எது உண்மையான சரணாகதி ?
சரணாகதி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது தெரியாமலேயே நம்மில் பலர் அந்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது வாய் மட்டும் தான் இறைவா என்று சொல்லிக்கொண்டு இருக்கும். ஆனால் மனமோ சஞ்சலப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அப்படி இல்லாமல் எது நடந்தாலும் இறைவனே கதி என இருப்பது தான் உண்மையான சரணாகதி.
ஒரு முறை இந்திராஜூம்னன் என்ற ஒரு அரசன், விஷ்ணு பகவான் மீது அதீதமான பக்தி கொண்ட காரணத்தினால் சதா சர்வகாலமும் திருமாலின் பெயரைச் சொல்லிக்கொண்டே, அதே நினைவில் பக்தியில் மூழ்கி திளைத்து இருப்பான். அனுதினமும் ஒரு சிறிய காரியம்என்றாலும் விஷ்ணுவை கும்பிடாமல் செய்ய மாட்டான்.
அவனுடைய பக்தி எந்த அளவிற்கு என்றால்,அவன் பூஜையில் இருக்கும் போது யார் வந்தாலும் அவனுக்குத் தெரியாது. அந்த அளவிற்கு ஆழ்ந்த பக்தி கொண்ட அவன் பூஜையில் இருக்கும்போது ஒரு நாள் கோபத்துக்கு பேர் போன துர்வாச முனிவர் அந்த அரசரைக் காண வருகிறார். அவரும் வெகு பொறுமையாக காத்திருந்து பார்த்தார்.
சரி மன்னன் தான் பக்தியில் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே , நாமாவது நினைவுப் படுத்தலாம் என்று லேசாக தனது தொண்டையை செருமினார். அதற்கும் அசையவில்லை அந்த அரசன். இதனால் தனது இயல்பின்படி கோபம் கொண்ட துர்வாச முனிவர் , வந்ததே கோபம் பிடி என் சாபம் என்று,“நான் வந்து நிற்பது கூடத்தெரியாமல், பெரிய பக்தன் என்ற ஆணவத்தில் என்னை மதிக்காமல் இருந்தாய். நீ மதம் பிடித்த யானையாக காட்டில் அலைந்து திரியக்கடவது” என்று சாபமிட்டுவிட்டார். அரசன் தன் தவறை உணர்ந்து துர்வாசரிடம் மன்னிப்புடன் சாப விமோசனம் வேண்டினான்.
அதற்கு முனிவரும் ,“நீ யானையாக ஆனாலும் திருமால் மீது கொண்ட பக்தியை மறக்காமல் இருப்பாய். அத்தோடு குளத்தில் இருக்கும் ஒரு முதலை உன் காலைப் பிடிக்கும்போது நீ ஆதி மூலமே என்று அழைக்க, உடனே அந்த திருமால் வந்து உன்னைக் காப்பார். உனக்கு சாப விமோசனமும்,மோட்சமும், கிடைக்கும்” என்றார்.
அதன்படியே அந்த அரசன் கஜேந்திரன் என்ற மிகப் பெரிய கம்பீரமான யானையாக காடுகளில் தன் குட்டிகளுடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தில் கூஹூ என்ற ஒரு அரக்கன் தண்ணீருக்குள் இருந்து கொண்டு அங்கு குளிக்க வருபவர்களின் காலைப்பிடித்து இழுத்து பயமுறுத்திக் கொண்டிருந்தான். அகத்திய மாமுனிவரையும்,அந்தக் குளத்தில் நீராட வந்தபோது அவருடைய காலையும் பிடித்து இழுத்தான்.
கோபத்தில் அவன் முதலையாகப் போகவேண்டும் என்று சாபமிட்டார் முனிவர். அவனும் தம் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனமும் கேட்டான். “கஜேந்திரன் என்னும் யானை வரும்போது அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக் காக்க வரும் கடவுள் உன்னையும் காக்கும் என்று முனிவர் கூறினார். தனது சாப விமோசனதிற்காக ,அந்த அரக்கனும் முதலை வடிவில் குளத்தினுள் காத்துக் கிடந்தான்.
அரசனுக்கும் ,அரக்கனுக்கும் சாப விமோசனத்திற்காக நேரமும் வந்தது. கபிஸ்தலம் என்னும் இடத்தின் அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோவிலின் முன்னால் கிழக்கு திசையில் உள்ள கபிலதீர்த்தத்தில் நீர் அருத்துவதற்காக பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி பருகி, அந்த நீரைத் தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான்.
தான் வணங்கும் பெருமாளுக்கு ஒரு தாமரை மலரைப் பறித்து சமர்பிக்க விரும்பிய கஜராஜன், அந்த பொய்கைக்குள் காலை வைத்த போது அதிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது .
உடனே கஜேந்திரன், “என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தியது. உடனே பெண் யானைகளும், குட்டிகளும் வந்து கஜேந்திரனை விடுவிக்க பெரும்பாடு பட்டன. நீருக்குள் இருக்கும் போது முதலையின் பலம் அதிகம் அல்லவா? அதனால் கஜேந்திரனால் அந்த முதலையிடமிருந்து மீண்டு வரமுடியவில்லை.
கஜேந்திரனுக்கு உடல் பலம் முழுவதும் குறைந்த நேரத்தில் “ஆதிமூலமே” என்று அவன் அலறிய மறுகணம் கருட வாகனத்தில் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து கஜேந்திரனின் துயர் தீர்த்தான் ஆபத்பாந்தவன்.
தன்னை நோக்கி அபாய குரல் எழுப்பியது ஒரு யானையாக இருந்தாலும் இறைவன் ஓடோடி வந்ததற்கு காரணம் , கஜேந்திரன் இறைவனிடம் அடைந்த சரணாகதி தான்.நாமும் இறைவனிடம் கேள்வியற்ற சரணாகதி அடைந்து அவன் அருள் பெறுவோம்.
ஸ்ரீமன் நாராயணா போற்றி ....
Leave a Comment