தெரிந்த பொருட்களும் தெரியாத தத்துவங்களும்


நாம்  தெரிந்தவர் யாரையாவது பார்க்கப் போகும் போது வெறுங்கையுடன் போவது இல்லை. நம் சக்திக்கு ஏற்றவாறு, எதையாவது வாங்கிக்கொ ண்டு தான் போவோம். அது மரியாதை நிமித்தம் காரணமாகவோ அல்லது நம்முடைய கவுரவத்திற்காகவோ  வெறுங்கையுடன் போவது நம் பண்பாடு இல்லை. சாதாரணமான மனிதர்களுக்கே நாம் இவ்வளவு யோசிக்கும் போது, இவ்வுலகையும், நம்மையும் படைத்துக் காக்கும் இறைவனை பார்க்க கோயிலுக்கு செல்லும்போது, அத்தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவோ, அர்ச்சனை செய்யவோ  பூஜை பொருட்கள் வாங்கிச்செல்வோம். அதற்கான காரண காரியத்தைக் கேட்டால், யாருக்கும் தெரியாது. வழிவழியாக நம் பெரியவர்கள் செய்து வந்ததை நாமும் அர்த்தமும், காரணமும் தெரியாமல் பின்பற்றி கொண்டிருக்கிறோம் .

சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், அதன் பின் உள்ள தத்துவத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

 

தேங்காய்

பருப்பில்லாத கல்யாணமா ? என்றொரு சொல் வழக்கொன்று உண்டு. அது போல் தேங்காய் இல்லாமல் நம் இந்து மதத்தில் எந்த ஒரு கோவில் கைங்கரியமும், சுப நிகழ்வுகளும் நடக்க முடியாது. கோவில்களுக்கு நாம் தேங்காயை அர்ப்பணிப்பதன் தத்துவமாவது ,தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

அதுபோல்  நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும். அடுத்த முறை நாம் கோவிலுக்கு தேங்காயை எடுத்து  வைக்கும் போது, இந்த தாத்பரியத்தை நினைத்துப் பார்த்து இறைவனிடம் அகந்தை அற்ற மனதை வேண்டுவோம்.

 

விபூதி (திருநீறு)

புனிதமான நம் இந்து மத சின்னமான திருநீறு, நாளை ஒரு நாள் நாமும் இது போல் பிடி சாம்பல் ஆகப்போகிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆக வேண்டும். ஆதலால்  வாழும் போது நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

 

வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கும் பூஜை பொருட்களில் முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது. வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் மற்ற பழங்களின் விதையை போல் அது முளைக்காது. அதைப் போலவே நாமும், எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என இறைவனின் அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

 

அகல் விளக்கு  

எவ்வளவு விஞ்ஞானம் வளர்த்தாலும், மின்சாரத்தினால் ஏற்றப்படக்கூடிய ஒரு  விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஏற்ற முடியாது. ஆனால் மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கினைக் கொண்டு  மற்றொரு அகல் விளக்கை  ஏற்றி இருள் சூழ்ந்த இடத்தை ஒளிர வைக்க முடியும்.

அதுபோல் நாமும் சுயநலமற்று இருக்க வேண்டும் என்று உணர்த்தவே அகல் விளக்கை ஏற்றுகிறோம். நாம்  வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவது அகல் விளக்கு தத்துவம்.

 

இறைவன் நம்மிடம் , இதைக்  கொடு , அதை செய் என்று எதிர்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு இலையை கிள்ளிப் போட்டு என்னை பூஜித்தாலே நான் மகிழ்வேன் என்றார் கிருஷ்ணர். ஆகவே நாமும்  இறைவனுக்கு நம்முடைய தூய்மையான பக்தியை பிரதானமாகக் கொண்டு இந்த எளிமையான பூஜை பொருட்கள் மூலம் இறை அருள் பெற முடியும் .



Leave a Comment