கண்ணப்ப நாயனார் புராணம் பாகம் 1
- "மாரி மைந்தன்" சிவராமன்
நாயன்மார்களில் வித்தியாசமானவர் கண்ணப்ப நாயனார்.
காலத்தால் மிகவும் முற்பட்டவர்
கண்ணப்ப நாயனார்.
அதனால்தான் அவரது இறையன்பை
மெச்சி வணங்கி நாயன்மார்களும் சித்தர்களில் பட்டினத்தாரும் ஆதிசங்கரரும்
புகழ்ந்து பாடியுள்ளனர்.
அந்நாளைய
பொருப்பி நாட்டில்
உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு வேடுவ மக்களை ஆண்டு வந்தான் நாகன் என்பான்.
வேடுவர் குலம்
என்பதால் வேட்டையாடுதல்
பிரதான தொழில்.
ஒரு சிறு நாடு.
ஒட்டி ஓர் அடர் காடு. அடுத்து ஓர் உயர்ந்த மலை.
இடையில் ஓர் ஆறு.
இவைதான்
அவர்கள் வாழ்விடம். வாழ்வாதாரப் பிழைப்பிடம்.
மரபுப்படி
வேட்டையும்
மாமிசமும்
கள்ளுமுமாய்
வாழ்வைக் கொண்டிருந்த
வேடுவர் குல அரசன் நாகனின் நாயகியின் பெயர் தத்தை.
வீரமும் தீரமும் திடகாத்திரமும்
கொண்டிருந்த இருவருக்கும் ஏனோ
பல்லாண்டு கால தாம்பத்தியத்தில்
பிள்ளை வாய்க்கவில்லை.
பாராத மருத்துவம் இல்லை.
கேளாத
மூத்தோர் இல்லை.
ஏதேதோ செய்து பார்த்தும் பலன் கிட்டாததால் எல்லாம் செய்ய வல்ல மலைக் கடவுளான
முருகப் பெருமானை வேண்டி நின்றார் முருக பக்தர்கள் இருவரும்.
கேட்காமலேயே அருளவல்ல
குறிஞ்சி நில
முருகப் பெருமான் நாகனுக்கும் தத்தைக்கும் பலகால வேண்டுதலுக்குச் செவி மடுத்து பிள்ளைப்பேறு அளித்தார்.
யானை ஒத்த
கரிய நிறத்தில்
யாரையும் கவரும்
அழகில் ஆண்பிள்ளை.
தாய் தத்தை முதன்முதலாக குழந்தையைத்
தூக்கிய போது
'திண்' என்று இருந்ததால் 'திண்ணனார்' எனப் பெயரிட்டார் பெற்றோர்.
திண்ணனார்
உரிய பருவத்தில்
வில் பயிற்சி முதற்கொண்டு வேட்டையாடும்
பயிற்சி அனைத்தும் கசடறப் பயின்றார்.
காலம் நகர்ந்தது.
நாகன் நடை தளர்ந்தான். மகன் திண்ணனார் அடுத்த தலைவராகத் தயாராக இருந்தார்.
ஊர் ஜனங்கள்
ஒருநாள் கூடி
நாகனிடம் ஒரு வேண்டுதல் வைத்தனர்.
"வேடுவர் குல அரசரே...!
எங்கள் நாகரே...!
நீண்ட காலமாக
நம் வேடுவப் படை வேட்டையாடச்
செல்லாமல் இருந்ததால் மலைச்சாரலில் விளையும் பயிர்களையும் உயிர்களையும் காட்டுவிலங்குகள்
துவம்சம் செய்து விடுகின்றன.
இனியும்
தாமதிக்காமல் வேட்டையாடிட வேண்டும்."
தளர்ந்திருந்த நாகன் மலர்ந்த முகத்தோடு 'மகன் திண்ணனாரே
இனி உங்கள் தலைவர்' என முடிசூட்டினான் மாபெரும் விழா எடுத்து.
மறுநாளே
திண்ணனாரின் தலைமையில் வேட்டுவர்களும்
வேட்டை நாய்களும் கொலைக் கருவிகளோடு திண்ணனாரின்
கன்னி வேட்டையை மின்னல் வேகத்தில் தொடங்கினர்.
திண்ணனாருக்குத் துணையாக
கண்துஞ்சா 'நாணன்'
காடு அஞ்சா 'காடன்'
என்ற
இரு வீர வேடுவர்கள்
உடன் வந்தனர்.
திண்ணனாரின்
வில் திறன்
வேடுவரை மட்டுமல்ல வேட்டை நாய்களையும் வன விலங்குகளையும் வியக்க வைத்தது.
காட்டுப் பன்றி
மான், கரடி
காட்டெருமை
யானை, புலியென
காட்டு விலங்குகள் திண்ணனாரின் வில்லுக்குத்
தப்ப முடியாமல்
தரையில் சாய்ந்து மாண்டன.
குல தர்மப்படி திண்ணனாரின் வில்லம்பு
குட்டி விலங்குகளையோ பெண் விலங்கினங்களையோ கர்ப்பமுற்ற விலங்குகளையோ
பதம் பார்க்கவில்லை.
ஓரிடத்தில் வேடுவர் விரித்த வலையில் தப்பித்தக் காட்டுப்பன்றி காடதிரும் உறுமலோடு
புயல் வேகத்தில்
மலை நோக்கிப்
பாய்ந்தோடியது.
திண்ணனார்
கண்களில்
சட்டெனப் பட்டது
அந்தக் காட்டுப் பன்றி.
துரத்தினார்.
வேகமாகத் துரத்தினார். அதிவேகமாகத் துரத்தினார்.
நாணனும் காடனும்
களைப்புறும் அளவிற்கு துரத்தி ஓடினர் மூவரும்.
கடைசியில்
மலைக்கும் காட்டுக்கும் இடையில்
இரு தேக்கு மரத்திற்கு இடையில்
மாட்டிய காட்டுப்பன்றியை வெட்டி வீழ்த்தினார் திண்ணனார்.
நாணனும் காடனும்
எடுத்த தாகத்திற்கு தண்ணீர் குடித்துவிட்டு எடுக்கும் பசிக்கு பன்றியைக் கறியாக்கி உண்டுவிட்டு
வேட்டை தொடரலாம்
என வேண்டினர்.
"தண்ணீருக்கு எங்கே செல்வது?" என்று திண்ணனார் கேட்க
அருகில்
அரை காத தூரத்தில்
பொன்முகலி ஆறு
என்று ஒன்றிருப்பதாகச் சொன்னான் அனுபவசாலியான நாணன்.
இருவரையும்
பன்றியைத் தூக்கி
வரச் சொல்லிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தார் கொஞ்சம் கூட களைப்படையா திண்ணனார்.
ஆற்றங்கரையில்
நீர் அருந்தும் போது திண்ணனாரின் கண்களை ஈர்த்தது மிக அருகில் இருந்த பேரழகு கொண்ட மாமலை.
"இது என்ன மலை?"
என்று கேட்டார்.
"இதுதான்
காளஹஸ்தி மலை.
மலை உச்சியில் குடுமியுடன் கூடிய இறைவன் இருக்கிறார். அவரைக் 'குடுமித் தேவர்' என்பார்கள்"
என்றான் நாணன்.
திண்ணனாருக்கு அப்போதெல்லாம் இறைவனைப் பற்றியோ இறைவழிபாட்டைப் பற்றியோ
ஏதும் தெரியாது.
அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'இரை'.. விலங்குகளின் மாமிசம்.
திண்ணனாரின் கண்களை ஈர்த்த
காளஹஸ்தி மலை இப்போது அவரது
மனத்தை இழுத்தது.
"நீ பன்றியைப் பதமாய் சமைத்து வை" என்று காடனிடம் சொல்லிவிட்டு நாணனை இழுத்துக்கொண்டு மலையை
நோக்கி நடந்தார்
மலை போன்ற மார்பு கொண்ட திண்ணனார்.
மலை அடிவாரம் வரை திண்ணனார்
விரைந்து நடந்தார்.
அப்படி ஈர்த்தது
அந்த மலை.
மலை ஏறத்
தொடங்கிய நொடியிலேயே திண்ணனாரின் மனநிலை
அறிவுநிலை
ஆற்றல் நிலை
அடியோடு மாறத் தொடங்கியது.
வேடனாக வந்து
குறப் பெண்ணை மணமுடித்த
வேலவனின் கருணையால் அவதரித்த வேடுவன் அல்லவா?
எப்போதும்
வேடன் கோலம் பூண்டிருக்கும்
திண்ணப்பர் அல்லவா ?
முன் எப்போதும் சந்தித்திராத
ஓர் ஏகாந்த அலை
அவருள் பாய்ந்தது.
அவ்வலையினால்
ஏற்பட்ட அதிர்வுகள் அவரை ஆட்கொண்டன.
முற்பிறவிப் பயனோ என்னவோ
இதுவரை பெற்றிராத குதூகலத்துடன்
மன அமைதியுடன்
மலை ஏறினார்
குடுமிச் சாமியைத் தரிசிக்க.
ஓரிடத்தில்
தோள்களில் இருந்த சுமைகளும்
இன்னொரு கட்டத்தில் மனதில் இருந்த பாரங்களும்
குறைந்த மாதிரி உள்ளுணர்வு உண்டானது.
ஓர் இடத்தை கடக்கும் போது ஐந்து துந்துபிகளின் ஓசை
கடல் அலைபோல் அவருக்குக் கேட்டது.
அதுவரை உடுக்கை பம்பை, சிறுபறை ஓசைகளை மட்டும் கேட்டிருந்த திண்ணனார்
"இது என்ன ஓசை?"
என்று நாதனிடம்
கேட்டார் ஆர்வத்துடன்.
அது இறை அழைப்பு
என அறியாத நாணன் எந்த ஓசையும் அவனுக்குக் கேட்காததால் 'மலைத்தேன் வண்டுகளின் சத்தம்' எனக் கூறி சமாளித்தான்.
ஒருவழியாக
குடுமித் தேவரின் இருப்பிடத்தை அடைந்தனர் இருவரும்.
சிவலிங்கமாகக் காட்சியளித்த
குடுமித் தேவரைப்
பார்த்த மாத்திரத்தில் திண்ணனார்
தடுமாறிப் போனார்.
உயர்ந்த அன்பின் அதிர்வலைகள் அவரைத் திக்குமுக்காட வைத்தன.
சிவலிங்கத்தின்
அருகில் ஓடினார்.
ஆரத் தழுவினார். முத்தமிட்டார்.
அக மேகம் குளிர
கண்ணீர் பொழிந்தார்.
இறைவனை விட்டு
ஒரு கணமும்
பிரியாதிருக்கும்
மனநிலைக்கு
மறுகணமே வந்துவிட்டார்.
'ஐயோ...
யார் துணையுமின்றி தனியாக இருக்கிறாரே..! காட்டு விலங்குகள் இரவில் வந்து
துன்பம் தராதோ' என்றெல்லாம் அஞ்சினார்.
சிவலிங்கத்தின்
மீதும் சுற்றியும்
மலர்கள் தூவப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன்
"யார் செய்த வேலை இது?" என்று வினவினார்.
"நான் ஒருமுறை
உனது தந்தை நாகனுடன் இங்கு வந்தேன்.
அப்போது ஒரு பிராமணர் லிங்கத்தின் தலையில்
நீர் வார்த்து
இலைகளையும் பூக்களையும் சூடி அர்ச்சித்துக் கும்பிடக் கண்டேன் "என்றான் நாணன்.
அப்போதுதான் திண்ணனாருக்கு
நினைவுக்கு வந்தது
'இறையனாருக்குப் பசிக்குமே!'
உண்மையில்
தன் பசியை
மறந்திருந்தார்
திண்ணனார்.
அந்த அளவிற்கு சிவனாருடன் லயித்திருந்தார்.
"வா... உணவு எடுத்து வரலாம்"
நாணனை
அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக
மலை இறங்கினார்.
ஆற்றங்கரையில் பக்குவமாய்
பன்றிக் கறி சமைத்துக் காத்திருந்தான் காடன்.
ஆங்கிருந்த தேக்குமர இலை பறித்தார்
திண்ணனார்.
மாமிசத் துண்டுகளை ஒவ்வொன்றாய்
பற்களில் அதுக்கிப்
பதம் பார்த்து ருசித்து அவற்றைப்
பிரித்தெடுத்து
இலையில் வைத்தார்.
தானும் தின்னாமல் தங்களையும்
தின்ன விடாமல் முற்றிலும் மாறிவிட்ட
திண்ணனாரை
நாணனும் காடனும் திட்டாத குறைதான்.
"திண்ணனாரே...!
நீங்கள் எங்கள் அரசர். ஊர் திரும்ப வேண்டாமா?"என்று காடன் கேட்டுக் கொண்டிருந்த போதே பதிலேதும் சொல்லாமல் மலை நோக்கி தனித்து நடக்க ஆரம்பித்தார் திண்ணனார்.
ஒருகையில்
பன்றி இறைச்சி.
மறு கையில் வில்
கணை சகிதமாக.
பின்னர்
நாணன்
நடந்ததைச் சொல்ல
மனம் நொந்த காடன்
'தெய்வப் பித்து தலைக்கேறி விட்டது' என்று தலையில் அடித்தபடி நாணனுடன் ஊருக்குப் புறப்பட்டான்.
திண்ணனார்
தன்னை
உடும்புப் பிடியாய்
பிடித்து விட்ட
குடுமித் தேவரைத் தரிசிக்க
மலை ஏறத்
தொடங்கினார்
ஒவ்வொரு அடியும் சிவனடியை
நெருங்கும் அடி என்று அவர் அறிந்தார் இல்லை.
வழியில்
பூத்திருந்த பூக்களையும் துளிர்த்திருந்த இலைகளையும்
பறித்து தன் தலையில்
செருகிக் கொண்டார்.
ஒரு சிற்றருவியில்
சிதறிக் கொண்டிருந்த நீரைக் கைஏந்தி
தன் வாய் நிறைக்க வைத்துக் கொண்டார்.
சிவலிங்கம் இருக்கும் இடம் வந்ததும்
நாணன் சொல்லியிருந்த பிராமணர் செய்த அபிஷேகத்தைத்
தனக்குத்
தெரிந்த அளவில்
செய்ய ஆரம்பித்தார்.
முதலில்
நாதர் முடிமேல் இருந்த பழைய மலர்களை செருப்பணிந்த கால்களால்
கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த மலர்களை கால்களால்
சற்று தூரம்
தள்ளி விட்டார்.
வாய் நீரை உமிழ்ந்து லிங்கத்தைச் சுத்தப்படுத்தினார்.
தன் தலையில்
செருகி இருந்த மலர்களையும் இலைகளையும் சிவலிங்கம்
மேல் வைத்து
அழகு பார்த்தார்.
கடைசியாக
தேக்கு மர இலையில் வைத்துக்
கொண்டு வந்திருந்த
பன்றி மாமிசத்தைப் படையலாக
வைத்து நின்றார்.
அனிச்சையாய்
கை கூப்பினார்.
அப்படியே
லிங்க ரூபத்தை
ரசித்திருந்தவர்
இரவு நேரம் வந்துவிட்டதை உணர்ந்து இறைவன் தனித்திருக்க வேண்டாம் எனக் கருதி விலங்குகள் நெருங்காதிருக்கும் வண்ணம்
சற்று தள்ளி நின்று வில்லோடு
காவல் காக்க ஆரம்பித்தார்.
இரவு முழுதும்
ஒரு நொடி கூட கண்ணிமைக்காமல் காவல் காத்தார் திண்ணனார்.
(கண்ணப்ப நாயனார் புராணம் -தொடரும்)
Leave a Comment