ஆடி பெருக்கு ஸ்பெஷல் தேங்காய் ரெசிபி!


ஆடி 18 அன்று என்ன செய்வார்கள் என்று தெரியாது. தற்போது பலரது வீடுகளில் வீட்டில் தீபம் ஏற்றி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு வருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் முன்பெல்லாம் ஆடி 18 அன்று ஆறு, குளம், கிணறு போன்ற பகுதிகளின் ஓரங்களில் மஞ்சள் விநாயகரைப் பிடித்து வைத்து, ஆடிப் பெருக்கு தேங்காய், மஞ்சள் கயிறு போன்றவற்றை வைத்து பூஜித்து, திருமணமான பெண்கள் அந்த மஞ்சள் கயிற்றை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு, ஆடிப் பெருக்கு தேங்காயை குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்வார்கள்.

சரி, அந்த ஆடி பெருக்கு ஸ்பெஷல் தேங்காய் ரெசிபியை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்து, ஆடி 18 அன்று தேங்காய் சுட்டு சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் – 2

* பச்சரிசி – 1/2 கப்

* வெல்லம் – 1/2 கப்

* பொட்டுக்கடலை – 1/4 கப்

* எள்ளு விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காயைச் சுற்றியுள்ள நாரை நீக்கி, நீரில் நன்கு கழுவி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசியை நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தேங்காயில் உள்ள மூன்று கண்களில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காயினுள் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பின்பு அதில் பொடி செய்யப்பட்ட வெல்லம், பொட்டுக்கடலை, அரிசி, எள்ளு விதைகள், ஏலக்காய் பொடி, சர்க்கரை மற்றும் பாதி தேங்காய் நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.தேங்காய் முழுமையாக நிரப்பப்பட்டதும், பெருவிரலால் துளையை மறைத்துக் கொண்டு, தேங்காயை நீரில் கழுவுங்கள்.

பின் அந்த துளையை நீளமான மற்றும் துளையை அடைக்கும் தடிமன் கொண்ட குச்சிக் கொண்டு அடைத்து, 1 மணிநேரம் ஊற வைத்திருங்கள்.அதன் பின் அந்த தேங்காயை நெருப்பில் காட்டி, நன்கு சுட வேண்டும். குறிப்பாக தேங்காய் கருப்பாக மாறும் வரை நெருப்பில் வாட்டி எடுங்கள். இப்போது சுவையான ஆடி பெருக்கு ஸ்பெஷல் தேங்காய் ரெசிபி தயார்.
 



Leave a Comment