தசாவதாரமும் மனிதனின் வாழ்க்கையும்


 

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகை  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்தி பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மை பெருமைக் கொள்ள வைக்கும் .

 

மச்ச அவதாரம்:  

தாயின் வயிற்றிலிருந்து  அவளின் உதிரத்தில் நீந்தி பிறப்பது... 

இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு  மீன்  என்று அர்த்தம் .கிருத யுகத்தில்  படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து, குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட ,உலகில் பிரளயம் ஏற்பட்டது. சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார் மச்சமூர்த்தி .

கூர்ம அவதாரம்:

குழந்தை மூன்றாம் மாதம் கவிழ்ந்து , பின் தலை தூக்கி பார்ப்பது...

 கிருத யுகத்தில் நடைபெற்ற இது , திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.

அமிர்தத்தை எடுக்க  மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை  கடைய .அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. தேவர்களுக்கு உதவும் பொருட்டு ,திருமால் ஆமையாக கூர்ம அவதாரம்  எடுத்து மலையைத் தாங்கி கடலையை கடைய துணைபுரிந்தார்.

 வராக அவதாரம்:

ஆறாம் மாதம்  குழந்தை முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...

 திருமாலின் மூன்றாவது அவதாரமான இது ,  கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.

 இரண்யாட்சன்  என்ற அரக்கன் , பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து வைக்க , பிம்மாதிதேவர்களின்  வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய திருமால் , வெள்ளை நிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள்  நடந்த கடும் போரில் ,வாரகமூர்த்தி இரண்யாட்சனை வென்று  பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.

நரசிம்ம அவதாரம்:

எட்டாம் மாதம் உட்கார ஆரம்பிக்கும் குழந்தை தன்  கையில் கிடைத்ததை எல்லாம் கிழிப்பது...

இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இது கிருத யுகத்தில் நடைபெற்றது. நரன் என்றால் மனிதன்.  சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார்.

இரண்யகசிபுவிடம் இருந்து தேவர்களை காப்பற்றவும் , தன் பக்தன் பிரகலாதனுக்காகவும் தூணிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

 வாமண அவதாரம்:

ஒரு வயதில் குழந்தை அடிமேல் அடி வைத்து நடப்பது...

திரேதா யுகத்தில் நடைபெற்ற இது ,   திருமாலின் ஐந்தாவது அவதாரமாக வைணவர்களால் போற்றப்படுகிறது.

பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.

 பரசுராம அவதாரம்:

வளர்ந்த பின் ஒரு மனிதன் , தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...

 திரேதா யுகத்தில் நடைபெற்ற  திருமாலின் ஆறாவது அவதாரமான இதில் , சங்கு சக்ரதாரி , கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமாக விளங்கிய பரசுராமர் .

ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவரான இவர் ,துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார்.

ராம அவதாரம்:

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...

இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது.

ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படும் இந்த அவதாரத்தில்  ,  அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் இறைவன் கொள்ளப்படுகிறார்.

 பலராம அவதாரம்:

இல்லறத்தில் நுழைந்தப் பின்  உடன் பிறந்தோர், சுற்றத்தார், மற்றும் உலகோர்க்கு கடமையாற்றுவது...

இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இந்த அவதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே பலராமனாக அவதரித்தாகக் நம்பிக்கை .

 கிருஷ்ண அவதாரம்:

முதுமையில் இவ்வுலக பற்றற்று இறைவனை தன்னுள் உணர்ந்து அடுத்த சந்ததிக்கு அதை உபதேசித்து வழிகாட்டுவது...

 துவார யுகத்தில் நடைபெற்ற திருமாலின் ஒன்பதாவது அவதாரம் இது . ஆறில் இருந்து அறுபது வரை   எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம்.

 கல்கி அவதாரம்:

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் கண்டு , இறுதியில் முக்தி பெறுவது...

இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின் இந்த அவதாரம் நிகழும் என்று நம்பப்படுகிறது.

இறைவனின் பத்து அவதாரங்களையும்  நம் வாழ்க்கைக்கு  வழிகாட்டும் வேதங்களாக நாம் உணர வேண்டும் . இறை பக்தியோடு நம் வாழ்க்கையை மேம்படுத்துவோம் .

 



Leave a Comment