திருநாவுக்கரசு நாயனார் புராணம் (பாகம்- 1)
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமுனைப்பாடி நாடு .
வெண்மையாற்றுப் பாசனத்தால்
பசுமை படர்ந்த
வள நாடு.
சிவ தலங்கள்
பல நிறைந்த
சிவனருள் நாடு.
சைவ சமயக் குரவர் நால்வரில்
முதலிருவர் அவதரித்த தெய்வத் திருநாடு.
அந்நாட்டில்
திருவாமூர் என்னும்
ஒரு திருத்தலம்.
அத்திருத்தலத்தில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் பிறந்த புகழனார்
அழகிற் சிறந்த
மாதினியார் என்னும் மங்கை நல்லாளை மணந்து
ஊர் போற்றும்
இல் வாழ்க்கை
நடத்தி வந்தார்.
இவ்வாழ்க்கையின் நற்பயனாக
திருமகளை ஒத்த தெய்வாம்சத்தோடு
ஒரு பெண் மகவு பிறந்தது.
திலகவதி
எனப் பெயரிட்டு
பெருமிதமாய் வளர்த்தனர் பெற்றோர் இருவருமே.
அடுத்து பிறந்தது
ஓர் ஆண் குழந்தை.
பிறந்த போதே
அதன் முகம்
அத்தனை பிரகாசம்.
மருள்நீக்கியார்
எனப் பெயரிட்டு அழைத்தனர்
தந்தையும் தாயும்
சுற்றமும் உறவும்.
மருள் நீக்கியார்
என்பதற்கு
அறியாமை என்னும் இருளை நீக்குபவர்
என்று பொருள்.
மருள் நீக்கியார்
இளம் சூரியன் போல் இருளகற்றி
ஞான ஒளி வீசும்
ஞானக் குழந்தையாக விளங்கினார்.
வைத்த பெயருக்கு ஏற்றவாறு
மருள்நீக்கியார் அறியாமை எனும்
இருள் நீங்கியவராய்
இளம் பிராயத்திலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
சாஸ்திர சம்பிரதாயங்களில் சான்றோர் மெச்சும் விற்பன்னராக இருந்தார்.
அக்கால மரபுப்படி திலகவதியாருக்கு
12 வயதிலேயே
திருமணம் நிச்சயமானது.
பல்லவ மன்னனின் படைத் தலைவராக இருந்த கட்டிளங்காளை கலிப்பகையார்
மணமகனாய் நிச்சயிக்கப்பட்டார்.
கலிப்பகையார்
அன்பும் வீரமும்
காதலும் காமமும்
கலந்த ஆவலோடு திலகவதியைத்
திருமணம் புரியக் காத்திருந்தார்.
பொருத்தமான ஜோடி என்று ஊரே
கண் வைத்த வேளையிலே
வட தேசத்து மன்னர்கள் திருமுனைப்பாடி
மண்மீது
பேராசை கொண்டு
போர் தொடங்கினர்.
உக்கிரமான போர்
நீண்ட நாட்கள்
நீண்டதால்
மன்னர்
கலிப்பகையாரை
களம் இறக்கினார்.
கலிப்பகையார்
போர் புகுந்த பின்னர் களை கட்டியது
யுத்தம் களம்.
இருதரப்பும் களத்தில் எதிரிகளைக் கணக்கில்லாது
காவு வாங்கி
உளம் மகிழ்ந்தது.
மகளின்
கல்யாண வேலைகளில் கனவுகளோடு
கவனம் செலுத்திக் கொண்டிருந்த
புகழனாருக்கு
போரை ஒட்டிய
தகவல்கள்
சற்று கலக்கத்தைத் தந்தது.
காரணம் அவரது உடல்நலம் முன்புபோல் ஒத்துழைக்கவில்லை.
தனது காலத்திற்குள் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தார்.
ஆனால் காலன்
அவர் கணக்கை பொருட்படுத்தவில்லை. அவரது கணக்கையே
முடித்து விட்டான்.
ஆம்...
அமரர் ஆனார்
புகழனார்.
மாதரசி மாதினியார் தொடர்ந்து வாழ விரும்பவில்லை.
காலன்
பறித்துக்கொண்ட கணவனுடனேயே
தானும் பயணித்துவிட விருப்பம் கொண்டார்.
இரு குழந்தைகளைப் பற்றிக் கூட சிந்திக்காமல் சுற்றம் உறவு பாராமல் கணவனின் சிதை கனன்று எரியும் போதே உடன்கட்டை ஏறி
உயிர் துறந்தார்.
தந்தையின் மரணமும் தாயின் 'சதி'யும் குடும்பத்தையே
உருக்குலைத்தது.
அழுது அழுது
கண்ணீர்
தீர்ந்து கொண்டிருந்த வேளையில்
காலனின் கணை போர்க்களத்தில் போராடிக்கொண்டிருந்த கலிப்பகையாரின் மார்பில் பாய்ந்தது.
வீர மரணம் எய்தினார் பல்லவனின் படைத்தலைவர்.
மணக்கோலம்
காண வேண்டியவர் போர்க்கோலம் பூண்டதால் முடிவில்
பிணக் கோலம் பெற்றார்.
திக்கற்றவர்களாயினர்
திலகவதியும் மருள்நீக்கியாரும்.
தாய்க்குச் சளைத்தவராய் இருக்கவில்லை
தமக்கை திலகவதி.
அவருக்கும்
நெஞ்சில் நிறைந்திருந்த கலிப்பகையாரோடு
உயிர் நீக்கவே ஆசையிருந்தது.
"தம்பி....!
என்னை
மணக்கா விட்டாலும் தீர்மானிக்கப்பட்ட
கணவர் தானே கலிப்பகையார்?
எனது
உடலும் உயிரும் அவருக்குரியதே!
அவர் போன பின்னே எனக்கு எதற்கு வாழ்வு? அம்மா வழியில்
நானும் செல்கிறேன்.
யுத்தகளத்தில்
வீர மரணம் எய்திய
என் கண்ணாளனுடன் செல்லத்தான் வாய்ப்பில்லை.
அவர் உடன் இல்லாத உடன்கட்டைக்கு
ஏற்பாடு செய்.
நான்
உடன் கட்டைத் தீ புகுந்து
எனது மணவாளருடன் மேலுலகிலாவது இணைகிறேன்."
தம்பி
மருள்நீக்கியாரைக்
கட்டி அழுதார் திலகவதியார்.
இதை சற்றும்
எதிர்பார்க்காத
பாலகர் மருள்நீக்கியார் அக்காளின் கால்களில் அப்படியே விழுந்தார்.
"தமக்கையே...!
அம்மாவிற்குப்
பின்னர் மட்டுமல்ல அதற்கு முன்னரும்
எனது
இன்னொரு தாயாக விளங்கிவரும்
அன்பு அக்காவே !
நீ இல்லாத உலகம் எனக்கு மட்டும் எதற்கு ? நானும் உடன் வருகிறேன்"
தம்பி
பேசியதைக் கேட்டு
துடித்துப் போனார் திலகவதி.
"தம்பி....!
நீ வாழ வேண்டிய தெய்வப்பிறவி.
நான் சாக வேண்டிய
அற்பப் பிறவி."
என்றவாறே
தம்பியை அணைத்துக் கதறினார்.
மனம் பதறினார்.
"நீ கண்டிப்பாக வாழவேண்டும் தம்பி..!"
"அப்படியானால்
நீங்கள் எனது
தாயாக இருந்து
வழி நடத்தவேண்டும்."
மருள்நீக்கியார் அடம்பிடித்தார்.
விடாது கால் பிடித்து
மெய் துடிக்க அழுதார்.
திலகவதியார்
திடமனதைத்
தள்ளி வைத்து
தடம் மாறினார் தம்பிக்காக.
மட மனது
மாறி விடக்கூடும்
என்று கருதி
ஒரு வைராக்கியத்தை
மனதிடமே வைத்தார்.
கைம்பெண் போல
வெண் புடவை
உடுத்தினார்.
கருத்தாய் காத்தருளும் செங்கண்ணரின் திருவடிகள் பற்றினார்.
இளம்பெண் எனினும் துறவுக் கோலம்.
சிவபக்தியில்
சிவ சிந்தனையில்
சிவ வழிபாட்டில் சிந்தனையைச்
செலுத்த ஆரம்பித்தார்.
காலம்
மெதுவாக நகர்ந்தது.
மருள்நீக்கியார் பெற்றிருந்த
முற்பிறவி அறிவு தற்காலத்தில்
கற்றிருந்த
வேத சாஸ்திர அறிவு ஆகியவற்றால்
மென்மேலும்
சிறந்திருந்தார்.
போதாக்குறைக்கு
நோயிலிருந்த தந்தையின் திடீர் மரணம்
தாயின் எதிர்பாராத உடன்கட்டைச் சாவு
மைத்துனராய்
வரவிருந்த
கலிப்பகையாரின் வீரமரணம் மருள்நீக்கியாருக்கு அனுபவரீதியாக வாழ்க்கையின் நிலையாமையை
எளிதாகச்
சொல்லித் தந்தன.
செல்வ நிலையாமையையும் உள்ளுணர்ந்து
தமக்கையின் ஆலோசனையோடு
அறப்பணிகளில் ஈடுபடலானார்.
மாந்தருக்குத் தண்ணீர்பந்தல்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சோலைகள்.
வற்றா நீருக்கு குளங்கள். விருந்தினரை உபசரித்தல்.
புலவருக்கு
வாரி வழங்குதல்.
ஏழை எளியோருக்கு
உற்ற நேரத்தில்
உரிய வகையில் உதவுதல் என அவரது
அறச்செயல்கள்
நீண்டன. விரிந்தன.
பரந்துபட்டன.
ஆனால்
இவை எதுவும் மருள்நீக்கியாரின்
மனத் தேடலுக்கு நிறைவைத் தரவில்லை.
அவரது
இறைத் தேடல்
சிறகு விரித்தது.
சமயங்களில்
சிறந்த சமயம் எது
எனத் தேடியது.
பல சமயங்களைப்
புகுந்து ஆய்ந்தார்.
ஆராய்ச்சிகள்
அலசல்கள்
அவரை ஓரிடத்தில்
நிலை நிறுத்தியது.
அந்த இடம்
சமண சமயம்.
சமண சமயத்தின் அகிம்சைக் கொள்கை அவரை ஆரத் தழுவியது.
சமண சமயமே
வீடு பேறு அளிக்கும் என உறுதியாக நம்பினார்.
தடுமாறிய மனம்
தடம் மாற்றி அவரை
மதம் மாறச் செய்தது. இடம் மாறவும் வைத்தது.
பிறந்த
திருமாவூரை விட்டு உடன்பிறந்த
தமக்கையை விட்டு சமணர்களின்
புகலிடமான பாடலிபுத்திரத்திற்கு இடம்பெயர்ந்தார்.
சைவ சமய நூல்களைக் கசடற கற்றிருந்த மருள்நீக்கியார்
சமண நூல்களைக் கற்று பாண்டித்தியம் பெற்றார்.
இரு சமயமும் கற்றறிந்து
தம் சமயம் சார்ந்து நிற்கும் சமண அறிஞராய் மருள்நீக்கியாரைப் போற்றி
சமண சபைகளில் முன்னிறுத்தினர் பாடலிபுத்திர
சமணத் துறவிகள்.
மருள்நீக்கியார் தருமசேனர்
என்ற புதுப் பெயருடன்
மத ஆசிரியராய்
வலம் வர ஆரம்பித்தார்.
சமண சமயத்தின் ஆன்றோர்களும் சான்றோர்களும் சமணராய் மாறியிருந்த அரசாளும்
பல்லவ மன்னரும்
மன உச்சியில் வைத்து தர்மசேனரைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தம்பி
மதம் மாறிவிட்டால் தமக்கையும் அவர் பின் சென்று விடுவாரா என்ன!
திலகவதியார்
மனமுடைந்தார்.
எந்நாட்டவரையும்
காக்கும் சிவனிருக்க வேறு எவரையும் வணங்க அவர் மனமும்
சிரமும் கரங்களும்
சிறிதும் விரும்பவில்லை.
திலகவதியாரும் திருவாமூரில் வசிக்க விருப்பமின்றி
சிவத்தடம் பற்றி
இடம் மாறினார்.
கெடில நதிக்கரையில் திருவருள் திகழ்ந்த திருவதிகைக்கு இடம்பெயர்ந்தார்.
அங்கு
வீரட்டானம் தலத்தில்
ஒரு மடம் நிறுவி
சிவ புண்ணியங்களைத் தொடர்ந்து வந்தார்.
அத்தலத்தில் கருணையோடு கொலுவீற்றிருக்கும்
வீரட்டானேசுவரரை தொழுதபடி அன்றாடம் திருக்கோயிலைச்
சுத்தம் செய்வார். பிரமாண்ட கோலமிடுவார். வண்ண வண்ண
மலர் பறிப்பார்.
இறையே மயங்கும்
மாலை சூட்டுவார்.
கனிந்துருகி இறைவனை எந்நேரமும் தொழுவார். மனதோரம் தேங்கியிருந்த இரத்த உறவான மருள்நீக்கியாருக்கு
நற்புத்தி தரவேண்டி அன்றாடம்
வேண்டுதல் வைப்பார்.
வீரட்டானேசுவரர் திலகவதியாரின் சரணாகதியையும்
சிவ சேவைகளையும் அன்றாடம் கண்டு ஆனந்தம் அடைவார்.
ஆயினும்
அவருக்கு உதவ
தக்க நாளுக்காக காத்திருந்தார்.
(திருநாவுக்கரசு நாயனார் புராணம் -தொடரும்)
Leave a Comment