மங்கலம் பொங்கும் ஆடிச்செவ்வாயில் அவ்வை விரதம்


 

வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

 ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

 மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

 இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

 இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.  

 



Leave a Comment