திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை....?
கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரை தரிசித்து அனுமதி பெற வேண்டும்.
அவர்தான் அங்கு காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன்பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.
அதன்பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத்தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதியாகும். கிரிவலப் பாதை ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோவில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்விகப்பாதை ஆகும்.
நிறைமாத கர்ப்பிணிப் பெண் எப்படி அமைதியாக, ஆனந்தமாக, வயிற்றிலிருக்கும் குழந்தையை மட்டும் நினைத்து நடந்து செல்வாளோ, அதேபோன்றுதான் நாமும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து, அவருடைய திருப்பெயரை உச்சரித்து, பொறுமையாகவும், பக்தியுடனும் நடந்து செல்லவேண்டும்.
கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். கிரிவலம் செல்லும்போது எறும்பு புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவிட்ட புண்ணியம் கிடைக்கும்.
Leave a Comment