வரங்களை அள்ளித் தரும் 'வரலட்சுமி நோன்பு'.... கலசம் அமைப்பது முதல் பூஜை செய்வது வரை....


மகாலட்சுமியே நேரில் வந்து தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்த மிகச்சிறந்த ஒரு விரதமுறை ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருபவர்களும், ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆரம்பிப்பவர்களும் உண்டு. இந்த விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையவும், மற்றவர்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்பு ஓங்கவும் கடைபிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும். 

மகாலட்சுமியை கலசம் அமைத்து முகம் வைத்து அல்லது அதற்கு பதிலாக தேங்காய் வைத்து அழகாக அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைப்பது வழக்கம். புதிதாக ஆரம்பிப்பவர்கள் அல்லது இதை பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை. மகாலக்ஷ்மியின் படம் வைத்து அவர்கள் வழிபடலாம். கலசம் அமைப்பவர்கள் தொடர்ந்து மூன்று வருடம் இந்த பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மகாலட்சுமியை முந்தைய நாள் வீட்டிற்கு அழைப்பது உண்டு. இல்லையேல் விரதம் அன்றைய நாள் அழைத்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.


கலசம் அமைக்கும் முறை:
பூரண கும்பத்தில் தோன்றிய மகாலட்சுமியை கும்பத்தில் எழுந்தருளச் செய்ய கலசம் அமைப்பார்கள். பித்தளை, வெள்ளி, தங்கம், செம்பு ஆகிய உலோகங்களில் ஒரு கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம் அல்லது அரிசி நிரப்பி வைக்கலாம். தண்ணீர் ஊற்றுபவர்கள் அதனுள் மஞ்சள், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள், வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி நிரப்பி வைக்க வேண்டும் என்றால் அரிசியுடன் ஒரு சிறிய அளவிலான பொட்டலத்தில் பருப்பு போட்டு வைக்க வேண்டும். அவற்றுடன் ஒரு ரூபாய் நாணயம், எலுமிச்சைபழம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கு, பூ, கருகமணி ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும்.

பின்னர் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து நடுவே கலசத்தின் மீது தேங்காயை மஞ்சள் தடவி குங்குமம் பொட்டு வைத்து மகாலட்சுமியின் முகமாக ஆவாகனம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் திருமுகம் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. வாங்கி அழகாக அலங்கரித்து கொள்ளலாம். மகாலட்சுமிக்கு பட்டு பாவாடை அல்லது பட்டு புடவை, ரவிக்கை போன்றவற்றால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பம் போல கம்மல் மாட்டுவது, வளையல் போடுவது, சவுரி முடி தரிப்பது போன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த அளவிற்கு அழகாக மகாலட்சுமியை உருவகப்படுத்த முடியுமோ! அந்த அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மஹாலக்ஷ்மியை அழைக்கும் முறை:

கலசம் அமைப்பவர்கள் கலசத்தை தயார் செய்து அதனை ஒரு மனையின் மீது அமர்த்த வேண்டும். மனையை அலங்கரித்து மஞ்சள் தடவி கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது வாழை இலை விரித்து நெல்மணி அல்லது பச்சரிசி பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது கலசம் அல்லது நீங்கள் தயார் செய்த மகாலட்சுமியின் படம் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். மனையுடன் அப்படியே கொண்டு போய் வெளியில் வாசற்படியில் வைக்க வேண்டும். முந்தைய நாள் மகாலட்சுமியை அழைப்பதாக இருந்தால் வியாழன் கிழமை அன்று மாலை அலங்காரம் செய்து வாசலில் ஒரு கற்பூரம் ஏற்றி மகாலட்சுமியை எழுந்தருளும்படி உங்களுக்கு தெரிந்த முறையில் ஆவாகனம் செய்யுங்கள்.

பின்னர் வீட்டிற்குள் அழைத்து வந்து நீங்கள் எந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய நினைக்கிறீர்களோ! அந்த இடத்தை கோலமிட்டு அலங்காரம் செய்து மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அழைப்பவர்கள் இதே முறையில் அழைத்து வந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய நாள் அழைப்பவர்கள் வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து எளிமையான முறையில் அன்று பூஜைகளை முடித்து கொள்ளலாம்.
 



Leave a Comment