திருநாவுக்கரசு நாயனார் புராணம் (பாகம்-2)
- "மாரி மைந்தன்" சிவராமன்
சைவ சமய
மருள்நீக்கியராய்
பிறந்து
சமண சமய
தர்மசேனராய்
வலம் வந்துகொண்டிருந்த தம்பியைப் பற்றிய
தகவல் ஏதும் இல்லாது தாய் மதம் திரும்புவான் என்ற நம்பிக்கை
குறைந்த நிலையிலும்
சிவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற உறுதிப்பாட்டில் உமையவனை நொடிப்பொழுதும் விலகாது
வணங்கி வந்தார்
தமக்கை திலகவதியார்.
ஒருநாள்
திலகவதியாருக்கு காலையிலிருந்தே
மிகுந்த மன சஞ்சலம். ஏதோ நடக்கப் போகிறதென்று
மனம் கூச்சலிட்டது.
அது
நல்லதற்கா
கெட்டதற்கா என்று
அறிய முடியாது தவித்து
முற்றுமுணர்ந்தோனிடம்
முழு பாரத்தையும்
இறக்கி வைத்துவிட்டு கண்ணீருடன் ஐந்தெழுத்தைத் துதித்தபடி
மடம் திரும்பினார் திலகவதி.
மனக்கவலை
எழும் போது
தனக்குவமை இல்லாதானைத் தொழுதால்
மனக்கவலை நீங்கி விடும் என்று அறிந்திருந்தும் கூட கண் கலங்கிய நிலையிலேயே உறங்கியும் போனார்.
கனவில் வந்தார்
கயிலாய நாதர்.
"குழந்தாய்.....!
என்னை வந்தடைய வேண்டுமென்று
போன ஜென்மத்திலே உன் தம்பி
கடுந்தவம் புரிந்தான்.
வினைப்பயன்
காரணமாக
இப்போது
இந்த ஜென்மத்தில் தான் அவன் பிரார்த்தனை
கைகூட உள்ளது.
கவலைப்படாதே...
உன் தம்பி
சூலை நோய் கண்டு உன்னிடம் ஓடி வருவான். துடிதுடித்து
உன் மடி சாய்ந்து
உருகி அழுது
உன் தயவால்
என்னடி வருவான்.
என்னடி விழுந்தவன் உரிய காலத்தில்
உயர் 'திரு' பெற்று சிவநெறிச் செல்வனாய் சிவனடியார் போற்றும் நாயனாராய்
எக்காலமும் என்னருகே இருப்பான்."
என கனவில்
சொல்லி மறைந்தார் சொக்க நாதர்.
கண் விழித்த
திலகவதியாருக்கு மகிழ்ச்சி
பொங்கிய போதும்
தம்பி சூலை நோயால் சுருண்டு துன்புறுவானே என கவலை வந்தது. கண்ணீரும் வந்தது.
அதே நேரம் -
பாடலிபுத்திரத்தில்
இருந்த
தர்மசேனருக்கு
கடும் சூலை நோய் தாக்கியது.
தீயென சுழற்றிச் சுழற்றி சுட்டெரிக்கும் கடும் வயிற்றுவலியே சூலை நோய்.
வலி தாங்க முடியாமல் அரற்றினார் கதறினார் தருமசேனர்.
உடனிருந்த சமணத்துறவிகள்
சமண சமயத்தில் சொல்லப்பட்டிருந்த அத்தனை
மருத்துவ முறைகளையும் கையாண்டு பார்த்தார்கள்.
மயிற்பீலி கொண்டு
உடல் முழுக்க நீவினார்கள்.
மந்திரித்த நீரைப்
பருக வைத்தும்
உடல் முழுக்கத் தெளித்தும் பார்த்தனர். கற்ற வித்தைகளை
ஒன்று விடாது
செய்து பார்த்தனர்.
ஊஹூம்...
ஏதும் பலிக்கவில்லை.
தர்மசேனரோ பரிதவித்தார்.
சூலை நோய்
வயிற்றினுள் நெருப்பெனத்
திரண்டு பெருந்தீயாக எரிந்தது.
தாங்க முடியாமல் தருமசேனர்
துடிதுடித்தார்.
பார்க்க சகிக்காமல் அவரை விட்டு
விலகத் தொடங்கினர் சமண மருத்துவர்கள்.
அது காலம்
வேகமாக வளர்ந்து
வந்து கொண்டிருந்த
தங்கள் சமயத்தில்
அதீத ஞானியாய்
அறியப்பட்டிருந்த தர்மசேனரின்
சூலை நோயைக் குணப்படுத்த
சமண சமயத்தால்
முடியவில்லை என்னும் அவப்பெயர் வந்து விடுமே என்ற பயமே
அவர்களை அவ்விதம்
விலகச் செய்தது.
சமணத் துறவிகளும் சமயம் பார்த்து விலகினர்.
ஒவ்வொருவராய்
விலக விலக
தனி ஒருவனாய்
தனித்துப் போனார் தருமசேனர்.
தனிமையின் விரக்தியில் தருமசேனர் இருந்தபோது தமக்கையை நினைத்தார்.
சமணம் முற்றிலுமாக கைவிட்ட நிலையில் சமண சமயத்தில் நம்பிக்கை இழந்தார்.
சைவ சமயம் தான்
தனக்கேற்ற
தக்க சமயம் என உள்ளுணர்வால் உணர்ந்தார்
தர்மசேனராய்
உலவிவந்த மருள்நீக்கியார்.
தமக்கு நம்பிக்கையான வேலையாள் மூலம் திலகவதியாருக்குத்
தகவல் அனுப்பி
தன்னை வந்து தடுத்தாட்கொண்டு காத்தருளக் கோரினார்.
சிவ மடத்தில் இருந்த திலகவதியார்
பெரிதாக மறுத்துவிட்டார்.
'பிறிதொரு சமய மடத்தில் நான் கால் வைக்க மாட்டேன்.'
என தம்பி பாசத்தை மீறி தன் சிவக் கோட்பாட்டை உறுதியாகச் சொன்னார்.
தமக்கையிடமிருந்து
வந்த தகவல் மருள்நீக்கியாருக்கு அருள்வாக்கு சொன்னது போலிருந்தது.
உடனே
சமண சமயக் கோலத்தைத்
தூக்கி எறிந்தார். வெள்ளுடை தரித்தார்.
யாருக்கும் சொல்லாமல் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு வேளையில் வேலையாள்
தோள் சாய்ந்து
தமக்கையின்
திருமடம் இருக்கும் திருவதிகைக்கு
வந்து சேர்ந்தார்.
திலகவதியாருக்கு
இது சிவபிரானின் திருவிளையாடல் என நன்கு தெரியுமாதலால் நிறைந்த மனதுடன் தம்பியைத் தாங்கிப்பிடித்து மடத்திலும் மனதிலும் இடம் கொடுத்தார்.
மறுநாள் அதிகாலை கோயிலுக்குச் சென்று
சுத்தம் செய்து
தண்ணீர் தெளித்து கோலம் இட்டு
மலர் பறித்து மாலையாக்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்
திலகவதியார்
கை பிடித்திருந்த தம்பியுடன்.
தம்பியும்
சும்மா இல்லை.
நெற்றியில்
கீற்று கீற்றாய் திருநீறு. உடல் முழுக்க
பட்டை பட்டையாய் திருநீறு.
கழுத்திலே உத்திராட்சம்.
வாய் மணக்க பஞ்சாட்சரம்.
புதிதாய்
பிறந்தவர் போல்-
மறு ஜென்மம்
கண்டவர் போல்
மருள் நீக்கியார்
வீரட்டானேசுவரர் திருக்கோயில் நுழைந்து இறைவனிடம்
சரண் அடைந்தார்.
"எம்பெருமானே...! தங்களையும்
மதத்தையும் இகழ்ந்தேன். கொடுமைகள் பல செய்தேன்.
ஒருமுறை
கோதாவரிக் கரையில் சாதுக்களிடம் வாக்குவாதம் செய்து சமண சமயத்தின் உயர்வை
நிலைநாட்டினேன்.
இக்குற்றங்களுக்கு கூற்றுவனே
சூலைநோய்
வடிவில் வந்து சித்திரவதை
செய்தபடி இருக்கிறான்.
உயிர்போகும் வலி. தாங்கமுடியவில்லை.
உரிய வழிகாட்டி
என்னைத்
தாங்கிக் கொள்ளுங்கள்.
ஆண்டவரே...!
இனி தாங்களே
எனது ஒரே புகலிடம்.
தங்கள்
தாமரை போன்ற திருவடிகளை எப்போதும் என் இதயத்தில்
வைத்துப் போற்றுவேன்.
இது சத்தியம்."
என்றபடி கண்மூடி தியானித்தார்.
என்ன ஆச்சரியம்...!
மருள் நீக்கியார்
கண் திறந்த போது வயிற்றைச் சூழ்ந்து
பற்றி எரிந்து கொண்டிருந்த
தீக்கனல் குளிர்ந்து
சூலை நோயே
முற்றிலுமாக விலகியிருந்தது.
அவரையும் அறியாமல் தமிழில் செய்யுள் பாடும் அருளாற்றலும் கிட்டியது.
மருள்நீக்கியார் இறைவனைப் பாட ஆரம்பித்தார்.
'கூற்றாயினவாறு விலக்ககிலீர்'என்ற
முதலடியோடு துவங்கும் தேவாரத் திருப்பதிகத்தை அப்போதுதான் பாடினார்.
அதேசமயம்
சன்னதியில்
ஓர் அசரீரி ஒலித்தது.
அது
மருள்நீக்கியாருக்கும் திலகவதியாருக்கும் கணீரென்று கேட்டது.
"அன்பனே....!
இன்று முதல்
சொல்லுக்கு அரசர்
என்ற பொருள்பட 'திருநாவுக்கரசு' என்று அழைக்கப்படுவாய்.
உன்புகழ் பிரபஞ்சம் முழுதும் பரவும்."
அசரீரி கேட்ட திலகவதியார்
பேரின்பம் கொண்டார்.
திருநாவுக்கரசர்
அதுமுதல்
திருநீரும் கண்டிகையும் புனைந்து
உருத்திராட்சம் அணிந்து நெஞ்சில்
அஞ்செழுத்தை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார்.
வாக்கு
தமிழ் பதிகம் பாடவும் உடம்பு
உழவாரத் தொண்டு புரியவும் அர்ப்பணமானது.
திருநாவுக்கரசரும் திலகவதியாரும்
பேரின்பப் பெருவாழ்வை உணரத் தொடங்கினர்.
அது நேரம்
ஆடல்வல்லான் திருநாவுக்கரசரை
மேலும் சோதித்து
மேலும் மெருகூட்டி அவரின் கீர்த்தியை உலகறியச் செய்யவும் சைவம் ஓங்கவும் விளையாட்டாய்
ஒரு திட்டம் தீட்டினார்.
இறைவனின் விளையாடல்
விதி ரூபத்தில் வந்தது.
பாடலிபுத்திரத்தில் பெருமிதத்தோடு
பவனி வந்து கொண்டிருந்த
சமணத் துறவிகளுக்கு தருமசேனரின்
தாய் மதம்
திரும்பிய நிகழ்வு
பேரதிர்ச்சியைத் தந்தது.
அவர் மீண்டும்
சைவம் திரும்பியது கோபமூட்டியது.
இப்படியே போனால் சமண சமயத்திற்கு பின்னடைவு ஏற்படும். சைவம் மீண்டும்
தழைக்கத் தொடங்கி விடும் என பயந்தனர்.
இத்தகவலை
பல்லவ மன்னன் அறிந்தால் தங்களைத் தண்டிப்பான்
என அஞ்சினர்.
ஒருகால்
மீண்டும் அவனும்
சைவ கொடியைத்
தூக்கிப் பிடித்தால்
எப்படி சமணம் வளர்ப்பது என கூடி கூடிப் பேசினர்.
அரசன்
மதம் மாறினால்
சமணம் அவ்வளவுதான் என அஞ்சி விவாதித்தனர்.
அரசன் வழங்கி வந்த மான்யமும் மரியாதையும் இழந்து தங்கள்
மதம் வளர்க்கும் திட்டங்கள் பாழாகும்
என குமுறினர்.
'சமண சமயத்தவருள் முதன்மையானவரான தர்மசேனருக்காக மனமாற்றம் ?
மதமாற்றம்!'
என அரசன்
வினா தொடுத்தால்
என்ன பதில் சொல்வது என்று ஆலோசனை நடத்தினர்.
ஒரு புதுக் கதையை கட்டிவிட்டால்
சிறிது காலம் தள்ளலாம் எனக் கணக்குப் போட்டனர்.
அதற்கு ஏற்ற
சதிச் செயலில் இறங்கினர்.
திருநாவுக்கரசர்
திட்டமிட்டு
சைவம் விடுத்து
சமணம் வந்து
சூலை நோயால் பாதிக்கப்பட்டு சிவனருளால் மீண்டதாக
பொய் கதைகள் பரப்பி சமணத்திற்கு எதிராக
சதி செய்வதாக
மன்னன் காதில் போட்டு சமயப் போருக்கு வித்திட்டனர்
சமண குருமார்கள்.
(திருநாவுக்கரசு நாயனார் புராணம் -தொடரும்)
Leave a Comment