சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்... 15 ஆம்தேதி ஆனித்திருமஞ்சன தரிசனம்.....,


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்களில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தீட்சிதர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோவில் பொதுதீட்சிதர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா மற்றும் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைக்கேட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களில் திருவிழா, கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது. ஆகவே நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தலாம், சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கூறினார்.

 
இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை 7. 45 மணி அளவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கொடியேற்றினார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க சப் -கலெக்டர் மதுபாலன் தடை விதித்து உள்ளார். அதன்படி பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குணபாலன் விஜி தேவி உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை (7-ந் தேதி) வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 8-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 9-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 10-ந் தேதி வெள்ளி ரி‌ஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 11-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 12-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 13-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 15-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய பூஜையும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.



Leave a Comment