அரம்பையர் அப்சரப் பெண்கள் போற்றும் ஆனி மாதம் 


நடைமுறையில் உள்ள மாதங்களின் பெயர் வரிசையில் மூன்றாவது மாதமாகத்திகழ்வது ஆனி மாதம் ஆகும். இதனை வடமொழியில் ஜேஷ்டா மாதம் என்பர். இதற்கு தலை மாதம் அல்லது முதல் மாதம் என்பது பொருள். ஒரு காலத்தில் ஆனி மாதம் முதல் மாதமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனி மாத பௌர்ணமியோடு இணைந்து வரும் நட்சத்திரம் கேட்டையாகும். கேட்டைக்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்பது பெயராகும்.

மாதங்களை அம்மாதத்தில் பௌர்ணமியோடு கூடிவரும் நட்சத்திரங்களின் பெயரால் அழைப்பது பண்டை வழக்கம். எடுத்துக்காட்டாக, சித்திரை மாதத்தில் பௌர்ணமியோடு சித்திரா நட்சத்திரம் சேர்ந்து வருவதால் அதை சைத்ர மதம் என்று அழைக்கிறோம். அதுபோல் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் பௌர்ணமியோடு கூடி வரும். அதை மாக மாதம் என்றழைக்கிறோம். ஜேஷ்டா நட்சத்திரத்தோடு பௌர்ணமி வரும் மாதம் ஜேஷ்டா மாதம் ஆகும். கேட்டையை முதல் நட்சத்திரமாகக் கொண்டு கணக்கிடும் வழக்கம் அந்நாளில் இருந்ததென்பர்.

இம்மாதம் அருணகிரிநாதர் சுக வடிவாகி முருகனின் தோளில் அமர்ந்து திருவகுப்புகளைப் பாடிய மாதமாகும். அதையொட்டி ஆனிமாத பௌர்ணமியை அவருடைய திருநட்சத்திரமாகவும் குருபூஜை நாளாகவும் கொண்டாடி வருகின்றோம். ஆனி மாதத்தில் கோடை வெப்பம் தணிந்துவிடும். இலைகளை உதிர்த்துவிட்ட தாவரங்கள் மெல்ல மெல்ல மீண்டும் தழைத்து மலர்கள் பூத்துக் குலுங்கும் நேரமாகும். மலர்களின் அதிக அளவு மலர்களை இம்மாதத்தில் காணலாம்.

அழகிய மலர் வனங்களின் மீது கொண்ட காதலால் அரம்பையர் அப்சரப் பெண்கள் பூமிக்கு வருகின்றனர். இங்கு விளையாடிக் களிக்கின்றனர். திருதியை நாளில் அவர்கள் தேவியை மலர் வனத்தின் இடையே அமர்த்தி வழிபடுவர். அது அப்சர கெளரி விரதம் என்று அழைக்கப்படுகிறது.அரம்பையர் சூழ வந்து வந்திருக்க அபயமும் அருளும் பொருளும் தரும் அபிராமி நாயகியைப் போற்றி மகிழலாம். அரம்பா திருதியை (அ) அப்சர கெளரி விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் வாழ்வில் வளமும், நலமும் பெற்று வாழ்வர்



Leave a Comment