திருநாளைப் போவார் நாயனார் புராணம் (பாகம்-2)
- "மாரி மைந்தன்" சிவராமன்
தில்லையின்
எல்லையை
அடைந்தார் நந்தனார்.
எல்லையைத்
தொட்ட மாத்திரத்திலேயே
தரை மண் தொட்டு வணங்கி மகிழ்ந்தார்.
சிதம்பரம்.
அவர் கண்ணில்பட்டது விண்ணில் மிதந்தார்.
பாதம் மண்ணில் பட்டது கண்ணீர் மல்கினார்.
உள்ளம் தொட்டது
உருகிப் போனார்.
'வீடுபேறு
தரவல்ல தலம்' என்று எத்தனை முறை
சொல்லிச் சொல்லி நினைத்து நினைத்து பரவசப்பட்டு இருப்பார்.
இதோ....
அவர் இருப்பது
சிதம்பரம் வீதியில்.
ஊரைச் சுற்றி வந்தார் எட்டு திக்குகளையும் வணங்கியபடியே.
திருக்கோயிலின்
தென்மதி
வாயில் வந்தார்.
"அம்பல வாணரே...!
அருட்பெருங் கடலே...!! தில்லை மேவும் தேவதேவா...!!!
நாயினேன்
புலைச் சாதியில் பிறந்தேனே...
உனைக் காண்பேனோ..."
என கோயினுள்
புக முடியா
நிலை எண்ணி
புலம்பி அழுதார்.
திருக்கோயிலைச்
சுற்றி சுற்றி வந்தார்
இறை சிந்தனையை இறுகப் பற்றியபடி.
கோயிலின் மதில் சுவரை வணங்கி மகிழ்ந்தார்.
பிறவிப்பயன் அடைந்துவிட்டதாக பரவசம் கொண்டார்.
'இனி வாழ்வு
சிதம்பரத்தில் தான்'
என உறுதி பூண்டார்.
பல நாட்கள்
பல நூறு முறை திருக்கோயில்
சுற்றி வந்தார்.
இறை தரிசனம்
காண முடியவில்லை.
இழி பிறவி என
தன் குலத்தைத் தானே எண்ணிலடங்கா முறை சபித்துக் கொண்டார்.
"ஆடவல்லானே!
அற்புதக் கடவுளே!! உன்னை நான்
கோயிலில் வந்து
தரிசிக்க முடியவில்லையே.
நீ நாட்டியமாடும்
நாட்டிய சபையை
நான் காண முடியாதா ?
பறை நடனமாடும் நான் உன் தெய்வீக நடனத்தை காண்பது எப்போது ?"
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வழிந்து
தரை தொட
இறையிடம்
முறையிட்டு அழுவார்.
ஒருநாள்-
அழுது ஓய்ந்து
மனம் களைத்த
நந்தனார்
அப்படியே
மதில் சுவர் ஓரம்
தூங்கிப் போனார்.
கனவில் வந்தார்
கபாலக் கூத்தர்.
கனவில் வருவதற்கு
சாதித் தடை இல்லையே!
"அன்பரே...!
வருந்த வேண்டாம்.
நீ என்னருகே வருவாய். பின் எப்போதும் என் அருகிலேயே இருப்பாய்.
நாளை
ஒன்று நீ செய்ய வேண்டும்.
ஓரிடத்தில்
தீ மூண்டெரியும்.
அதில்
நீ குளித்து எழு.
அந்தணர்கள் அரவணைத்து உன்னை என் கனகசபைக்கு அழைத்து வருவர்."
சொல்லி மறைந்தார் சிற்றம்பல நாதர்.
துள்ளி எழுந்த நந்தனார் தன்னைக்
கிள்ளிப் பார்த்து
கனவா நனவா என குழம்பிப் போனார்.
கனவிலாவது
கயிலாய நாதனைக் கண்மூடிக் கண்டேனே என புளகாங்கிதம் அடைந்தார்.
அதே சமயம்
சைவம் போற்றும் அந்தணர்களின்
கனவில் தோன்றினார் சாதி பேதம் பாராத
சமூக நீதி நாயகர்.
"தில்லைவாழ் அந்தணர்களே!
என் அன்பிற்குரிய பக்தர் எந்நாளும் எனை மறவா திருநாளைப் போவார் தில்லைக்கு வந்துள்ளார்.
நாளை நீங்கள்
ஒரு வேள்வித் தீ
வளர்த்திடுங்கள்.
அதில் அவர்
குளித்து எழுவார்.
எழுந்தவரை என்னருகே அழைத்து வாருங்கள்." எனக் கூறி
மறைந்து போனார்
மறை நாயகர்
அவர்களின் அந்த
அதிகாலைக் கனவில்.
அடுத்த நாள் -
கனவில் இறைமொழி கேட்டிருந்த
மூவாயிரம் அந்தணர்கள் கோவில் அருகே கூடிவிட்டனர்.
முன் எப்போதும்
இல்லாத அளவிற்கு 'வேள்வித் தீ'
சிவ ரூபமாய் கொழுந்துவிட்டு
எரிந்தது.
சிவக்கொழுந்தான்
நந்தனார்
தீ மூண்டெரியும்
இடம் தேடி
வந்து சேர்ந்தார்.
அவர் தான் கடவுள் கனவில் சொன்ன இறைமகன் என
வேள்வி பலத்தால் உணர்ந்த
மறை போற்றும் அந்தணர்கள்
நந்தனாரை வரவேற்று கனவில் கண்டதை காட்சியாய் சாட்சியாய் விவரித்தனர்.
ஆண்டான் அடிமை நந்தனார் அவர்களின் அழைப்பை ஏற்று
கால காலமாய்
கடவுள் பணியில்
மேலோர்க்கு மேலோராய்
வலம் வந்து கொண்டிருந்தோரின்
வழிகாட்டுதலுக்கு ஏற்ப வேள்வித்தீயை
சுற்றி வந்தார்.
இறைநாமம் உரக்க உச்சரித்தபடியே இறைவனின்
பாத கமலங்களில்
தன் மனத்தை நிலைநிறுத்தி
வேள்வித் தீயில் பாய்ந்தார்.
சாதிப் பொய்மையோடு மாயப் பொய்யுடலும் தீயில் கருகி மறைந்தது.
இதைக் கண்டு
முக்காலம்உணர்ந்த எம்பிரான்
புன்னகை புரிந்தார்.
வேள்வித்தீயில் இருந்து புனித உடம்புடன் உடலெங்கும் திருநீறுடனும்
முப்புரி தரித்தும்
விரிசடையுடனும் நெருப்பிலிருந்து
புனித மனிதராய் அப்போதே எழுந்த
நாளைப் போவார் எனும் நந்தனார்
செந்தாமரை மலர்மீது தோன்றிய பிரம்ம தேவரை போல் காட்சியளித்தார்.
வானிடை சுந்தர
துந்துபி முழங்கியது. இந்திரன் முதலான தேவாதி தேவர்கள்
மந்தார மலர்
மழை பொழிந்தனர்.
அந்தநேரம்
அத்தனை
அந்தணர்களும் நந்தனாரை
நாதன் வடிவாக
மனம் முழுதும் ஏற்று கைகூப்பி தொழுது வணங்கினர். திருத்தொண்டர்கள் பணிந்து வணங்கினர்.
தில்லையம்பதியார் கனவில் உத்தரவிட்டிருந்தபடி
புனித நந்தனாரை கோயிலுக்கு
வேதம் ஓதியபடி அந்தணர்கள்
அழைத்துச் சென்றனர்.
நந்தனார் முதலில் திருக்கோபுரம் தொழுதார். பின் மணிமன்றம்
சென்று ஆடலரசனின் திருநடனத்தை மனக்களிப்போடு
ரசித்து வணங்கினார்.
அதன் பின்னர்
கனக சபைக்கு
அழைத்துச் சென்றனர் அந்தணர்கள்.
நந்தனார்
தெய்வீக ஆனந்தக் களிப்பின் எல்லையில் நின்று தில்லைவாணரின்
திரு உருவம் கண்டு
மெய் மறந்தார்.
அப்போது
ஆயிரம் கோடி சூரிய ஒளியை ஒத்த பேரொளி அங்கு தோன்றியது.
அவ்வொளியில்
அத்தனை பேர் முன்னிலையிலும் நந்தனார் இறையோடு இரண்டறக் கலந்து நடராஜப் பெருமானுடன் ஐக்கியமானார்.
இறையோடு
கலந்த பின்னர்
'நாளைப் போவார்' நந்தனார்
'திருநாளைப் போவார் நாயனார்' ஆகி
அறுபத்து மூவரில்
ஒருவர் ஆனார்.
திருத்தொண்டர் புராணம் இசைத்தமிழில்
வல்லவர் நால்வர் என பட்டியலிடுகிறது.
அவர்களில் முதலாமவர் நந்தனார்.
இரண்டாமவர் 'ஆனாயநாயனார்.'
மூன்றாமவர்
'திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்.'
நான்காவதாயிருப்பவர் 'பரமனையே பாடுவார்'.
எல்லையில்லாத எம்பிரானுக்கு
சாதியும் எல்லை இல்லை என்பதற்கு
உதாரண புருஷரே திருநாளைப் போவார் நாயனார்.
தாழ் குடியில் பிறந்தாலும் இறையடியில் இணைத்து உயர்குடி மக்களும் வணங்கத்தக்க நிலையை திருநாளைப்போவார் நாயனாருக்கு
வழங்கி சிறப்பித்தார் ஆனந்தப் பெரும் கூத்தர்.
'ஐயர்' என அழைக்கப்படும் அந்தணர்களே
'ஐயரே' என்றழைத்து வணங்கும் இறை நிலை அடைந்தார்
குறை சாதி நந்தனார் எனில்
இறைவன் திருவுளம் அன்றி வேறென்ன ?
அப்பேறு
நந்தனாரின்
சிவ வழிபாட்டால்
கிடைத்த பெரும்பேறு.
'செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்'
- இது சுந்தரமூர்த்தி பெருமானின் திருவாக்கு.
திருச்சிற்றம்பலம்.
Leave a Comment