயிலிருந்த நீரால் குடுமித்தேவரை நீராட்டினான். மலர்களை அவருக்கு அர்ச்சனை செய்வித்து, பன்றி இறைச்சியை நிவேதனம் செய்தான்.திண்ணன்  உள்ளன்போடு செய்ததினால் ஈசனுக்கு எச்சில் நீர் பன்னீராக  இருந்தது.  ஐந்து நாட்களாகத் தொடர்ந்து,காளத்தியப்பரைப் பிரிய மனமின்றி அங்கேயே இருந்த திண்ணன். அவரைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து தனது பக்தியால் இறைவனை திக்குமுக்காட வைத்தான்.

இது இப்படி இருக்க ,காளத்தியப்பருக்கு வழக்கமாக பூஜை செய்ய வருகின்ற அந்தணர்,காளத்தியப்பருக்கு அருகிலே வேடுவனையும், முன்னால் சிதறிக் கிடந்த இறைச்சித் துண்டுகளையும் கண்டு முகம் சுளித்து விட்டு பூஜை செய்யாமலே சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவிலே சிவபெருமான் தோன்றி, “நாளை மலைக்கு வந்து, திண்ணன் அறியாதபடி மறைந்திருந்து பார்.” என்று உத்தரவிட்டார்.

மறுநாள் கண் விழித்த திண்ணன் , காளத்தியப்பரின் ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழிந்ததைக் கண்டதும் பதறினான். உடனே சிறிதும் யோசிக்காமல் வேலால் தன்னுடைய கண்ணைத் தோண்டி,அப்பனின் கண்ணில் அப்பியதும் உதிரம் நின்றது. திண்ணன் ஆனந்தமடைந்தான். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றொரு கண்ணில் உதிரம் வடிந்தது கண்டு அரண்டான். வேலை எடுத்து  மற்றொரு கண்ணையும் தோண்ட தயாரானான். ஆனால் காளத்தியப்பரின் உதிரம் வழியும் கண் இருக்கும் இடம் தெரியாதே என்று, தனது செருப்பணிந்த காலை, அவர் கண்ணருகே வைத்தான். திண்ணன் தனது  இரண்டாவது கண்ணைத் தோண்டும்போது சிவபெருமான் அங்கே தோன்றி,“கண்ணப்பா நில்!” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இவை அனைத்தையும் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்தணர், திண்ணனின் பக்தியை பார்த்து மெய் சிலிர்த்தார். காளத்தியப்பரின் வாய்மொழியால் ‘கண்ணப்பா’ என்று அழைக்கப்பட்டவர்  ஆதலால் , வேடுவராக இருந்தபோதிலும்  அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

 

ஓம் நமச்சிவாயா !

 



Leave a Comment