மனமும், உடலும் அமைதி கொள்ள சில எளிய ஆன்மீக வழிகள் இதோ!
சாப்பிடும் போது எப்போதும் முழு வயிறும் நிரம்பும் படி சாப்பிட கூடாது. கால் வயிறு காலியாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். இடை இடையே தண்ணீர் குடிக்க கூடாது. கட்டாயம் பழம் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது எவர்சில்வர், அலுமினிய தட்டை தவிர்த்து, மந்தாரை, வாழை இலைகள் அல்லது வெள்ளி தட்டில் சாப்பிடுவது நல்லது.
ஆண், பெண் இருபாலரும் இரவினை தவிர்த்து புகையிலை இல்லாத தாம்பூலம் போடுவது நலம் தரும். நவீன மெத்தைகளை தவிர்த்து வெறும் தரை, கோரை பாய், மரப்பலகைகளில் உறங்குவது நல்லது. ராத்திரி சூக்தம் என்கிற ஸ்லோகத்தை உச்சரித்து உறங்க செல்வது நிம்மதியான உறக்கத்தை தரும்.
இன்று எதிலும் கலப்படம், எல்லாவற்றிலும் ரசாயனம் இதிலிருந்து நம்மை காத்து கொள்ள தினமும் வில்வம், அருகம்புல், வேப்பிலை, துளசி, கரிசலாங்கண்ணி இவைகளில் கிடைத்த வரை சிறுக சிறுக உடலுக்குள் எடுத்து கொள்வது நலம். உங்களால் முடிந்த சிறு சிறு பொருட்களை தினமும் சிறுவர், சிறுமியர்களுக்கோ, இயலாதவர்களுக்கோ தானம் செய்வதை வழக்கமாக்கி கொண்டால் உங்களது மனம் சொல்ல முடியாத அளவிற்கு அமைதியை தேடி தரும். வாழும் போதும் சரி, வாழ்ந்து மடிந்து மண்ணுக்குள் சென்ற பின்னாலும் சரி, நீங்கள் செய்த நல்லவைகள் தான் துணையாய் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாரம் ஒருமுறை சிவாலயம் சென்று நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி நந்தி தேவரின் காதில் சென்று மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்களது உள்ளம் நாளடைவில் தூய்மை பெற்றுவிடும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. இல்லத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று மன அமைதியை சீர்குலைத்தால் எதிர்மறை தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதாக அர்த்தம். வீட்டின் தளத்தில் சேர்ந்திருக்கும் தூசுகள் கூட இந்த விளைவை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. உடனே அவற்றை நீக்கி சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு விடுங்கள்.
வில்வ மரம் மற்றும் வேப்ப மரத்தை தம்பதியர்களாக அடிப்ரதக்ஷணம் செய்தால் ஒற்றுமை ஓங்கும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தேங்காயில் கற்பூரம் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்து உடைத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
விளக்கு ஏற்றி தர்பை பாய் அல்லது பலகையில் அமர்ந்து தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் அதன் ஒளியை பார்த்தபடி தியானம் செய்ய வேண்டும். விண்ணில் தெரியும் நட்சத்திரம் பார்த்தபடி இதே போல் நட்சத்திர தியானம் செய்வது ஆன்மீக ரீதியாக அளப்பரிய பலன்களை தரும் என்பது பலரும் அறியாத ரகசியமாகும். இதனால் நட்சத்திர அதிபதிகள் நன்மைகளை வாரி வழங்குவார்கள்.
வெள்ளரிக்காய், கேரட், பாகற்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி இவைகளை சாரு எடுத்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது மட்டும் இல்லாமல் ஆன்மீக பலன்களையும் நல்கும் என்கிறது சித்த நூல்கள். அவசர யுகத்தில் வழிபாடுகள் செய்ய முடியாவிட்டாலும் முடிந்த போது ஆலயங்களில் கிரிவலம் வருவது முக்தியை பெற்று தரும்.
நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவையற்ற வேலைகளை செய்யாமல் குடும்பத்துடன் இறை வழிபாடுகள், இறை நாமங்களை உச்சரித்து வருவது பலன் தரும். வேதங்கள், பாசுரங்கள், அருட்பாக்கள் பாடியவர்கள் இறைவனின் அருளை பெற்றுள்ளார்கள். நம்மில் எத்தனை பேர் இவற்றை படிக்கிறோம்? அவர்கள் அருள் பெற்ற தலங்களுக்கு சென்று கால் பதித்து வந்தாலே போதும். மோட்சம் கிட்டும்.
Leave a Comment