நோய்கள் நீங்க வழிபட வேண்டிய சங்கரநாராயணரையும் கோமதியம்மன்.....


கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோயிலின் மகிமையைக் கூறுகின்றன. திருமாலும், ஈசனும் தாங்கள் இருவரும் ஒருவரே என சங்கரநாராயணராக அம்பிகைக்கு உணர்த்திய தலம் இது. இங்குள்ள நாகசுனையில் நீராடி சங்கரநாராயணரையும் கோமதியம்மனையும் வழிபட நோய்கள் நீங்குவதாக ஐதீகம். நாகசுனையில் நண்டு, ஆமை, தவளை, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வசிப்பதில்லை. ஆலயம் சங்கரலிங்கசுவாமி கோயில், சங்கரநாராயணர் கோயில், கோமதியம்மன் கோயில் என மூன்று பிரிவாக உள்ளது. 

இத்தல துர்க்கை தென்திசை நோக்கி வீற்றிருப்பதால் யம பயம் போக்கியருள்பவளாகத் திகழ்கிறாள். மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் சூரியபகவானின் கதிர்கள் சங்கரலிங்கத்தின் மீது விழும் அற்புதம் நிகழ்கிறது. இத்தல வேண்டுதல் பெட்டியில் விஷ ஜந்துக்களின் வெள்ளி மற்றும் தாமிரத்தாலான வடிவங்களை நேர்த்திக்கடனாக போட்டால் விஷக்கடி ஆபத்துகள், நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கோமதியம்மன் சந்நதியின் முன் உள்ள ஸ்ரீசக்ரம் உள்ள பள்ளத்தில் அமர்ந்து அன்னையை வணங்க எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது. மரகதக்கல் பதிக்கப்பட்ட பள்ளியறையில் தங்க ஊஞ்சலில் தினமும் பள்ளியறை உற்சவம் நடக்கிறது. அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்றுமண் அனைத்து சரும நோய்கள், விஷக்கடிகளுக்கு மாமருந்தாக உள்ளது. இம்மண்ணைக் குழைத்து நெற்றியில் இட்டுக்கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது ஐதீகம். 

சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர். இத்தலத்தில் சுவாமிக்கு பெரிய தேராகவும், அம்பிகைக்கு சிறிய தேராகவும் இரண்டு தேர்கள் உள்ளன. கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது.

சைவ சமய ஆகமப்படி திருநீறும், வைணவ சமய ஆகமப்படி தீர்த்தமும் வழங்கப்படும் ஒரே தலம் இது.அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவர்க்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். சங்கர நாராயணரைக் காண அம்பிகை புரிந்த தவம் ஆடித்தபசு விழாவாகவும், ஈசனின் சுயரூப தரிசனம் காண அன்னைபுரிந்த தவம் குறித்த விழா திருக்கல்யாண விழாவாகவும் கொண்டாடப்படுகின்றன. ஆலயத்திற்கு நிறைய பொருட்கள் அளித்து, பிடிமண் எடுத்து விழா நடத்திய உக்ரபாண்டியனின் நினைவாக சித்திரை பிரம்மோற்சவத்தில் உக்கிரபாண்டியர் விழா கொண்டாடப்படுகிறது. சங்கன், பதுமன் என்ற இரண்டு நாகங்களுக்கு ஹரிஹர ஒற்றுமை உணர்த்திய தலமாக இத்தலம் திகழ்கிறது.
 



Leave a Comment