செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட கடன் தொல்லை நீக்கும் பைரவர் 


தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம். சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரும், சிவகணங்களுக்கு தலைவருமானவர் பைரவர். பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் ஆணைப்படி ருத்திரர், உருக்கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தவர். 

அறுபத்து நான்கு திருவடிவங்களாகக் கூறப்பட்டுள்ள பைரவரின் தலை மீது தீ ஜுவாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை துலங்குவதைக் காணலாம். இவர் முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராகக் காட்சி தருபவர். சிவன்கோயில்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிப்பவர்.

காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் பூட்டிய திருச்சன்னிதிகளின் அனைத்து சாவிகளையும் பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்த பின்னரே கோயிலைச் சாத்துவது மரபு. கோயிலில் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.

பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.
 



Leave a Comment