பதினாறு பேற்றையும் அள்ளித்தரும் வரலக்ஷ்மி விரதம்
ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகள் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.இதனால் மங்களமும் ,சௌபாக்கியமும் அடையலாம். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். சுமங்கலிப் பெண்களுக்கு ,மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.வரலக்ஷ்மி பூஜையை முறைப்படி தவறாமல் செய்தால் செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் அன்று ,அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். இம்மாதம் வெள்ளிக்கிழமை (04.08.2017) இந்த விரதத்தை பெண்கள் கொண்டாட உள்ள நிலையில்,லக்ஷ்மி தேவியின் வரலாற்றை பற்றி நாம் அறிந்துக்கொள்வோம்.
ஸ்ரீவைகுண்டத்தில், சவுந்தர்யமே வடிவான லட்சுமியின் அழகையும், கீர்த்தியையும் யாழிசைத்தபடி பாடிய கந்தர்வப் பெண் ஒருத்திக்கு லட்சுமி, மனம் மகிழ்ந்து, தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க மலர் சரத்தை பரிசாக கொடுத்தாள். அதை பிரசாதமாக நினைத்த அந்தப் பெண், தன் யாழில் சுற்றிக் கொண்டாள். வானவெளியில் துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அதுவரை உணராத நறுமணம் கமழவே, அதற்கான காரணத்தை அந்த பெண்ணிடம் கேட்டார். லட்சுமி தனக்கு பிராசதமாக தந்த சரத்தில் இருந்தே அந்த மணம் கமழ்வதாக சொன்னதோடு,“உங்களைப் போன்ற மகாமுனிவர்களே மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்…’ என்று அதை முனிவரிடம் கொடுத்தும் விட்டாள்.
அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர், அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார். அச்சமயம் ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு, மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி, அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவனோ அதை அலட்சியமாக வாங்கி, யானையின் மத்தகத்தில் வைக்க , அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே, அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.
இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர், “இந்திரா… உனக்கு கற்பக விருட்சம், காமதேனு,ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே, லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய். அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்…’ என்றார்.
அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன. திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக, பிருகு மகரிஷி, அவரது மார்பில் எட்டி உதைத்தார். இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும்,கோபத்தில் பாற்கடலில் சென்று மறைந்தாள்.
லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான். அவர்கள் திருமாலின் உதவியை நாடி பாற்கடலைக் கடைந்த போது, ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள். அவள் வெளியே வரும் போதே, முத்துமாலைகள் அணிந்தும், கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள். நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங்களில் தீர்த்தமேந்தி வந்த யானைகள் அவளுக்கு அபிஷேகம் செய்தன. பிரம்மா பல ஆபரணங்களை வழங்கினார். சரஸ்வதி,நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள். வானம் பட்டாடைகளை அளித்தது. வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான். நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.
அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பிரம்மா கூறவே, அவள் தன் கையில் இருந்த மணமாலையை திருமால் கழுத்தில் அணிவித்தாள்; வரலட்சுமி விரத நன்னாளில், லட்சுமியின் வரலாற்றைப் படித்து, பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
Leave a Comment