சண்டேசுர நாயனார் புராணம் (பாகம் - 2)


-மாரி மைந்தன் சிவராமன்


விசார சருமரின் 
மனதில் ஒரு 
கற்பனைக் காட்சி தினம்தோறும் 
எழுந்த வண்ணம் இருந்தது.

அது நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்தது.

ஒரு நாள் - 
மண்ணியாற்றங்கரையில் 
ஓர் அத்திமர நிழலில் மணல் விளையாட்டினூடே
மண்ணினால் 
ஒரு சிவலிங்கம் அமைத்தார்.

சிவத் திருமேனியை
பாதுகாப்பாக வைக்க  
மணல் கோபுரம் கட்டினார்.

நாற்புறமும் 
வாயில் அமைத்து 
உள்ளே
சிவலிங்கத்தை
வைத்து அழகு பார்த்தார்.

கோயிலைச் சுற்றி மணலால் மதில் அமைத்தார்.

விசார சருமர் 
சிறுபிள்ளை தானே!
மண் விளையாட்டாக வெண்மணல் 
கோயிலே கட்டி விட்டார்.

பலத்த காற்று அடித்தாலோ
கரையேறி ஆற்றுநீர் வந்தாலே
மேய்ந்து திரும்பிய பசுக்கள் மிதித்தாலோ  நொடியில் சிதைந்துவிடும் மணற்கோயில்.

விசார சருமரின் 
மண் விளையாட்டு விளையாட்டு நாயகனின் மன விளையாட்டுக்கு 
முன் எம்மாத்திரம் ?

அஞ்செழுத்தானின் விருப்பப்படி 
அடுத்த ஆசை 
விசார சருமருக்கு 
மனதில் எழுந்தது.

உடனே 
ஆற்றுக்குச் சென்று திருமஞ்சன நீர் கொணர்ந்தார்.

அத்திப்பூக்களையும் 
பசும் தளிர்களையும் முல்லைப் பூக்களையும் நொடிப் பொழுதில் சேகரித்தார். 

நீர் ஊற்றி 
அபிஷேகம் செய்து 
பூக்கள் தூவி 
அலங்கரித்து 
அர்ச்சனை செய்ததைக் கண்ணுற்ற 
பெருத்த 
மடி பசுக்கள் 
விரும்பி வந்து 
பால் சொரிந்தன பரம்பொருள் மீது.

அடுத்தடுத்த நாட்களில் பூசைகள் வெகு விமர்சையாயின.

விசார சருமர் 
புதிய குடங்கள் வாங்கினார்.

வற்றாத மண்ணியாறு புனிதநீர் தந்த மாதிரி வள்ளல் பெரும்பசுக்கள் 
மடிக்காம்பு தொட்டாலே
பால் மழை பொழிந்தன. 

வேடிக்கை என்னவெனில் அப்பசுக்கள் 
மண்ணாலான பசுபதிக்குப் 
பால் வார்த்த 
பின்னரும் கூட 
அந்தணர் வீட்டிலும் அளவுக்கு அதிகமாக 
பால் தந்தன.

நன்றாகத்தான் 
நடந்து கொண்டிருந்தது நீள்சடையானுக்குத் 
தினப் பூசை.

ஒருநாள் 
அவ்வழியே வந்த ஊர்க்காரன் ஒருவன் இதைப் பார்த்தான்.

விசார சருமர் 
குடம் குடமாய் 
பால் கறந்து 
பாலை மண்ணில் 
ஊற்றி விளையாடி வீணாக்குவதாக அவனுக்குப் பட்டது.

வந்த வேகத்தில் அந்தணர்களிடம் ஓடினான்.

"இடையனைத்
குற்றம் சொல்லி 
மாடு மேய்க்க வந்தவன் உங்கள் அனைவரையும் மடையர்களாக்கி விட்டு மண்ணில் கொட்டி பசும்பாலைப்
பாழாக்குகிறான்!"

அடித்துச் சொன்னான் ஆத்திரம் பொங்க. வெடித்து போயினர் பசுக்களை வளர்க்கும் மறையோதும் அந்தணர்கள்.

வந்தவனை விட்டே
விசார சருமரின் 
தந்தை எச்சதத்தனை வரவழைத்தனர்.

"இவன் சொல்வதைக் கேட்டாயா ?

 உன் மகன் 
எங்களுக்கு மட்டும் 
மோசடி செய்யவில்லை. சிவபிரானுக்குச் சேரவேண்டிய 
பாலை வீணடித்து 
இறைவனுக்கே துரோகம் செய்திருக்கிறான்." 

கோபம் தலைக்கேற குமுறித் தள்ளினர்.
தந்தை எச்சத்தனுக்கு
அவர்களை விட 
கோபம் மிகுந்தது.

சொந்த சமூகத்தினர் முன்பு அவமானம் பிடுங்கித்தின்றது.
நாக்கைப் பிடுங்கிச்
சாகச் சொன்னது.

"பெரியவர்களே.... இதுவரை நடந்ததற்காக - - எனக்காக 
அவனை மன்னியுங்கள்.

என் குலத்தைச்
சபித்து விடாதீர்கள்.

இனிமேல் தவறு நடந்தால் நானே பொறுப்பேற்கிறேன்.

கடவுளே எங்களைத் தண்டிக்கட்டும்."

தலை குனிந்தபடி விடைபெற்றார்
மகனை மோசடிக்காரன் என்று செவிமடுத்ததால் துடிதுடித்த தந்தை.

அன்றிரவு 
சிவபூசை சிறந்திருந்த மகிழ்வோடு 
விசார சருமர் 
வீடு திரும்பியபோது 
வீடு அமைதியாக இருந்தது.

தந்தையும் தாயும் பேசவில்லை. களைத்திருந்த 
விசார சருமர் 
காலையில் 
கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து 
தூங்கி விட்டார்.

மறுநாள் காலை பசுக்களுடன் 
பாலகர் 
மேய்க்க கிளம்பிவிட்டார்.

கலங்கிய மனத்துடன் தந்தை எச்சதத்தன் 
மகன் அறியாமல் 
பின் தொடர்ந்து 
மரம் ஒன்றில் ஏறி நடப்பதைக் கவனிக்க தொடங்கினார்.

விசார சருமரின் மேய்க்கும் பணி 
மாலை வரை  போற்றும்படி தான் இருந்தது.

அந்தணர்கள் கேள்விப்பட்டது 
'பொய்' எனச் சொல்லி 
எச்சதத்தன்  புறப்பட்டபோது  
குடமும் பூக்கூடைகளும் எடுத்தபடி விசார சருமர் ஆற்றோரம் போனார்.

அதிர்ந்த தந்தை 
அடுத்து நடப்பதை 
கோபம் வெளிப்பட
கூர்ந்து
பார்க்கத் தலைப்பட்டார்.

ஒரு குடத்தில் 
மண்ணியாற்று 
புனிதநீர்.
மறுகையில் 
பூக்களும் 
பசும் தளிர்களும் 
நிறைந்த பூக்கூடை.

இரண்டையும் 
மணற்பரப்பில் வைத்துவிட்டு 
மணலால் 
லிங்கம் அமைத்து கோபுரம் கட்டி 
மதில் அமைத்து காத்திருந்தார் 
விசார சருமர். 

கனைத்தபடி வந்த 
கனத்தமடிப் பசுக்கள் குடங்கள் அருகே சென்று முலை தளர்த்தி 
பால் பொழிந்தன.

சில பசுக்கள் 
விசார சருமரை 
நாவால் மேவி அழைத்து காம்பு தொடச் செய்து குடம் நிரப்பின.

பாலாபிஷேகம்
நீர் அபிஷேகம் செய்து பூவலங்காரம் முடித்து ஐந்தெழுத்தை ஓதியபடி தியானத்தில் ஆழ்ந்தார் விசார சருமர்.

தந்தை எச்சதத்தனுக்கு எல்லையில்லா கோபம்.

மகனின் 
அற்புத பக்தியை 
அறியாத தந்தை 
மரம் இறங்கி 
அருகிலிருந்த 
கோலை எடுத்தபடி 
பூசையிலிருந்த 
மகனருகே வந்தார்.

உச்சி முதல் 
உள்ளங்கால் வரை 
ரத்தம் வேகமெடுக்க கையிலிருந்த கோலால் வேகம் குறையாமல் தடித்த சொற்களுடன் அடிக்க ஆரம்பித்தார் எச்சதத்தன்.

நிஷ்டையில் இருந்த விசார சருமர் 
ஒருமித்து இருந்த 
இறை தவிர எதையும் உணரவில்லை.

அருகிலிருந்த 
பசுக்கள் கூட 
எச்சதத்தனை நோக்கி வேகமாக ஓடி வந்தன முட்டி மோதி விரட்ட.

தனது பலத்தஅடிகள் எதுவும் மகனுக்கு உறைக்கவில்லை என கோபமுற்ற எச்சதத்தன் என்ன செய்வது
என்று புரியாது கோபத்தின் விளிம்பில் பால்குடத்தை காலால் எட்டி உதைத்துத் தள்ளினார்.

இறைவனுக்கான பாலுக்கு 
இடையில் இடையூறு நேர்வதை உணர்ந்த விசார சருமர் 
தியானம் நீங்கி கண்விழித்தார்.

எதிரே தந்தை...!
உடைத்து இருப்பதோ சிவபூசை...!!
உதைத்திருப்பதோ பால்குடம்...!!!

தந்தையே என்றாலும் எல்லோருக்கும் 
தாயும் தந்தையுமாய் இருக்கிற 
ஆதிமூலத்தை 
அவமதித்து விட்டாரே!

சிவனுக்கான 
பால் குடத்தை 
மிதித்து விட்டாரே! 

விசார சருமருக்கு 
கோபம் வந்தது.

'யாராய் இருந்தால் என்ன? சிவ அபராதத்திற்கு யாரும் விலக்கில்லை' என்று நினைத்தவாறு, 
சிவ தண்டனைக்கு தந்தையாக இருந்தாலும் தப்பி விடக்கூடாது 
என முடிவெடுத்தார் நொடிப்பொழுதில்.

கையருகே இருந்த 
பசு மேய்கும் கோலெடுத்து பால் குடத்தை எட்டி உதைத்த எச்சதத்தன்
கால்களின் மீது வீசினார்.

ஆனால் 
அக்கோலோ
கோடாரியாக மாறி பிதாவும் குருவும் பிராமணனுமாகிய 
தந்தை எச்சதத்தனின்  கால்கள் இரண்டையும் துண்டுகள் ஆக்கியது.

துவண்டு விளைந்த எச்சதத்தன் துடிதுடித்து மாண்டு போனார்.

அதுசமயம்
ஒரு பேரொளி எழும்ப பூதகணங்கள் சூழ 
இடப வாகனத்தில் இறைவன் இறைவியுடன்  அருட்காட்சி தந்தார். 

"குழந்தாய்....!
 என் பொருட்டு 
உன் தந்தையின் கால்களை வெட்டி 
உயிர் பறித்தாய்.

இனி உனக்குத் 
தந்தை நானே!

இனிமேல் 
நம் பூதகணங்களுக்கு தலைவராக விளங்குவாயாக!

சிவபுரியின் 
உயர்ந்த பதவியாகிய 
'சண்டீசன்' பதவியை உனக்கு அளிக்கிறேன்.

நீ எனக்கு 
உணவு படைத்தாய். உடையும் 
மலர் மாலையும் அணிவித்தாய்.

என்னை வழிபட்ட 
நீயும் இம்மாதிரி 
வழிபடப் படுவாய்.

இனி நான் 
உண்பன உடுப்பன 
சூடுவன அனைத்தும் உனக்கும் ஆகுக!

அதன் பொருட்டே 'சண்டீசன்' ஆகும் பதவியை உனக்குத் தந்தேன்..."

என்றபடி ஆரத்தழுவி தனது திருக்கரங்களால் விசார சருமருக்கு  
தனது கழுத்திலிருந்த 
கொன்றை மாலையை எடுத்து அணிவித்தார்.

அனைத்து
உலகங்களில் உள்ளவரும் 'ஹரஹர' என முழங்க வானவர் பூ மழை பொழிய பல்லாயிரம் கணநாதர்கள் பாடியும் ஆடியும் மகிழ வேதங்கள் துதிக்கப்பட பற்பல வாத்தியங்கள் வாழ்த்திசைக்க
பரமன் விடைபெற்றார்.

ஈசனின் ஈடில்லா விளையாட்டால்  சண்டீசன் 
பதவி பெற்றதால்  தந்தையைக்
கொன்ற பாபம் 
விசார சருமருக்குச் சேரவில்லை.

இறைவனின் சித்தப்படியே 
பால் குடத்தை 
எட்டி உதைத்ததால்
மகனாலேயே கொலையுண்டு போன எச்சதத்தனுக்கும்
தீங்கேதும் நிகழவில்லை.

எச்சதத்தனும்
சிறப்பு பரிசாக 
அவரது சுற்றத்தாரும் இறையருளால் 
முக்தி பெற்றனர்.

இறைவனே வழங்கிய 'சண்டீசன்' பதவி பெற்ற விசார சருமர் 
சண்டிகேசுவரராக சண்டேசுர நாயனாராக  சிவாலயங்கள் தோறும் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

விசார சருமர் 
சண்டேசுர நாயனாரானதற்கு 
சிவநெறியும் சிவபூசையுமே முழுக்காரணம்.

சண்டேசுர நாயனாரை திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர் 
ஆகிய 
சமயக் குரவர் நால்வரும் புகழ்ந்து பாடி 
துதி செய்தது
சண்டேசுர நாயனாரின் கீர்த்தியை
உலகறியச் 
செய்யவல்லது.

சண்டி பெருமானுக்கு அடியேன் - சுந்தரர்

திருச்சிற்றம்பலம்.
 



Leave a Comment