கோவிலில் தரப்படும் விபூதியை தூணில் கொட்டுவது சரியா?


கோவிலில் அர்ச்சகர் தீபாராதனை முடிந்ததும் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுக்கிறார். அந்த சிவ ப்ரசாதத்தை நீங்கள் கோவிலில் தூணிலோ அல்லது வேறு இடங்களில் கொட்டுவது மிகவும் தவறான விஷயங்களில் ஒன்றாகும். அது சிவபெருமானை அலட்சியப் படுத்தியதற்கு சமம். தயவுசெய்து இந்த தவறை தெரிந்து செய்ய வேண்டாம்.

இன்னொன்று இதில் சிவன் சொத்து குல நாசம் என்று பெருமையாக ஒரு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு சிவன் கோவில்களில் இருக்கும் நகைகள்   பணம் இடங்கள் இவைகளை நீங்கள் தவறான முறையில் விற்றால் மட்டுமே உங்கள் குலமே நாசமடையும். திருநீறு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சிவபெருமானை சூஷ்ம ரூபத்தில் பார்க்க முடியும்.

சிவபெருமானின் அருள் சின்னம் திருநீறு. உலகியல் செல்வங்கள் எல்லாம் அளிக்க வல்ல சிறப்பு கொண்டது விபூதி. விபூதி, சிவபக்திக்கு சாட்சியாகத் திகழ்கிறது. வேதங்கள் இதன் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வேதம், சிவபிரான் அக்கினி சொரூபம் என்று கூறுகிறது.

இதனால்தான் நெருப்பைப் போன்ற சிவந்த உடல் கொண்ட சிவபெருமான் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார். இதுதான் நீறு பூத்த நெருப்பு!
விபூதி அணிவதால் ஒவ்வொரு ரோமக்காலும் சிவலிங்கமாகிறது. இதனால் விபூதி பூசிய சரீரம் சிவாலயமாகிறது.

பிருஹத்ஜாபாலோபநிஷத், பஸ்ம ஜாபாலோபநிஷத், ஸநாதன ஸம்ஹிதை போன்ற பழைய நூல்கள் விபூதி பற்றித் தெரிவிக்கும் செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. விபூதி செய்யும் முறையே புனிதமானது. கன்று ஈன்ற பசுவின் சாணத்தைச் சுத்தமான இடத்திலிருந்து சேகரிக்க வேண்டும். பசுவின் சிறுநீரால் அதைக் குழைத்து உருண்டையாகவோ, தட்டையாகவோ செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். கோமாதாவின் சாணம் உபநிஷத்தாகவும் கோமியம் பிரும்ம வித்தையாகவும் உள்ள மங்கலகரமான பொருட்கள் என்பது உபநிஷத வாக்கு.

கோமயத்துடன் கோமூத்திரத்தைக் கலந்து பிசையும்போது ‘‘ஸ்ரீர்மே பஜது (திருமகள் எனக்கு அருள்பாலிக்கட்டும்) அலஷ்மீர்: மே நச்யது (இல்லாமை அவலம் கேடு எல்லாம் அழிந்து போகட்டும்)’’ என்று சொல்ல வேண்டும். பிறகு காய வைத்த கோமியத்தை வைதீக முறைப்படி ஹோம குண்டத்தில் யாகம் வளர்த்து மந்திர பூர்வமாக ஹோமம் செய்ய வேண்டும். ‘நிதனபதயே’ என்று ஆரம்பிக்கும் 13 ஹோம மந்திரங்களையும் வியாக்ருதியையும் பஞ்ச பிரும்ம மந்திரங்களையும் ‘நமோ ஹிரண்ய’ என்று தொடங்கும் மந்திரத்தையும் ஓதி ஹோமத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த ஹோம அக்கினியை கோமய உருண்டைகள் அல்லது எரு வரட்டிகளின் குப்பலில் சேர்த்து வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு தான் அக்கினி மூட்டத்தை பிரிக்க வேண்டும். பரிசுத்தமான நிலையில் ‘ஓம்நத் பிரும்ம...’ என்று தொடங்கும் மந்திரத்தைச் சொல்லி விபூதியாகிய சாம்பலைச் சேகரிக்க வேண்டும். சில சைவச் சான்றோர்கள் உடலின் 32 இடங்களில் விபூதி பூசிக்கொள்வது வழக்கம். தற்கால வசதிக்காக முக்கியமான எட்டு இடங்களிலாவது இட்டுக் கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திர விதி. நெற்றி, கைகள், தோள்கள், மணிக்கட்டுகள், மார்பு, நாபி, கழுத்து, தலை ஆகிய இடங்களில் கீழ்க்காணும் மந்திரங்களை உச்சரித்த வாறு அந்த வரிசை கிரமமாக விபூதி இட்டுக் கொள்ள வேண்டும்.

கடையில் வாங்கும் விபூதியைக்கூட சுத்தமான தண்ணீரில் குழைத்து அங்கங்களில் பூசிக் கொள்ளலாம். இயலாவிட்டால் குறைந்த பட்சம் ‘ஓம் நமசி வாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லியாவது இட்டுக் கொள்வது உத்தமம். ஆதிசங்கரர், ‘‘எல்லா உபாதைகளும் பேய் பிசாசுகளான பீடைகளும் விபூதி உடலில் பட்டவுடனே ஒழிந்துபோகும்’’ என்று உபதேசித்திருக்கிறார். பரமேஸ்வரியின் அருட்கரத்தால் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் ‘‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, தந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு, சுந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு, செந்தூர் வாய் உமைப்பங்கன் திருவாலயவாயன் திருநீறே’’ என்று கூறியுள்ளார். ஒவ்வொரு சிவபக்தரும் இதை ஓதி வருவது மங்கலகரமாகக் கருதப்படுகிறது.



Leave a Comment