விபூதியை நாமே செய்வது எப்படி? 


இந்த உடலை சுத்தப்படுத்தி, அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றது திருநீறு. பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது. மஹா பஸ்பமாக கருதப்படும் பரமாத்மாவும், விபூதி எனப்படும் திருநீறு பஸ்மமும் முற்றும் முடிந்த நிலையில் ஒன்றாக கருதப்படுவதால், விபூதி அணிந்து இறைக்காட்சியையும் பெறுவது சாத்தியமே என்று நம் ஆசார்யர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பல்வேறு முறைகளில் திருநீறு தயாரிக்கப்பட்டாலும், வீடுகளில் நாமே தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம். காராம் பசுவின் சாணம் பூமியில் விழுவதற்கு முன்னர் பிடித்து, (அவ்வாறு இயலாவிடில், துணியை தரையில் விரித்து வைத்தும் பிடித்துக்கொள்ளலாம்) அதன் கோமியத்தை விட்டு கலக்கி, சிறு உருண்டைகளாக மாற்றி காய வைத்து, தூசிகள் இல்லாது எடுத்து வைத்து கொள்ளவேண்டும். 

அந்த உருண்டைகளை ‘திரிபுர ஸம்ஹார காலமான’ கார்த்திகை மாத பெளர்ணமியில் வரும் கிருத்திகை நட்சத்திரமான ‘கார்த்திகை தீபம்’ நாளில், நெருப்பில் இடவேண்டும். பாதுகாப்பான இடத்தில் அது நன்றாக எரிந்து தானாகவே ஆறும் வரையில் சில காலம் விடவேண்டும்.

மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து, அந்த சாம்பலானது நிறம் மாறும் வரையில் விட்டுவிட்டு, தை மாதத்தில் அந்த சாம்பலை கிளறி விடவேண்டும். அதன் பின்னர், மாசி மாதத்தில் வரக்கூடிய ‘மஹா சிவராத்திரி’ அன்று காலையில், அந்தச் சாம்பலை எடுத்து, ஒரு பானையின் வாயில் சுத்தமான, மெல்லிய துணியை கட்டி, சாம்பலை துணியின் மேல் போட்டு, கைகளால் தேய்க்க வேண்டும்.

அதன்மூலம், மென்மையான துகள்கள் திருநீறாக பானைக்குள் சேரும். அதை எடுத்து சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் செய்வித்த பின்னர் வீட்டுக்கு எடுத்து வந்து, அதை உபயோகப் படுத்துவது தான் மேன்மையான முறையாகும். 

இந்த முறையை தவிர சாந்திக பஸ்மம், காமத பஸ்மம், பவுஷ்டிக பஸ்மம் ஆகிய சாஸ்திர ரீதியாக தயாரிக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. (மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலாவிட்டால், சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்). இப்படி செய்தால் தான் உண்மையான திருநீறு நமக்கு கிடைக்கும்.
 



Leave a Comment