மானக்கஞ்சாற நாயனார் புராணம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

ஆறு வகை 
ஆகம நூல்களைக்
கற்றுணந்தோர் 
புகழ்ந்து பாடும் ஊர் கஞ்சாறூர்.

சோழநாட்டில் 
கஞ்சாறூரில் கொம்புத்தேன் சாறும் கரும்புச்சாறும் 
நிறைந்து விளங்கியதால் கஞ்சாறூர் என காரணப்பெயர் பெற்றது.

கஞ்சாறுரில் 
வேளாளர் குலத்தில் தோன்றி
சேனாதிபதி 
பொறுப்பில் இருந்தவர் மானக்கஞ்சாறனார்.

இவருக்கு 
மான காந்தன் 
என்ற பெயரும் உண்டு.

சுந்தர மூர்த்தி நாயனாரின் சமகாலத்தவர்.
சிவ பக்தி மிக்கவர்.
சிவ பக்தர்களை வழிபடுவதும் 
அவர்களை உபசரிப்பதும் சிவபெருமானுக்கே செய்யும் உயர் வழிபாடு என்ற கொள்கையாளர்.

சிவ பக்தர்களின் பார்வையைக்
கவனித்த கணமே அவர்கள் மனதில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் கேட்காமலேயே 
வாரி வழங்கும் வள்ளல்.
மானக்கஞ்சாறனார்.

எல்லா பேறுகளையும் பெற்றிருந்த அவருக்கு பிள்ளைபேறு மட்டும் அமையவில்லை.

அவரும் மனைவியும் 
கடும் விரதம் பூண்டு கங்கைகொண்டானை 
சிலகாலம் தொழுது 
ஒரு பெண் மகவைப் பெற்றனர்.

அப்பெண் குழந்தை 
சிறிய வயதிலேயே
அறிவாற்றல் கொண்டதாகவும் ஒப்பில்லா அழகுடையதாகவும் 
சிவ பக்தையாகவும் விளங்கியது.

வளர வளர 
அழகும் 
அறிவும் 
பக்தியும் கூடின.

பருவ வயதை 
எட்டிய போது 
பாவாடை தாவணியில் கால்கொலுசு ஒலியோடு போட்டி போட்டுக்கொண்டு அவள் 
அன்னம் போல் நடந்ததை
ஊரே கண்டு வியந்தது.

முகப்பொலிவும் 
சுருள் சுருளாய் தலைமுடியும்
அவள் முகமொழியை
பேரழகியென பறைசாற்றின.

சேல் போன்ற விழியும் பால்போன்ற மொழியும் கொண்ட அவளைப் பார்த்து ஊரார் கண்படுமே என அவள் தாய் அஞ்சி சங்கு வெண்குழையணிந்த சங்கரனை 
வேண்டியபடி தவம் இருப்பாள்.

பருவ வயதில் 
செம்மணித் தீபம் போல கன்னிப்பெண்ணொருத்தி இருந்தால் 
திருமண வாய்ப்புகள் பல வரத்தானே செய்யும் ?

வந்தது.

மானக்கஞ்சாறனார்
ஒத்த குடியையும் அவரையொத்த  சேனாதிபதி பதவியில் இருந்தவருமான பெருமங்கலக்குடி ஏயர்கோன் கலிக்காமனார்
எனும் இளம் காளையிடமிருந்து மணமுடிக்கத் 
தூது வந்தது. 

கலிக்காமனாரும் திருநீலகண்டராகிய சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பு கொண்டவர்.

பெண் கேட்டு வந்த மூத்தவர்களை 
வரவேற்று உபசரித்து ஜோதிடரை அழைத்து கட்டம் பார்த்து சிவபிரானிடம் உள்ளத்திலேயே உரையாடி 
சம்மதம் பெற்று 
'சரி' என்றார் மானக்கஞ்சாறனார்.

திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக இருதரப்பிலும் 
ஊர் வியக்க
நடந்து கொண்டிருந்தன.

கஞ்சாறூரும் தெருக்களும் 
கஞ்சாறனார் வீடும் மங்கள இசை ஒலிக்க திருமணச் சூழல் 
களை கட்டியிருந்தது.

அது நேரம் 
ஒரு பழுத்த சிவபக்தர் 
வீட்டின் வாசலில் 
வந்து நின்றார்.

அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே 
எவரும் வணங்கி விழுவர். ஆசி பெறுவர்.
அத்தகையதோர் 
ஓங்காரத் தோற்றம்.

அவர் தன் 
திருச்சடைத் தலையில் ருத்ராட்ச மாலை 
அணிந்து இருந்தார்.

இரண்டு காதுகளிலும் பொருத்தமான குண்டலங்கள் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

அவரது திருமார்பில் பட்டிகை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மார்பில் 
அணியப் பெற்றிருந்த கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூல் பார்ப்போர் கண்களைப் பரவசப்படுத்தியது.

சூடியிருந்த
எலும்பு மாலை 
பய பக்தியை 
உண்டு பண்ணியது

நெற்றியும் திருமேனியும் திருநீறினைப் பெற்றிருந்தன.

அவர் கால்கள்
பஞ்ச முத்திரை 
பதித்த திருவடிகள்.

மொத்தத்தில் அவர் 
மிக உயர்ந்த விரதம் பூண்ட 
மகாவிரிதி வடிவில் இருந்தார்.

வாசலில் வந்து நின்ற 
மா விரத  முனிவரைக்
(மகா விரிதி) கண்ட மாத்திரத்தில் மானக்கஞ்சாறனார் சிவநாமம் உச்சரித்தபடி அருகில் சென்று 
அடி வணங்கி 
வீட்டிற்குள் அழைத்தார்.

அவரைச் 
சிவனாகவே பார்த்த 
மானக்கஞ்சாறனார் மலர்ந்த முகத்தோடு வீட்டில் அமர வைத்து அறுசுவை அமுதுக்கு மனைவியிடம் 
அன்போடு ஆணையிட்டார்.

"ஆமாம்...
இங்கு என்னப்பா விசேஷம்?
தெருவெங்கும் 
பூரண கும்பங்களும் தோரணங்களும் அலங்காரம் கொண்டு
விழாக்கோலம் பூண்டிருக்கிறதே ?

உன் வீடு 
மங்கள இசையோடு மனமயக்கம் செய்கிறதே !

"ஏதேனும் விழாவா....? "
விசாரித்தார்

"ஐயன்மீர்....!
தாங்கள் ஊருக்கு 
வந்ததே விசேஷம்.

என் வீட்டில் எழுந்தருளியிருப்பது 
என் பிறவிப் பயன்.
மூத்தோர் செய்த புண்ணியப் பலன்.

என் அன்புக்குரிய மகளுக்குத் திருமணம்.

அதற்காகவே 
இத்தனை அமர்க்களம் !"
என்று விவரித்து விட்டு

"என் மகளை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். அவள் 
புகுந்த வீட்டில்
திருமகளாய் திகழவேண்டும்." என்றவாரே வீட்டிற்குள் இருந்த மகளை 
'அம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தார் மானக்கஞ்சாறனார்.

இயற்கையாகவே 
அழகிய தமிழ் மகள். மணப்பெண் என்றால் கேட்கவா வேண்டும்!

கனக்கச்சித
அலங்காரத்துடன் 
பிறை நெற்றியில் 
சிறை படாமலிருந்த முடிக்கற்றையை ஒதுக்கியபடி வந்தாள் அந்த யவனராணி.

மாவிரத முனிவர் மணப்பெண்ணை அன்பொழுகப் பார்த்து ஆசிர்வதித்தார்.

அவள் 
திருப்பாதம் தொழுது எழுந்த போது 
நீண்ட முடியழகை 
வியந்து நோக்கி மானக்கஞ்சாறனாரிடம்,

"குழந்தையின் முடியழகு திருமுடி 
கொண்டோனுக்குப் பிடித்தமானது.

இவள் தலைமயிர் கொண்டு பஞ்சவடி (பூணூல்) அமைத்தால் பரமனே மகிழ்வார்.

எனக்கு 
அப்படி அணிய ஆசை" என்றார் ஆசை ஆசையாக
மாவிரத முனிவர்.

ஒரு கணம் கூட யோசிக்காத மானக்கஞ்சாறனார்
"என்ன தவம் செய்ததோ என் குலம் !
என் மகள் செய்த புண்ணியம் தான்...." என்றவாறு 
தன் உடைவாளை எடுத்து தனது அன்பு மகளின் அழகிய சுருள் கூந்தலை அடிவரை அறுத்து 
மகா தவசிக்குத் தரத் திரும்பினார்.

ஆனால் தவசி காணவில்லை.
எவர் கண்ணிலும் அகப்படவில்லை. மாயமாய் மறந்து போயிருந்தார்.

மா விரிதியாய் வந்து மாயமாய் மறைந்தவர்
மாணிக்க வண்ணன் அன்றி வேறு யார் 
இருக்க முடியும் ?

தீராத விளையாட்டுப் பிள்ளையான 
தில்லையம்பதியைத் தவிர வேறு யார் 
இருக்க முடியும் !

அக்கணத்திலேயே பேரொளியோடு 
பார்வதி தேவியோடு காட்சி தந்தார் சிவபிரான்.

"மானக்கஞ்சாறனாரே...!

உன் 
அகத்தில் அன்பு வடிவத்தில் அடக்கம் வாய்மொழியில் பண்பு கண்டு வியந்து போனேன்.

உனது அன்பின் திறமும் அறத்தின் உரமும் கண்டு உளம் மகிழ்ந்தேன்.

இனி எல்லாம் 
இனிதே நடக்கும்.

உரிய காலத்தில் 
நீ சிவபுரி வருவாயாக!"

என மானக்கஞ்சாறனாரை மட்டுமில்லாது 
அவரது வீட்டில் கூடி இருந்தவர்களையும் மாலை சூடக் காத்திருந்த மணமகளையும் வாழ்த்தி மறைந்தார் இறையனார்.

இரு கரங்களை 
உச்சியில் குவித்த வண்ணம் 
போற்றி போற்றி என போற்றி வணங்கினர் அத்தனை பேரும்.

மானக்கஞ்சாறனார் இறையருளால் இப்படித்தான் மானக்கஞ்சாற நாயனார் ஆனார்.

இறைவனின் அருட்கொடை
இத்தோடு முடியவில்லை.

மணப்பெண்ணின் அழகிய கூந்தல் அக்கணமே 
பேரழகுக் கூந்தலாக மாற பேரழகுப் பெட்டகமாக அவள் ஜொலித்தாள்.
சிவநாமம் ஜெபித்தாள்.

ஏதுமறியா 
மாப்பிள்ளை கலிக்காமனார் 
வெள்ளைப் புரவி 
ஏறியமர்ந்து உற்றார் உறவினர் புடைசூழ மணமகள் வீடு வந்தார்.

நடந்ததைக் கேட்டறிந்து வியப்பு மேலிட்டார்.

பரம்பொருளின் கருணையை 
நினைந்து நினைந்து வானை நோக்கி 'கருணைக்கடலே....'  என்று கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தார்.

பிறகென்ன.....
பரமபிதாவின் ஆசிபெற்ற மானக்கஞ்சாற நாயனாரின் 
மகளின் திருமணம் இனிது நடந்தது.

பெரியோர்களிடம் ஆசி பெற்ற மணமக்கள் 
ஊர் மக்கள் வாழ்த்த கலிக்காமனார்
ஊருக்குச் சென்று 
இனிய இல்வாழ்க்கையைத் தொடங்கினர்.

இறையருள் பெற்ற மணமகள்
பிறந்த வீடும் புகுந்த வீடும் பெருமை கொள்ளும் நல்வாழ்வைப் பெற்று 
வாழ்ந்து வரலானாள்.

பின்னாளில் கலிக்காமனாரும் 
ஒரு நாயன்மார் ஆக சிவனருள் பெற்றார் என்பது சிவாம்ச செய்தி.

'ஒரு மகள் கூந்தல் தன்னை 
வதுவை நாள் ஒருவருக்கீந்த பெருமையார் தம்மைப் போற்றும் பெருமையென் னளவிற்றாமே'
எனப் போற்றுகிறார் பெரியபுராணம் அருளிய சேக்கிழார் பெருமான்.

'மலைமலிந்த தோள் வள்ளல் 
மானற்கஞ்சாறன் அடியார்க்கு அடியேன்'
என வணங்குகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

திருச்சிற்றம்பலம்.



Leave a Comment