அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன்  தரும் வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்.....


வரலட்சுமி விரதம் பிறந்த கதை.... 

மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும் வசித்துவந்தனர். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள்.

சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லட்சுமி, தன்னை வரலட்சுமியாக வழிப்பட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாள். தாயாரே எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி அம்மனை வழிபட்டாள். வரலட்சுமியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.

வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

வரலட்சுமி விரதம் வழிபடும் முறை..... அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.

வரலட்சுமி விரதம்.... சொல்ல வேண்டிய ஸ்லோகம்....

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே
 



Leave a Comment