ஆடலரசனுக்கு உகந்த ஆனித்திருமஞ்சனத் திருநாள்


ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப்படும். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்யத்துவம். நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமே சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நடராஜரும் சிவகாமியும் தங்களது தாண்டவ கோலத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்கின்றனர். அணுவில் இருக்கும் நுன் துகல்களைக்கூட ஆட்டுவிப்பது இறையின் திருநடனம். நுண் துகல்களின் இயக்கம் ஒரு நடனத்தை ஒத்திருப்பதாக அறிவியலார் கண்டறிந்திருக்கின்றனர்.

ஆலகால விஷத்தை உண்ட சிவனின் கண்டத்தில் பர்வதியால் அது நிறுத்தப்பட்டபோது சிவன் உடலில் அதிக உஷ்ணம் பரவியது. அந்த வெப்புத் தன்மையை தவிர்க்கவே ஈசன் -நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இது தேவர்களால் நடத்தப்பெறும் மாலைநேர அபிஷேகம்- இதை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடுகின்றோம். இந்த உற்சவம் ஆனி உத்திரத் திருவிழா எனப்படும். சூரிய உதயத்திற்கு முன் நடராஜருக்கு அபிஷேகம் முடிவுறும். ஏனெனில் தேவர்களுக்கு மாலைப் பொழுது ஆனிமாதம். அவர்களுக்கு வைகறை-மார்கழி, காலை-மாசி, உச்சி-சித்திரை, மாலை-ஆனி, இரவு-ஆவணி, நடுஇரவு-ஐப்பசி என்பதாகும்.

ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். வியாசர் தருமருக்கு ஏகாதசி விரதம் பற்றி கூறியபோது அங்கு வந்த பீமன் தன் வயிறில் விருகம் என்ற அக்னி உள்ளதால் அளவில்லா உணவு உண்டால்தான் என் பசி அடங்கும். எல்லா ஏகதசியன்றும் விரதம் அனுஷ்டிக்க முடியாது என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை விரதம் அனுஷ்டிக்க எளிய முறையைச் சொல்லுங்கள் என்று கேட்டான். நிர்மலா ஏகாதசி அன்று நீர் அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்குமாறு வியாசர் கூரினார். எனவே இந்த ஏகாதசி- ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி- நிர்ஜலா ஏகாதசி- பீம ஏகாதசி எனப்படும்.
 



Leave a Comment