ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?


ரஜ்ஜூ பற்றி கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் தலைக்கயிறு எனும் சிரோ ரஜ்ஜூ.

2. ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ஆறும் கழுத்துக் கயிறு எனும் கண்ட ரஜ்ஜூ.

3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய ஆறும் வயிற்றுக் கயிறு எனும் உதர ரஜ்ஜூ அல்லது நாபி ரஜ்ஜூ ஆகும்.

4. பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய ஆறும் தொடைக் கயிறு எனும் தொடை ரஜ்ஜூ அல்லது ஊரு ரஜ்ஜூ.

5. அசுவினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய ஆறும் பாதக் கயிறு எனும் பாத ரஜ்ஜூ ஆகும்.

ஆண், பெண் ஆகியோரின் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜூவிலிருந்தால் பொருந்தாது என்றும் அவைகள் சிரசு ரஜ்ஜூவானால் ஆண் மரணம், கழுத்து ரஜ்ஜூவானால் பெண் மரணம், உதர (வயிறு) ரஜ்ஜூவானால் புத்திரதோஷம், தொடை (ஊரு) ரஜ்ஜூவானால் திரவிய நாசம் அல்லது ஒற்றுமை குறைவு, பாத ரஜ்ஜூவானால் ரோகம் அல்லது பிரயாணத்தில் தீங்கு என்று கூறப்பட்டுள்ளது. இவைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளலாமா அல்லது இது எந்த அளவுக்குத் திருமண பந்தத்தைக் கெடுக்கிறது என்று இதில் ஆராய்ச்சி செய்தோம். ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள் என்றும் பார்க்கிறோம்.

ஏக நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, மகம், உத்திரட்டாதி, விசாகம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமமாகப் பொருந்தும் என்றும் தசா சந்திப்பு தோஷம் உண்டாக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பலன் என்றும், மற்ற நட்சத்திரங்கள் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஏக நட்சத்திரப் பொருத்தம் பார்க்கும் பட்சத்தில் ரஜ்ஜூ தட்டும் நட்சத்திரங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். ரஜ்ஜூப் பொருத்தம் பார்ப்பதில் சிரசு ரஜ்ஜூ எனும் தலைக் கயிறுக்கு மட்டுமே ஒரே ஒரு பிரிவு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி கழுத்து, வயிறு, தொடை, பாதம் ஆகிய ரஜ்ஜூக்களில் ஆரோகண கதி(ஏறுமுகம்) அவரோகண கதி (இறங்குமுகம்) என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.
 



Leave a Comment