ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு
ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டாலும் அவற்றுள் சில நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்பதால், திருவாடிபூரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.மங்கையர்களுக்கு அரசியான அந்த அம்மனுக்கு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறும்.
ஒருமுறை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வந்த வளையல் வியாபாரி ஒருவர், பாதி வளையல்கள் விற்றுவிட்டு பெரியபாளையம் என்கிற கிராமத்தை கடந்து செல்லும்போது, அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாமல் சோர்வடைந்த அவர், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு சுற்றுமுற்றும் தேடினார்.
அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றி,“நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.
தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் அந்த வளையல் வியாபாரி. அத்துடன் அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் கிராம மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
வைணவத்தில்,ஆண்டாள் தோன்றிய தினமே ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள் என்பது நம்பிக்கை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார் தோன்றிய ஆடிப்பூரம் நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கினால் மங்களங்கள் யாவும் கைக்கூடும்.
திருவாடிப்பூர தினத்தன்று எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.
ஆண்டாள் திருப்பாதமே சரணம் ......
Leave a Comment