நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி..... 


தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.

தல வரலாறு :

ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.

சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள்.

தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.

ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குறி கேட்கும் பக்தர்கள் :

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம் வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம்பிக்கை...

இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.

அமைவிடம் :

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. -



Leave a Comment