மூர்த்தி நாயனார் புராணம்
- "மாரி மைந்தன்" சிவராமன்
நாயன்மார்களில்
துறவற நெறி நின்று
வீடு பேறு பெற்றவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் திருநாவுக்கரசர். இன்னொருவர் மூர்த்திநாயனார்.
முத்தும் முத்தமிழும் தந்த சிறப்புடை நாடாம் பாண்டிய நாட்டில் தலைநகராம் மதுரையம்பதியில் வணிகர் குலத்தில் அவதரிதரித்தவர்
மூர்த்தி நாயனார்.
சிவபக்தி என்பதை
ஒரு வடிவெடுத்தால்
வரும் உருவே மூர்த்திநாயனார்.
அகப்பற்று
புறப்பற்று விட்டு
பற்றற்ற பரம்பொருளின் திருவடிகளை
மெய்ப் பற்று என்று
தன்னிருகைகளால் இறுகப் பற்றியவர்.
திருவடித் தாமரைகளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காதவர்.
சிவநேச வேட்கையுடைய மூர்த்தியாரின்
சிவப்பணி
சோமசுந்தரேசுவரருக்கு
அனுதினமும் சந்தனக்காப்பு செய்விப்பது ஒன்றே.
மிகப் பழமையானதும் வான்முட்டும்
மணி மாடங்கள் நிறைந்ததும்
முத்துக்குப்
பிரசித்தி பெற்றதுமான புகழ் வாய்ந்த
பாண்டிய நாட்டின் மீது கண் வைத்தான்
கர்நாடக தேசத்தின் மன்னனாக இருந்தவன்.
மண்ணாசை
கொண்ட அவன்
ஒருநாள்
யானைப்படை குதிரைப்படை
கருவிப் படை
வீரர் படை சகிதம்
வந்து சூழ்ந்து
வெறியோடு போரிட்டான். வெற்றியும் பெற்றான்.
பாரம்பரியம் கொண்டிருந்த
அரசாட்சி
அவன் கைக்கு வந்தது.
அவன் திருநீறு சார்புடைய சைவ மதம் போற்றாமல் சிவ மதத்தில் சிந்தனை செலுத்தாமல்
சமண மதம் சார்ந்து நின்றான்.
அவரவர்
சமயத்தில் நின்று அவரவர்
தத்தம் கடமைகளைச் செய்யச் செய்வதே மன்னர்களின் நீதிமுறை.
ஆனால்
அம்மன்னனோ
சிவ மதத்தை
அறவே வெறுத்தான். சமண மதத்தை
சிறப்பிக்க முனைந்தான்.
சிவனடியார்களை அவமதிப்பதும் துன்புறுத்துவதும்
சிவ பூஜைகள் நிகழாமல் தடுப்பதும் அவனது கொள்கையாக இருந்தது.
சிவப் பற்றும்
சந்தனக் காப்பும் கொள்கையாய் கொண்டிருந்த
மூர்த்தியாரை அக்கொடுங்கோலன் பலவாறு அவமானப்படுத்தினான்.
இடர் பல தந்து
மூர்த்தியாரை
மனமாற்றம் செய்து மதமாற்றம் செய்ய முற்பட்டான்.
பற்பல தந்திரங்கள் செய்தான்
சிவ மதத்தை அவர் மனதிலிருந்து அப்புறப்படுத்த.
சிறு சலனம் கூட மூர்த்தியார் மனதில் ஏற்படவில்லை.
ஒருகட்டத்தில்
சந்தனக் கட்டைகளை அவருக்கு எங்கும் கிடைக்காத வண்ணம் உத்தரவிட்டான்.
மனம் தளராத
மூர்த்தியார்
அரச கட்டளையைச் சமாளித்து
சந்தன காப்பு அலங்காரத்தை நிறுத்தாமல் நிதம்
செய்வித்து வந்தார்.
அளவுக்கு மீறி
மன்னன் தந்த தொந்தரவுகளால்
மனம் வெறுத்துப் போன மூர்த்தியார்
சோமசுந்தரப்
பெருமானிடமே
கண்ணீர் மல்கக் கதறினார்.
"ஐயனே...!
கொடுங்கோல் புரியும்
இந்த மாபாதகன் மாய்ந்திட மாட்டானா ?
சைவ நெறிக்கு
எதிராக
வெறிபிடித்தவன் போல் அரசாள்கிறானே !
சைவம் போற்றும்
நல்ல அரசன்
எங்களுக்கு
வாய்ப்பது எப்போது ?
கருணைக்கடலே...!
அவன் மீது கருணை
காட்ட வேண்டாம்.
உமை வணங்கும்
எம் மீது கருணை காட்டுங்கள்"
மன்றாடினார்
மூர்த்தியார்.
மறை நாயகர்
அதற்கு நாள் குறித்தார்.
மறு நாள்
காலையிலேயே புறப்பட்டு சந்தன மரக்கட்டைகள் தேடி நகர் முழுதும் அலைந்தார் மூர்த்தியார்.
அரசாங்கத்தின்
கெடுபிடி காரணமாக
ஒரு பிடி அளவு
சந்தனக் கட்டை கூட கிட்டவில்லை.
அன்று மாலை வரை
சந்தனமரக்கட்டை தேடி
களைப்படைந்து
சோமசுந்தரர் உறையும் திருக்கோயிலுக்கு விரக்தியோடு வந்தார்.
சந்தனம் அரைக்கும் வட்டமான கருங்கல் வாட்டமாக அவருக்கு காட்சியளித்தது.
வாய் மணக்க
சிவநாமம் துதித்தபடியே "சந்தனக் கட்டைக்கு முட்டுக்கட்டை வந்தாலென்ன ?
அதைத் தேய்க்கும்
என் கைக்கு ஒரு மூட்டும் நேரவில்லையே...!"
என்று கதறியவாறே
தன் முழங்கையைக் கருங்கல்லில்
தேய்க்க ஆரம்பித்தார் ஆவேசத்தோடு.
முழங்கை
தேய்க்க தேய்க்க
ரத்தம் பீறிட்ட போதும் மூர்த்தியார்
தேய்ப்பதை நிறுத்தவில்லை.
தோலும் தசையும் சிதைந்து
எலும்பும் தெரியத் தொடங்கியது.
வெளியேறி உறைந்திருந்த
ரத்தத்தின் துர்நாற்றம்
வீச ஆரம்பித்தது.
எலும்புகளின் துவாரங்களில் இருந்து மூளையும் ஒழுகி வெளிப்பட்டது.
மூர்த்தியார்
மனம் தளராது
முழங்கை மூட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தார்.
இதுவே தக்க தருணம் என்று கருதிய
எம்பிரான்
குரல் கொடுத்தார் அசரீரியாக....
"அன்புத்திறன் கொண்டவனே..!
மெய்யன்பின் துணிவில் இப்படி எல்லாம் செய்யாதே...!
உனக்குக்
கொடும் தீங்கு விளைவித்த கொடுங்கோலனின்
அரசு முழுமையுமே
நீயே எடுக்கும் சூழல் நாளை எழ இருக்கிறது.
நீ மறுக்காது
பொறுப்பேற்று
அவனால் விளைந்த அத்தனை
தீமைகளையும் அகற்று.
சிவம் தழைக்க
அரசாட்சி செய்.
நாடு போற்ற
நல்லாட்சி செய்.
உரிய நாளில் நானே அழைத்து
உன்னை என் பக்கம் வைத்துக்கொள்வேன்.
அதுவரை நாடாளு.
நல் முறையில் நாடாளு..!"
அசரீரியின்
அமுதக்குரல் ஒலித்து முடியும் தருணம் மூர்த்தியாரின்
முழங்கை சீராகி
முட நாற்றம் நீங்கி முகப்பொலிவு அதிகமானது.
உடல் பொலிவும் கூடியிருந்தது.
திருநீறு வாசமும் சந்தனத்தின் மணமும் கோயில்
முழுக்க பரவியது.
ஆம்...
உள்ளும் புறமும்
சிவனே நிறைந்திருந்தார்.
அப்படியே மூலநாதர் சன்னதிக்குள் நுழைந்து சந்தனக் காப்புக்கு
இனி பங்கமில்லை
என்ற திருப்தியோடு ஆனந்தக் கண்ணீர்மல்க ஆராதித்து விட்டு
வீடு திரும்பினார் மூர்த்தியார்.
நல்லது செய்பவன் இறுதியில்
நற்கதி அடைவது போல் துன்பம் தருபவன் துன்பத்தில் உழல
துர் நிலைக்குச் செல்ல வேண்டுமென்றோ ?
அன்றிரவே
மறையோனின்
மறக் கருணையால் மந்திரித்து விட்டவன்போல் படுக்கையிலேயே
மாண்டு போனான் மன்னா'தீ' மன்னன்.
செய்தி அறிந்து
விரைந்த மந்திரிமார்களும்
நூல்பல கற்றவரும் அரசனின் ஈமச்சடங்கை முறைப்படி
செய்து முடித்தனர்.
ஒருநாள்கூட
அரசன் இல்லாது
ஒரு நாடு
இருக்கக்கூடாது என்ற மரபு காரணமாக அனைவரும்
அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பது
குறித்து விவாதித்தனர்.
மறை அறிந்த சான்றோர் 'நம் பட்டத்து யானையை இரு கண்களையும் கட்டி நகர்வலம்
வரச் செய்வோம்.
யானை யாரை
ஏற்றி வருகிறதோ
அவரே நம் மன்னர்...' என்றனர்.
அனைவரும் அதைக் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.
மறுநாள்
பட்டத்து யானை அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு
மன்னரைத் தேர்ந்தெடுக்கும்
மாபணிக்காக
மாநகர் வலத்திற்கு புறப்பட்டது
கண்களைச் சுற்றி
கருப்பு துணி இறுகக் கட்டப்பட்ட நிலையில்.
பட்டத்து யானை
புறப்பட்ட உடனேயே
வேறு திசை நோக்காமல் வேறு எங்கும் போகாமல் கோயில் இருக்கும் பக்கமே
யாரோ ஏற்கனவே சொல்லிவைத்தது போல் விரைந்தது.
அப்பன்
மனமறிந்த
பிள்ளை கணபதி தானே
அந்த யானை !?
மூர்த்தியாருக்கும் மன்னனின்
மரணச்செய்தி எட்டியிருந்தது.
அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமலேயே வழக்கம்போல் கோயிலுக்கு வந்து சொக்கநாதரை வணங்கிவிட்டு
கோயில் முன்புறம் வந்து ஒரு தூணோரம் நின்றிருந்தார்.
விரைந்து வந்த
பட்டத்து யானை
மூர்த்தியாரை நெருங்கி முன் கால்களை மடக்கி தும்பிக்கையை உயர்த்தி பணிவோடு வணங்கிவிட்டு அழுங்காமல் குலுங்காமல் தும்பிக்கையால்
அவரை
மென்மையாகத் தூக்கி
தன் பிடரியில் மேல்
அமர வைத்துக் கொண்டு ஆனந்த நடை போட்டது முடிசூட்டும்
மண்டபம் நோக்கி.
யானையைப் பின்தொடர்ந்து
வந்த மந்திரிகளும் சான்றோர்களும் ஆன்றோர்களும் காவலர்களும்
ஆவலோடு குழுமியிருந்த மக்களும்
'மாமன்னர் வாழ்க' என விண்ணதிரக் கோஷமிட்டவாறே
முடிசூட்டும் மண்டபம் நோக்கி
பின் தொடர்ந்தனர்.
சிவமணம் கமழும் திருமேனி கொண்ட மூர்த்தியாரோ 'எம்பெருமான் திருவருள் இதுவெனில்
இந்நாட்டை
நான் ஆள்வேன்' என மனதிற்குள்
சொல்லிக் கொண்டார்.
அத்தாணி மண்டபத்தில் கடலலை போல்
மக்கள் கூட்டம். பேரிகைகள் அதிர்ந்தன. தாரைகள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. வாழ்த்தொலிகள் பொங்கின.
மூர்த்தியாரை மந்திரிமார்கள்
முறைப்படி
அழைத்துச் சென்று சிம்மாசனத்தில்
அமர வைத்தனர்.
மூர்த்தியாருக்கு
முடி சூட்டும் வைபவம் தொடங்கியது.
மங்கல் நூல் சுற்றிய தங்கக் கலசங்களில் தாமிரபரணி உள்ளிட்ட புனித நதிகளின்
நன்னீர் வைக்கப்பட்டிருந்தது.
மந்திரம் ஓதி
வேள்வித்தீ நடத்த மறையோர் காத்திருந்தனர்.
மங்கல இசை மண்டபத்தை நிறைத்திருந்தது.
முடிசூட்டப்படுவதற்கு முன்பு மூர்த்தியார் எழுந்தார்.
"முந்திய
சமணம் மறைந்து
சைவம் ஓங்கினால் தான் நான் அரசாட்சியை
ஏற்றுக் கொள்வேன்"
என மந்திரிமார்களிடம் தீர்க்கமாக அறிவித்தார்.
"தாங்கள்
எவ்விதம் விரும்புகிறீர்களோ எவ்விதம்
கட்டளையிடுகிறீர்களோ அவ்விதம் செய்வோம்" என அவர்கள்
மன எழுச்சியோடு
சம்மதம் தெரிவித்தனர்.
'உலகம் உய்ய
ஒரு சிவனடியாரே அரசராக கிடைத்துள்ளார்' என அங்கிருந்த அனைவரின் உள்ளமும் துள்ளி மகிழ்ந்தது.
"பகட்டான
பட்டாபிஷேகம் வேண்டாம்.
என் விருப்பம்
சிவ கட்டளை
இரண்டுமே எளிமையே !
என்னைப்
பொருத்தமட்டில்
விபூதியே
அபிஷேகப் பொருளாக
உத்திராட்சமே
அரசியல் ஆபரணமாக சடைமுடியே கிரீடமாக இருத்தல் வேண்டும்"
என தன் விருப்பம் சொன்னார் மூர்த்தியார்.
அவர் விருப்பப்படியே முடிசூட்டும் விழா எளிமையாய்
சிவமயமாய்
நடந்தேறியது.
விழா முடிந்ததும் அனைவரையும்
வணங்கி விட்டு மாமன்னர் மூர்த்தியார் முதலில் சென்றது அரசருக்கரசர் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் 'திருவாலவாய்' திருத்தலமே.
அது
அன்றாடம் சென்று மனநிறைவோடு சந்தனகாப்பு நடத்தும் சிவத்தலம்.
அறுபத்தி நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த
சொக்கநாதரின்
அழகுத் திருமேனி
வீற்றிருக்கும் மெய்த்தலம்.
"எம்பெருமானே...!
சமண இருள் நீக்கி
சைவ ஒளி ஓங்கி பாண்டியநாடு
பார்புகழும் நாடாக மாற
என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும்"
என வேண்டி நின்றார்.
அவர் மனதில் தோன்றி வாழ்த்தி விடை தந்தார் வேத முதல்வர்.
பின்
பட்டத்து யானை மீதேறி நகர் வலம் வந்தார்
மக்களைத் தரிசிக்க.
பிறவித் துன்பத்தை நீக்கவல்ல
திருநீறு
உத்திராட்சம்
சடைமுடி ஆகிய மும்மையால் தங்கள் துயரமெல்லாம் தீரும்
என மக்கள் வணங்கி வாழ்த்தி மகிழ்ந்தனர்.
அதுநாள் வரை
கலகம் செய்த சமணர்களின்
செல்வாக்கு
முற்றிலும் மறைந்து வெண்ணீறு அணியும் நல்லொழுக்கம் நிறைந்த மாந்தர்களைக்
கொண்ட நாடாக
மாறத் தொடங்கியது பாண்டியநாடு.
ஓரிரு நாட்களில்
மாறியும் போனது.
மூர்த்தியார் புலனடக்கத்தில் உறுதியாய் இருந்தார்.
அதனால் பெண்ணாசை
அவருக்கு எழவே இல்லை. பிரம்மசாரியாகவே தவராஜ சீலராக
இருந்து வந்தார்.
அதனால்
ஐம்புலனாகிய உட்பகையையும்
சமணம் முதலான
வேற்றரசர்களின் புறப்பகையையும்
எளிதில் வென்றார்.
மூர்த்தியாரின் நல்லாட்சியில்
தமிழும் சைவமும்
ஓங்கிச் சிறந்தன.
நீண்டகாலம்
நல்லாட்சியை நடத்திய மூர்த்தியார்
கீர்த்திமிக்க
'மூர்த்தி நாயனார்' ஆக ஒருநாள்
இறை விருப்பப்படி
பாண்டியநாடு விடுத்து கயிலையில் இருக்கும் சிவநாடு
போய்ச் சேர்ந்தார்.
ஆயினும் இன்றும்
'அன்பேசிவம்' என்று
அடியார் மனங்களில்
ஆட்சி செய்து வருகிறார்.
ஆடி மாதம்
கார்த்திகை நட்சத்திரம் மூர்த்தி நாயனாரை பூசிக்கத் தக்கநாள்.
'மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்'
என்கிறார் சுந்தரர்.
திருச்சிற்றம்பலம்.
Leave a Comment