துர்க்கை சித்தர் அருளிய ஸ்ரீபுவனேஸ்வரி மாலை..... 

ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ

மந்திர ஒலியே மங்கள இசையே மன்மத பாணியளே
சந்திர சேகரி சண்முகன் தாயே சங்கரி சௌந்தரியே
இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

பந்தணை விரலி பர்வத தேவி பவபய ஹாரிணியே
சுந்தர ஈசன் சுருதியும் நீயே சுக சுப ரூபிணியே
சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன் சித்தியின் ஒருவடிவே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

சத்திய வடிவே சற்குண உருவே சதுர்மறை சந்நிதியே
நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நிலைத்திட வருபவளே
வைத்திய மணியே வறுமைகள் போக்க வையகம் வாழ்பவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வழிபடுவோர்க்கு வரம் தரும் தாயே வந்தருள் வேணியளே
பழிபடு துயரம் பகைதரும் தீமை பகைகளை புதைத்தவளே
விழிகளின் அருளால் வினைகளை விரட்ட விளக்கொளி ஆனவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

அறுபத்து நான்கு கலைகளும் ஆனாய் அன்னையும் நீயானாய்
கருவிடு அரக்கர் கண் பகைகடிந்த கனிமொழி நீயானாய்
குறுகலர் தம்மை குறுந்தடிப் பாய்ச்சும் குணமணி நீயானாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

வல்லவள் நீதான் வஞ்சியும் நீதான் வசந்தமும் நீயே தான்
நல்லவள் நீதான் நன்னிதி நீதான் நற்சுனை நீயே தான்
சொல்பவள் நீதான் சொர்க்கமும் நீதான்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

நாற்பத்து மூன்று கோணத்தின் நடுவே நான்மறை நீ நவின்றாய் 
நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய் நோய்களை நீ தீர்ப்பாய்
கார்மழை ஆனாய் காவலும் ஆனாய் காத்திட நீ வந்தாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே ஜெய ஜெய ஸ்ரீங்காரீ
ஜெய ஜெய மாயா மங்கள ரூபி ஜெய ஜெய ஹ்ரீங்காரீ
ஜெய ஜெய துர்கா சண்டிகை காளி ஜெய ஜெய க்லீங்காரீ
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே

தீன தயாபரீ பூர்ண கடாக்ஷி காஞ்சி காமாக்ஷி நமோ நமோ
சர்வ யந்த்ராத்மிகே சர்வ தந்த்ராத்மிகே சர்வ மந்த்ராத்மிகே நமோ நமோ
மாதங்க கன்யா மதுர மீனாக்ஷி பாண்டியராஜ புத்ரீ 
சுந்தர ஹ்ருதயே சோமசேகரீ திரிபுவன ஜனனீ மனோன்மணி

ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ

Leave a Comment