இறைவன் நைவேத்தியம் சாப்பிடுகிறாரா ?


 

குருகுலத்தில் எப்போதும் போல் குரு தன் சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு துறு துறு சீடனுக்கு  எப்போதும் குறுகுறுவென்று தன் குருவிடம் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அன்றும் அப்படி தான், குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்த சீடன், ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்தியம்  இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவனுக்கு நாம் படையலிடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால், அதை  நாம் பக்தர்களுக்கு  எப்படி பிரசாதமாக தர  முடியும்?” என்று கேட்டான்.

சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ,“நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

                                

                                                                                 

 

சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும், குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான்.  அன்றைய வகுப்பில் ,அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை  சைகையால் தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..

” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”என்றார்.

பதட்டம் அடைந்த சிஷ்யனும் , புத்தகத்தை காண்பித்து கூறினான்

“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”என்றான்.

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?.இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?.நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன்  ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்  பார்த்தான். குரு தொடர்ந்தார்,

“உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?.அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம்  உட்கொள்கிறோம். ”என்று விளக்கினார்.

இது நாள் வரை தனது அறியாமையை கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்த தனது பக்குவமற்ற தன்மையை எண்ணி வெட்கப்பட்டதுடன், பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்தியம்  செய்து முழுமையடைந்தான் சீடன்.



Leave a Comment