ஆசி தரும் அட்சதை


 

நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியாகட்டும் ,கோவில்களில் நடக்கும் மங்கள விழாவாகட்டும் 'அட்சதை' எனும் மங்களப் பொருளுக்கு முதன்மையான  ஒரு இடம் கட்டாயம் இருக்கும். அட்சதை இல்லாத வாழ்த்தே இருக்க முடியாது. இந்த அட்சதையானது மலர்களைவிட ஒரு படி மேலானது என்கிறார்கள் பெரியோர்கள்.

அட்சதை  இல்லாத இடத்தை நிரப்பத்தான் ,மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கப்படுகிறது. இதற்கான பெயர் காரணத்தை ஆராய்ந்துப் பார்க்கும் போது வடமொழியில் 'க்ஷதம்' என்றால் இடிப்பது. 'அக்ஷதம்' என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். 'முனை முறியாத அரிசி'யைத்தான் தான் அட்சதை என்று கூறுகிறோம்.

  அரிசியோடு தூய மஞ்சள், பசுநெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது என்பதால்,அதை தான் அட்சதை தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். அரிசிகென்று உள்ள தனித் தன்மையானது, அது  உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. ஆகையால் தான் அரிசியை கை தொட்டு யாரும் கொடுக்க மாட்டார்கள். தும்பைப்பூ போன்ற வெள்ளை அரிசியோடு மங்களகரமான மஞ்சள் நிறம், நெய்யும் சேர்ந்து மினுமினுப்போடு இருக்கும் அட்சதை, தேவதைகளின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

அட்சதையின்  தாத்பரியமானது, நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்,இவற்றோடு தூய்மையான நெய் சேரும் போது, அது தெய்வீகத் தன்மை பெறுகிறது. இதை தவிர வேறு ஒரு மகோன்னதமான காரணமும் சொல்லப்படுகிறது. அரிசிக்கு  சந்திரனின் அம்சம் இருப்பதால், குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய்யுடன்  சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுத்துக்கொள்ளச் சொல்வதே நல்லது. ஆன்றோர்களின் வாக்கின்படி, அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, நெய் தெய்வசக்தி. நம்முடைய வாழ்வானது,உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து இருக்கிறது என்பதே அட்சதை நமக்கு சொல்லும் கருத்து. ஹோமங்கள்முதலிய சுப நிகழ்வுகளோ  அல்லது சிரார்த்தமோ நடந்து  முடிந்த பிறகு, அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி இதைத் தூவுவார்கள்.இது தவிர நம் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவது நம் மரபு.  

ஆனால் இன்றைய துரித கதி வாழ்க்கை முறையில் ,திருமணங்களில் கூட , மணமக்களை யாரும் ஒவ்வொருவராகச் சென்று அட்சதை தூவி வாழ்த்த நேரமில்லாமல், எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.  இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம்.  இதை வீசி எறியாமல் ,மணமக்களின்  தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது.

சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளதற்கு பல சான்றுகளை பார்க்க முடியும். புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி அட்சதையை  தூவி வாழ்த்துவதால், எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம். மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அட்சதையின் மகத்துவம் உணர்ந்து அதை நல்ல முறையில் பயன்படுத்தி இறை அருள் பெறுவோம்.

 



Leave a Comment