உருத்திர பசுபதி நாயனார் புராணம்
- "மாரி மைந்தன்" சிவராமன்
காவிரி பாயும்
சோழவள நாட்டில்
ஆன்மிக வளம்
நிறையப் பெற்ற திருத்தலம்
திருத்தலையூர்.
மறை ஓதும் வேதியர்கள் நிறைந்த ஊர் என்பதால் சதாகாலமும் தவ ஒளியும் சிவ மணமும் ஓங்கி
உலகளந்து இருக்கும்.
வேதமந்திரங்கள் காற்றோடு கலந்து
விண்ணோடு சேர்ந்து மழை நன்கு பொழியும். தாமரைத் தடாகங்களும் நறுமணச் சோலைகளும் சிவ வேள்விகளும்
தலப் பெருமை சொல்லும்.
திருத்தலையூர் மக்கள் 'திருவருள்' சிந்தனையோடு
இரவும் பகலும் திளைத்திருப்பர்.
தர்மமும் நீதியும் அம்மக்களின்
கண்களாகக் காட்சியளித்ததால் கடவுளின் பார்வையும் அவ்வூரில் எந்நேரமும் நீக்கமறப் பதிந்திருக்கும்.
அவனன்றி
ஓர் அணுவும் அசையாதே!
வேதம் ஓதும்
வேதியர் குலத்தில்
ஒரு வேத மகான் அவதரித்தார்.
அவரின் திருநாமமே உருத்திர பசுபதி நாயனார்.
அவரது பெயர்
ஒரு காரணப் பெயர்.
உருத்திர மந்திரத்தை என்நேரமும் ஜெபிக்கும் காரணத்தால்
அப்பெயரே அவருக்குத் தெய்வாம்சமாய்
அமைந்து போனது.
உருத்திர மந்திரம் இடைவிடாது
ஜெபிப்பவர்
இறைவனடி சேர்வர் என்பதற்கு
ஓர் உதாரண புருஷர்
உருத்திர பசுபதி நாயனார்.
அவரது
தொழிலும் தொண்டும் உருத்திர மந்திரத்தை உள்ளம் உருக உச்சரிப்பதே.
வேறொன்றும்
அவருக்கென்று இல்லை.
உருத்திரன் என்றால் 'துன்பத்தில் இருந்து விடுவிப்பவர்'
என்று பொருள்.
உருத்திர
மந்திரத்தின் சூட்சமம் இறையம்சமும் மறையம்சமும்
நிறைந்தது.
இறைவன்
எல்லாமுமாய்
எங்குமாய் இருந்து
அருள் புரிகின்றவன்
என்ற உண்மையை உணர்த்தும் அடிநாதமே உருத்திர மந்திரம்.
சற்று விரிவாகப் பார்த்தால்
உருத்திர மந்திரத்தின்
உண்மை முகம்
உள்ளத்தில் புலப்படும்.
வேதங்கள் நான்கு.
ரிக், யஜூர்,
சாமம்,அதர்வணம்.
அதர்வண வேதம்
என்பது மற்ற மூன்று வேதங்களான
ரிக் யஜுர் சாமம் ஆகியவற்றின் திரட்டு.
பிரதான வேதங்களான ரிக் யஜுர் சாம வேதங்களின் நடுவில் இருப்பது யஜூர்.
யஜூர் வேதம்
ஏழு காண்டங்கள் கொண்டது.
இதை
எல்லாம் வல்ல சிவபெருமானின்
சிரசு எனக்கொள்ளலாம்.
இந்த
ஏழு காண்டங்களின் இடையில் பதினொன்று அநுவாகங்களாக இருப்பதே திருவுருத்திரம்.
இப்படியும் உணரலாம்.
வேதத்தின்
இதயம் பஞ்சாட்சரம்.
வேதத்தின்
கண் திருவுருத்திரம்.
கண்மணியே
திருஐந்தெழுத்து.
சுருங்கச் சொல்லின்
வேதத்தில்
திருவுருத்திரமே
மேன்மை உடையது.
அதனுள்
பஞ்சாட்சரமே மாண்புடையது.
அதனுள் 'சிவ'
என்னும் இரண்டு எழுத்துக்களே மேன்மையானவை.
திருவுருத்திரம்
ஓதுவதால்
மலங்கள் அகன்று
முழுத்தூய்மை
அடையலாம் என்பதே எளிய வேத சூத்திரம்.
உருத்திர பசுபதி நாயனார் திருத்தலையூரில்
ஓர் அழகிய
தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில்
குழைந்த உள்ளத்துடன்
நீரிடை நின்று
கூப்பிய கைகளும்
குவிந்த மனமுமாய் வேதங்களில் உள்ள
திருவுருத்திர மந்திரத்தை இடைவிடாது ஜெபிப்பார்.
காலை மாலை
இரவு என பேதமின்றி வேறு நினைவு இன்றி ஓதுவார்.
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கே சிவந்த வடிவுடைய உருத்திர பசுபதியாரின் திருமேனி
நெருப்பு போலவும் சிரத்தில் உள்ள சிகை புகை போலவும் ஏகாந்தமாய் காட்சியளிக்கும்.
தொலைவில் இருப்பவர்களுக்கே அப்படிப்பட்ட காட்சி என்றால்
அவ்வூரைக் காத்தபடி
அவரைக் கவனித்தபடி அருகிலேயே இருக்கும் பசுபதி நாயகருக்கு எப்படி காட்சி அளித்து இருப்பார் !
பரமனையே பரவசப்படுத்தும் ஸ்ரீருத்திர வேதம். அவ்வேதமே
மாதொருபாகனுக்கு
மனிதராய் காட்சியளிக்கும்
மகோன்னத திருக்காட்சி.
அன்றாடம் பார்த்து பரவசமான
பார்வதி நாயகன்
ஒரு நன்னாளில்
உருத்திர பசுபதி நாயனாருக்குத் தேவியுடன் காட்சியளித்து உடன் அழைத்துச் சென்றார்....
நாயன்மார்கள் துதித்தொழுகும்
சிவனாரின் சிவபுரிக்கு.
எம்பிரானின்
மகத்துவமே இதுதான்.
சிவத்தொண்டு புரிந்து சிவனே என்று வாழ்ந்து
சிவனடி சேர விழையும்
சிவனடியார்களுக்குச்
சோதனை தந்தும் தடுத்தாட் கொள்வார்.
சில சமயங்களில்
சில அடியவர்களின்
சிவத்தொண்டில் லயித்து திருவிளையாடல்
ஏதும் புரியாமல்
எடுத்தாட்கொள்வார்.
எல்லாமும் அறிந்த
எங்கும் நிறைந்த
ஏக நாதனின்
திருப்பார்வையும் கருணையும்
எந்நேரம் எவருக்கு
எப்படிக் கிடைக்கும் என்பதை
உணர்த்த வல்லது நாயன்மார்கள் புராணம்.
அதில்
வித்தியாசமானது உருத்திர பசுபதி நாயனார் புராணம்.
ஆம்...பசுபதி நாயனார்
ஸ்ரீருத்ர ஜெபம்
செய்து வந்ததால்
இறையடி சேர்ந்தவர்.
புரட்டாசி மாதம்
அசுவினி நட்சத்திரத்தில் உருத்திர பசுபதி நாயனாரைப்
பூசித்து வழிபட்டால் அவரைப் போன்றே
பிறப்பறுக்கும் பெருவாழ்வு கிட்டும்.
சிவனடியே சிவபுரியே
உடனடியாய்
அருளாற்றல் பொழிந்து
அரவணைத்துக் கொள்ளும்.
'உருத்திர பசுபதிக்கும் அடியேன்' - சுந்தரர்.
திருச்சிற்றம்பலம்.
Leave a Comment