அகிலாண்டேஸ்வரர் சுடலையில் கூத்தாடும் காரணம் என்ன?
பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி, "சுவாமி! உலகங்கள் அனைத்தும் உருவாக்கும் அகிலாண்டேஸ்வரரான தாங்களே ஆனந்தமாக மாளிகைகளிலும் நந்தவனங்களிலும் வாசம் செய்யாமல் அகோரமான மயானத்தில் வசிப்பது ஏன்? அனேக ஆயிரம் பிணங்களைச் சுடுவதாகவும், எலும்பு, கொழுப்பு, இரத்தம், மாமிசம் முதலியவற்றினின்று துர்நாற்றம் வீசுவதாகவும் பூதம், பிரேதம், பைசாசங்கள் குடியிருப்பதும், காகம், கழுகு, பருந்து முதலிய பறவைகளும் செந்நாய் முதலிய மிருகங்களும் வாசம் செய்வதும் பிரேத மந்திரங்களை உச்சரிக்கும் இடமாயும் உள்ள மயானத்தில், நீர் யானைத் தோலையும் புலித்தோலையும் உடுத்தி பிரம கபாலத்தையே மாலையாகப் பூண்டு எப்போதும் அட்டகாசஞ்செய்து மூவுலகங்களும் நடுங்கச் சிரித்துக் கூத்தாடிக்கொண்டு பித்தம் பிடித்தவரைப் போல வசிப்பது ஏன்? வேதங்களுக்கும் எட்டாத வடிவினரான உமக்கு அந்தச் சுடுகாட்டில் பிரியம் ஏற்பட காரணம் என்ன? உம்முடைய மயான வாசத்தைக் கருதி, என்மனம் சுழல்கிறது. சர்வ தேவ மயமாகவும், சர்வ தேவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும் மகா தேவராயும் விளங்கும் உமக்கு இது யுத்தம் இல்லயென்று நினைக்கிறேன்.
இது எனக்கு ஆச்சரியமும் துக்கமும் ஊட்டுகிறது. அவ்விஷயம் சொல்லக் கூடாத விஷயமாக பரம ரகசியமாக இருந்தாலும் உம் பக்தையும் பிரியையுமான எனக்குத் தாங்கள் உணர்த்தியருள வேண்டும்!" என்று கேட்கவே சிவபெருமான் மலர்ந்த முகத்துடன் உலக மாதாவான பார்வதி தேவியை நோக்கிச் சொல்லித் துவங்கினார்.
"உமாதேவியே! உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் பிரளயமானது நான்கு வகைப்பட்டு நிகழ்கிறது. அவை நித்தியம் நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்தம் என்பனவாம். நித்தியம் என்பது தமக்கு அளவிட்ட காலங்கழிய இருத்தலாகும். நைமித்திகம் சிற்சில காரணங்களால் பலர் குழுமி இருத்தலாகும். பிராகிருதம் பிரம கற்பத்தில் ஒழிதலாகும். ஆத்தியந்தம் என்பது இவ்வாறு அழிந்தழிந்துத் தோன்றும் தேகிகள் யாவும் முக்தியடையும்படி சர்வ சங்கார காலத்தில் அண்டாண்ட பிரமாண்டங்களையும் பிரமாதி தேவர்களையும் தானவ யக்ஷ கருடாதி கணங்களையும் எல்லாவற்றையும் அழிக்கத் தக்கதாய் பஞ்சபூதங்களில் ஒன்றால் சங்கரித்து, யாவும் அழியும்படி ஒருவனாக நின்று சங்காரகிருத்தியஞ் செய்வேன். அப்போது நீ ஒருத்தியேயாக என் அருகில் இருப்பதால் அச்சமயத்தில் நான் நடனஞ் செய்யவும், நீ என் நடனத்திற்கு ஏற்ப கைத்தாளம் போடவுமாக இருப்போம்.
அவ்வாறு அந்தப் பெருந்தேவர்களது உடல்கள் விழுந்துகிடக்கும் மயானம் முழுவதும் சுற்றி நடனம் செய்வதால் எனக்குச் சுடலையாடி என்றதொரு பெயர் வழங்கும். அதுவுமின்றி ஒரு காலத்தில் நான் மயானத்தில் ஆனந்தமான நடனஞ் செய்து கொண்டிருக்கையில் பற்பல பூத வேதாளங்களெல்லாம் தாளம் போட்டுக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தன. அந்தச் சமயத்தில் விஷ்ணு பல தேவர்களுடன் கூடி, அங்கு வந்து என்னைக் கண்டு மகிழ்ந்து, 'ஐயனே! இவ்வண்ணம் இங்கு நடனஞ்செய்வதும், பூதப் பிரதேசப் பைசாசடாகினி சாகினிகள் பாடவும் தாளம் போடவும் கொக்கரிக்கவும் கூத்தாடவும் இருப்பது மிகச் சிறந்ததுதான். அவ்வாறு செய்யாவிட்டால் இக்கணங்கள் பூவுலகமெங்கும் பரவி பலரையும் துன்புறுத்தும். அவை துன்புறுத்தாதவாறு உமக்குத் தொண்டு செய்வனவாக இருப்பதே உத்தமமான செயலாகும்' என்று பலவாறு புகழ்ந்து கூறினார்கள்.
அவர்களில் விஷ்ணு என்னை நோக்கி, 'சிவ மூர்த்தியே! சகல பாவங்களையும் ஓடும்படிச் செய்வதாலும் எல்லோரையும் பயப்படுத்துகிற பூதப் பிரேத பைசாசாதிகளையும் அழச்செய்வதாலும் ருத்திரன் என்றும் சங்கரன் என்றும் ஹரன் என்றும், கால ரூபியாக இருந்து உலக காரியங்களையெல்லாம் நடத்துவதால் காலன் என்றும், பிரளய காலத்தில் சகல லோகங்களையும் வயிற்றினுள் அடக்கும் வல்லமையால் ஸர்வன் என்றும், உற்பத்தி காலத்தில் காமபிஜத்தைக் கொண்டே முக்குணங்களையும் லோகங்களையும் படைத்ததால் பவன் என்றும், உக்கிரமான யாகங்களாலும் திருப்தியடைவதால் உக்கிரன் என்றும் பூமி முழுவதற்கும் உற்பத்திக் கர்த்தாவும் சர்வதேவ பூஜ்யனாயும் மகத்திற்கு மகத்தாயும் விளங்குவதால் மஹாதேவன் என்றும் விளங்குகிற விமலரே! ஆக்கல், காத்தல், அழித்தல் என்பனவற்றை இயற்றுவிக்கும் ஆற்றலுடைய மகாதேவரே! நீர் இவ்வண்ணம் மயானத்திலேயே எப்பொழுதும் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டும்' என்று பலவாறு பிரார்த்தித்தார். அவ்விஷ்ணுவும் அவருடன் வந்து தேவர்களும் செய்த வேண்டுகோளுக்கு இணங்கி, மயானத்தையே எனக்கு வசிக்கும் இடமாகக் கொண்டேன்.
மேலே சொன்ன பெயர்களில் எனக்கு விருப்பம் அதிகமாக உண்டு. அப்பெயர்களைக் கொண்டு, என்னைப் பூஜித்தவர்கள் தேவர்களால் பூஜிக்கப்பட்டு உயர் பதவியை அடைவார்கள். இப்பெயர்களை மனப்பாடம் செய்தவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.
நானே காலரூபி. நீயே காளராத்திரி. என் ரூபத்தை நீயே அறிவாய். உன் சொரூபத்தை நான் அறிவேன். நீயே நாராயணனாகவும் விளங்குகிறாய். ஆகையால் நீயும் நாராயணனும் சமமானவர்கள். நீயும் நானும் சமமானவர்கள். யாவும் நானேயாக விளங்குகிறேன். அநேக புண்ணிய ஸ்தலங்களைவிட எனக்கு மயானத்தில் விருப்பம் அதிகம். புண்ணிய ஸ்தல, புண்ணிய தீர்த்த பயன்களையெல்லாம் மேற்கூறிய நாமங்களை ஸ்மரித்தவர்களுக்கு நான் தருவேன். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு வாசித்தவர்கள், சகல பாவங்களும் நீங்கி இஷ்ட போகங்களை அனுபவிப்பார்கள்" என்று சிவபெருமான் கூறினார், என்று வியாஸ முனிவருக்கு ஸநத்குமார முனிவர் எடுத்துரைத்தார்.
Leave a Comment