திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (பாகம் -1)
- "மாரி மைந்தன்" சிவராமன்
தொண்டை நாடு.
செல்வச் செழிப்பும் இயற்கை வனப்பும் ஆன்மீகச் சிறப்பும் கொண்ட திருநாடு.
நாயன்மார்கள்
புராணம் சொல்லும்
பெரியபுராணம் படைத்த
ஞானசிகாமணி சேக்கிழார் பெருமான் அவதரித்த அருள் நாடு.
அதனால்
சேக்கிழார் பிரான் பெரியபுராணத்தில்
தொண்டை நாட்டையும் தலைநகர் காஞ்சியையும் வர்ணிக்கும் பாணியே
பல கதைகள் சொல்லும்.
எப்படிப்பட்ட ஆன்மீக பூமி.! எப்பேர்பட்ட காஞ்சி நகர்...!
முக்கண்ணரின்
மூன்று சிவதலங்கள் தொண்டை நாட்டிற்கு பேரருள் கூட்டும்
பெருமை கொண்டவை.
அவை -
திருமாலை
இடபமாகக் கொண்ட சிவபெருமான்
உறைவது
திருக்காளத்தி மலை.
தேவர்களும்
தெய்வ பக்தர்களும் வேடர்களாகப் பிறந்து ஆதி மூர்த்தியின்
அருள் வேண்டுவது திருவிடைச்சுரம்
என்னும் சிவத்தலம்.
வேடுவப் பெண்களோடு தெய்வப் பெண்கள் சேர்ந்து நீராடும் சுனையையுடையது திருக்கழுக்குன்றம் என்னும்
சிவனுறைத்தலம்.
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல்
என்ற நானிலங்களுடன் பாலையும் சேர்ந்து ஐந்திணை நெறியும் தத்தம் இயல்பினில் செழித்து சிவமயமாக விளங்கும் நாடே தொண்டை நாடு.
இம்மட்டுமா....!
சோழநாட்டில் அவதரித்த பட்டினத்தார்
முக்தி அடைந்த
தெய்வத் திருநாடு
தொண்டை நாடு.
ஐம்பெரும் சபைகளில் ஒன்றாகிய ரத்தினசபை தொண்டை நாட்டில் திருவாலங்காட்டில்
தான் உளது.
கயிலை மலை
சென்று திரும்பிய காரைக்காலம்மையார் இறைவனைப்
போற்றிப் பாடிய பெரும்பேறு பெற்ற நாடு தொண்டை நாடு.
தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்தின்
ஆன்மீகச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் வியக்கவைப்பன.
உமாதேவியார் உயிர்களிடத்துப் பெருங்கருணையினால் முப்பத்தி இரண்டு
அறங்களையும்
புரிந்து கொண்டு
காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமை உடையது காஞ்சிபுரம்.
கரிகாற்சோழன் இமயத்தில்
புலிக்கொடி நாட்டப் போகும் போது காஞ்சிபுரத்தின் பெருமையை அறிந்து காடழித்து
எல்லை வகுத்து உருவாக்கிய நகரம் காஞ்சிபுரம்.
ஆழ்ந்த அகழி
சூழ்ந்த மதில்
உயர்ந்த சிகரங்கள்
ஓமப் புகை நிறைந்த அந்தணர் வீதி
செல்வம் மிக்க
அரசர் வீதி
வளமைமிக்க
வணிகர் வீதி
விருந்தினரை
உபசரிக்கும்
வேளாளர் வீதி
என்றமைந்த
சிறந்த நகரம்
காஞ்சிபுரம்.
கரிகாற்சோழன் முதலிய சோழ மன்னர்கள்
காஞ்சி மாநகரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தது வரலாற்றுப் பெருமை.
வருடம் முழுவதும்
ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கும். தேவர், அடியார்
உள்ளிட்ட அனைவரும் நிறைந்திருப்பர்.
தானம் தர்மம்
அன்பு அருள்
கருணை ஞானம்
முதலியன நிலவும் சிவலோகமே காஞ்சிபுரம்.
ஐம்பெரும்
பூத தலங்களில் ஒன்று.
முக்தி தரும் ஏழுனுள் முதன்மையானது இத்தலமே.
உமையவளிடமே
சிவபெருமான் திருவிளையாடல்
புரிந்தது
இத்தலத்தில் தான்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் அறிவதற்கு முன்
ஈசன் தேவியிடம்
நடத்திய சோதனையை
தெரிந்து கொள்ளலாமா ?
ஒருமுறை -
கயிலாய மலையில் சிவபெருமான்
பார்வதி தேவியிடம்
சிவாகமங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது 'எப்போதும் நான் விரும்புவது பூசையே'
என திருவாய் மலர்ந்தார்.
உடனே உமையவள் சிவாகம முறைப்படி சிவபெருமானைப்
பூசிக்க உறுதி பூண்டாள்.
அதற்குரிய இடமாக சிவபெருமான் பரிந்துரைத்த
திருத்தலமே
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்தில்
அம்பிகை
கோயில் கொண்டு சிவபெருமானை
விரும்பித் துதித்தாள்.
இடையறாது ஐந்தெழுத்தை ஓதி கைகுவித்து இறைஞ்சி
அருந்தவம் புரிந்தாள்.
திருவிளையாடல்
புரிய விரும்பிய ஏகாம்பரநாதர் வெளிப்படாது
காலம் தாழ்த்தினார்.
அம்பிகை மேலும் கடுந்தவம் புரிந்தாள்.
அதன் பின்னர்தான் அகிலாண்டேஸ்வரர்
ஒரு மாமரத்தடியில் எழுந்தருளினார்.
அகிலாண்ட நாயகி இறைவனை
மெய்யன்புடன்
வழிபட நினைத்தாள்.
திருநந்தவனம் சென்று ஈசனுக்கு உரிய
புது மலர்களைக் கொய்து கம்பா நதியில் எடுத்த
திருமஞ்சனநீர்
நெய் தீபம்
சந்தனம் பால் தயிர் முதலிய அபிஷேகப் பொருட்களுடன்
உருகிய உள்ளத்துடன் பூசித்தாள்.
இறைவன்
இறைவியின்
பூசையை ஏற்று ஆட்கொள்ளத் தீர்மானித்தார்.
அதற்குள் ஒரு விளையாட்டு
விளையாடி விட இறைவன் விருப்பப்பட்டார்.
அக்கணமே
கம்பா நதியில்
வெள்ளம் பெருகியது.
(திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - தொடரும்)
Leave a Comment