சண்டேசுர நாயனார் புராணம் (பாகம்- 1)
- "மாரி மைந்தன்" சிவராமன்
பொதுவாக சிவாலயங்களில் ஆதிநாதர் அருள்பாலிக்கும் கருவறைக்கு இடப்பக்கத்தில்
எம்பிரான் அருகிலேயே சண்டிகேசுவரருக்கு
ஒரு சிறு சன்னதி தனியாக இருக்கும்.
கோயிலைச் சுற்றி வரும்போது சண்டிகேசுவரரை வணங்கும் தருணம்
விரல் சொடுக்கியோ
மெலிதாகக் கைதட்டியோ ஆடையில் இருந்து
சிறு நூலைப் பிரித்து அவர் முன் போட்டு கைவிரித்து
அருள் பெற வேண்டுவது பக்தர்களின் வழக்கம்.
சண்டிகேசுவரரை 'செவிட்டுச்சாமி'
என்று நினைத்து சிற்றொலி எழுப்புவது பலரின் நம்பிக்கை.
சிறு நூல் பிரித்து அவர்முன் போட்டு
கை விரித்துக் காட்டுவது திருக்கோயிலில் இருந்து சிவன் சொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என காண்பிப்பது பழங்காலம் தொட்டு இருக்கும்
ஒரு வழிபாட்டு முறை.
அவரிடத்தில்
ஆடை நூல் பிரித்துப் போட்டால்
பன்மடங்கு பெரிதான புத்தாடை கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.
இப்படியெல்லாம் வழிபடுவதைத்
'தவறு.... வெற்றுச் சடங்கு' என்று வாதிடும்
கற்றறிந்தார் உண்டு.
எந்நேரமும்
தவத்தில் இருக்கும் சண்டிகேசுவரரை
சப்தம் எழுப்பாமல் வணங்க வேண்டும் என்பர் புராணம் அறிந்தோர்.
இதற்கெல்லாம்
மேலான சிறப்பம்சம் ஒன்றும் உண்டு.
சண்டிகேசுவரர்
சிவனின் அம்சம்.
'சண்டீசன்'
என்னும் இறை பதவி
சிவனே வழங்கிய சிவபதவி.
அதற்கும் மேலாய்
ஓர் அதிசயம் உண்டு.
சண்டிகேசுவரர் என்னும் 'சண்டேசுரர்'
ஒரு நாயனார்.
ஆம்....
சண்டிகேசுவரர்
ஒரு நாயனார். சமயக்குரவர் போற்றும்
'சண்டேசுர நாயனார்'.
"உனக்கு இனி
நானே தந்தை" என்று உலகநாயகன்
உவந்து வழங்கிய உரிமைச் சாசனம்
பெற்ற பேறு பெற்றவர் சண்டிகேசுவரர் என்னும் சண்டேசுர நாயனார்.
நெல் விளையும் சோழநாட்டில்
நல் நதியாம்
மண்ணியாற்றின் தென்கரையில்
அமைந்த திருநகரம் திருச்சேய்ஞலூர்.
சோழர்காலம்
செழிக்க வந்த
அபிநாய சோழரின் மூதாதையர்கள் முடிசூட்டிக் கொண்ட தலைநகரங்கள்
ஐந்தனுள் ஒன்று திருச்சேய்ஞலூர்.
முன்னாளில்
கிரவுஞ்கிரியைப் பிளந்து தன் வேலாயுதத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தி
சூரபத்மன் முதலான அசுரர்களை கொன்ற குமரக்கடவுள் விரும்பி நிர்மாணித்த திருநகரே திருச்சேய்ஞலூர்.
அதுசமயம்
முருகப் பெருமான்
ஓர் இரவு தங்கி
தந்தை சிவபிரானைப் பூசித்த பெருமை திருச்சேய்ஞலூருக்கு உண்டு.
இந்நகரில்
பிராமண குலத்தில்
காசிப கோத்திரத்தில்
பிறந்தவர் எச்சதத்தன்.
பவித்திரை என்னும் பாவையை மணந்து இனியதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் எச்சதத்தனார்.
இருவரின் பிரார்த்தனைகளின் பலனாக
இறவாப் புகழ்பெற்ற
ஓர் ஆண்மகவு பிறந்தது.
பெயர் விசார சருமர்.
விசார சருமர்
பால பருவத்திலேயே
பல ஓதாது உணர்ந்தார். ஓதியும் உணர்ந்தார் சில.
காரணம்
விட்ட குறை
தொட்ட குறை போல் முற்பிறவி ஞானம் அவருடன் ஒட்டி
ஒளி வீசியது.
பிறவி மேதையான
விசார சருமர்
ஐந்து வயதிலேயே
வேதம், ஆகமங்கள் அனைத்தும் கற்றுணர்ந்தார்.
சீடரின் விவேகம் குருவுக்குப்
பெருமை தந்தது.
விசார சருமரைத் 'தெய்வப்பிறவி'
என்று போற்றி
மகிழ்ந்தார் குருநாதர்.
விசார சருமர்
ஐந்து வயதிலேயே
கேட்போர்
வியந்து போற்றும் வகையில்
நான்கு வேதங்களையும் நயம்பட உரைத்தார்.
அரிய விளக்கம் தந்தார்.
ஏழுவயதில்
உபநயனம் நடந்தது.
சொல்லிக் கொடுக்க
வந்த குருமார்கள்
எட்டாத ஞானத்தை நோக்கி
விசார சருமனார்
பயணித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள்-
சக வேத பாடசாலை மாணவர்களுடன்
வேத விசாரணை செய்தபடி தெருவில் சென்றுகொண்டிருந்தார் விசார சருமர்.
அப்போது
அவர் கண் முன்பு
நடந்த ஒரு
கொடூர சம்பவம்
அவரைக்
கலக்கமுறச் செய்தது.
வேறொன்றுமில்லை.
இடையன் ஒருவன் பசுக்களை
ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கையில் துள்ளி குதித்த
கன்று ஈன்ற பசு ஒன்று இடையனை
முதுகில் மெதுவாக
முட்டித் தள்ளியது.
கடும் கோபமுற்ற இடையன்
முட்டிய மாட்டை
எட்டிப் பிடித்து
பலமாக அடிக்க ஆரம்பித்தான்.
அப்பசு
பயந்து ஓடியும்
அடி தாங்காமல் துடிதுடித்துக் கனைத்தும் களைத்தும் போனது.
ஆனால்
அவன் அடிப்பதை
நிறுத்த வில்லை.
இது கண்ட
விசார சருமர்
விரைந்து ஓடி இடையனின் கைகளைத் தடுத்துப் பிடித்து
அவன் கையிலிருந்த கோலைப் பறித்து வீசி கனிவோடு
அவன் கண் நோக்கி கோபம் தணிக்க முயன்றார்.
அவனோ
அடித்துக் கொண்டிருந்த பசுவை
விரட்டிப் பிடித்து
மிரட்டி வைக்கவே யத்தனித்தான்.
"அறிவில்லாத மூடனே...!
பசுவைப் போய்
அடித்து வதைக்கிறாயே?
பசு தெய்வீகமானது. வணங்கத்தக்கது.
தேவாதி தேவர்கள் பசுவின் உடலில்
குடி கொண்டு இருக்கிறார்கள்.
இறை பூசைக்கு
பசுவின்
பால் தயிர் நெய்
மூத்திரம் சாணம் முதலான
பஞ்ச கவ்வியங்களே
உதவி புரிகின்றன.
சாணம் மூலமாக
விபூதி தருவது பசுக்களே.
கோயிலில் மட்டுமல்ல சமயச் சடங்குகளிலும்
முக்கிய அங்கம் வகிப்பது பசுக்களே.
பசுக்களை அன்போடு பேணிக்காத்தல்
நமது கடமை.
பசு காத்தலே
ஒரு சிறந்த சிவநெறி.
பாவியே....
உனக்குத் தெரியுமா ?
பசுக்களை துன்புறுத்துவோருக்கு நரகம் நிச்சயம்.
பசுக்களை வணங்குவோருக்கு விண்ணுலகம்
அல்லது
வீடு பேறு சத்தியம்.
பசுவதைத்து
நீ பெரிய பாவம்
செய்து விட்டாய்...!
இனி நீ
பசுக்களை
மேய்க்கத் தகுதியில்லாதவன்.
இத்தொண்டை
இனி நானே செய்வேன்..!"
என தலைகுனிந்த இடையனின்
வேலைக்குத் தடைபோட்டு அடுத்து
அவன் வேலைக்கும் வேட்டு வைத்தார்.
பசுக்களை வளர்க்கும் அந்தணர்களிடம்
சென்று பேசி
தான் நல்ல முறையில் மேய்த்துத் தருவதாக வாக்குறுதி தந்தார்.
அந்தணர்கள்
அகமகிழ்ந்து சம்மதிக்கவே
அடுத்த நாள் தொட்டு
பசு மேய்க்கும்
தெய்வீகப் பணியை விசார சருமர்
அன்புடனும்
ஆதரவுடனும்
மேற்கொண்டார்.
அன்றாடம்
மண்ணியாற்றுக்
கரையில் இருக்கிற காடுகளுக்கு
பசுக்களை ஓட்டிச் செல்வார்.
வயிறாரப் புற்களை
மேயச் செய்வார்.
வெய்யில் நேரத்தில் தாகம் தீர
தண்ணீர் கொடுத்து இதமாகத் தடவிக் கொடுத்து
சுகம் கூட்டுவார்.
களைத்த பசுக்களை
அடர் நிழலில்
ஓய்வு பெறச் செய்வார்.
ஒவ்வொரு பசுக்களையும் அன்யோனியம் புரிபட
பெயர் சொல்லி அழைப்பார்.
அவற்றோடு பேசுவார். பாடிப் பரவசப் படுத்துவார் கூடிக் குலாவுவார்.
பசுக்கள்
விசார சருமரைத்
தம்மை மேய்ப்பவராக
நினைக்காமல்
உலக மக்களை
உய்விக்க வந்துதித்த
நல் மேய்ப்பராக
உணர்ந்து மகிழ்ந்தன.
விசார சருமரின் மேய்க்கும் திறன் கண்ட அந்தணர்களுக்கு பெருமகிழ்ச்சி.
இராப்பகல் இரு நேரமும் பால் கறக்கும் நேரத்தில் வீடு வரும் பசுக்கள் முன்னை விட அதிகம் பால் தந்தன.
கன்றுகள்
முட்டி முட்டி
பால் குடித்தே
களைத்தன.
பசுக்கள்
கன்று அருகில்
இல்லை என்றாலும்
குடம் குடமாய்
பால் தந்தன.
சில பசுக்களோ
மடி அருகே பால் குடத்தை கொண்டு சென்றாலே அருவி போல்
பால் பீய்ச்சின.
அந்தணர்கள்
வளர்த்து வந்த
பசுக்களின்
பால் பெருக்கம் காரணமாக
சிவனாருக்கு
அதிகப் பால் குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது.
மாட்டுச் சாணம் தந்த திருநீறு பூசை மாதொருபாகன்
மனம் மகிழ நடந்தது.
பஞ்சகவ்வியத்தின்
பால் மனம் மாறா நறுமணத்தில் திருச்சேய்ஞலூரே திளைத்திருந்தது.
விசார சருமரின்
அரவணைப்பில் இருந்த பசுக்களின் பஞ்சகவ்வியம்
பசுபதி நாதரையும் திக்குமுக்காட வைத்தது.
விளைவு ?
எம்பிரானுக்கு
விசார சருமரிடம்
விளையாடல் புரிந்து
சோதிக்க
எண்ணம் வந்தது.
அவரது
சிவ வேட்கையை உலகறியச் செய்து தன்னுடனேயே
வைத்துக் கொள்ள
ஆசை வந்தது.
அதேசமயம்......
(சண்டேசுர நாயனார் புராணம்- தொடரும்)
Leave a Comment